சிறப்பு கட்டுரை
தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்
News
வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்

வில்லுப்பாட்டுக் கலைஞர் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் இன்று காலமானார். அவரை நினைவுகூரும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு சக்தி விகடன் இதழில் வெளியான கட்டுரை இதோ... இதில் வாசகர்களுடன் அவர் நிகழ்த்திய கலந்துரையாடல் இடம்பெற்றிருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், காந்தி, பாரதி என பலப்பல மகான்களின் படங்களும், சிலைகளும் அணிவகுத்திருந்த 'மகாலட்சுமி இல்லம்’ என்னும் அந்த இல்லத்துக்குள் நுழைந்தபோது, ஒரு கோயிலுக்குள் நுழைகிற உணர்வே ஏற்பட்டது. 'வில்லிசைக் கலைஞர்’ கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் நிகழ்த்திய கச்சேரிகளின் புகைப்படங்களும், அவர் பெற்ற விருதுகளும் அலமாரிகளை அலங்கரித்தன.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர். மகா பெரியவாளின் பரம பக்தர். பரமாச்சார்யாளின் வாக்கை வேதவாக்காகக் கடைப்பிடிப்பவர். ராமகிருஷ்ண மடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சுவாமி ரங்கநாதானந்தாவிடம்  தீட்சை பெற்றவர். பேசத் தொடங்கினால் இயல், இசை, நாடகம் என மூன்றும் கலந்து, இனியதொரு தேனருவியாய்க் கொட்டுகிறது தமிழ். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் பயின்றவர். பாரம்பரியக் கலையான வில்லுப்பாட்டின் மூலமாக தெய்வப்பற்று, தேசப்பற்று ஆகியவற்றை ஊர் ஊராகச் சென்று ஜனங்களுக்கு ஊட்டியவர், தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்... என இவரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என இவரது குடும்பம், அழகிய பல்கலைக்கழகம்.

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்
வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம்

? ''வில்லுப்பாட்டு எப்படி ஆரம்பித்தது?'' என்கிற வாசகர் கிருஷ்ணனின் கேள்வியில் ஆரம்பித்தது 'சக்தி சங்கமம்’ கலந்துரையாடல்.

''மாணிக்கவாசகரின் காலத்துக்கு முன்பு திருநெல்வேலியை பாளையக்காரர்கள் ஆண்டார்கள். பிறகு, ஜமீன் ஆட்சி. அதை யடுத்து, வெள்ளையர்களின் ஆட்சி.

பாளையக்காரர்களின் ஆட்சியின்போது, ஒரு ராஜா வேட்டைக் குச் சென்றார். வேட்டை முடிந்து வந்து ஓரிடத்தில் அமர்ந்தவர், திடீரென அழத் தொடங்கிவிட்டார். மந்திரி அவரிடம், 'ஏன் ராஜா அழுகிறீர்கள்? மான், புலி இப்படிப் பல மிருகங்களையும் வீர தீரத்துடன் வேட்டையாடினீர்களே! அப்புறமும் ஏன் அழுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு, 'வேட்டையை ஒழுங்காக ஆடினதால்தான் அழுகிறேன்’ என்றாராம் ராஜா.

'நான் கொன்ற உயிர்களை மீண்டும் என்னால் உயிர்ப்பித்து எழுப்ப முடியுமா? கொன்று ஒழிப்பது ஒரு வெற்றியா? வீரம் என்ற பெயரில் பாவம் செய்துவிட்டேனே!’ என்று வருந்தினார் மன்னர்.

மந்திரிக்கு அழகு நீதியை உரைத்தல் அல்லவா? அவர் அந்தக் காலத்து உண்மையான மந்திரி! அதனால் நீதியை உரைத்தார். அவர் மன்னரை நோக்கி, 'பண்ணிய பாவம் போகவேண்டுமென்றால், பாடுங்கள். இசை ஒன்றுக்குத்தான் அந்தச் சக்தி உண்டு’ என்றார். 'பாடுவதா? அதற்குப் பக்கவாத்தியங்கள் வேண்டாமா? இந்தக் காட்டில் எப்படிக் கச்சேரி செய்ய முடியும்?’ என்று ராஜா கேட்க, 'இதுவரை உங்கள் தோளிலே கிடந்த வில்லை எடுத்துக் காலிலே கட்டிவைத்து, உங்கள் அம்பை எடுத்து, வில்லின் நாணில் தட்டித் தட்டி ஒலியை எழுப்பிப் பாடுங்கள். நல்ல கருத்தைச் சொல்லுங்கள். இதுவரை செய்த பாவங்களுக்கெல்லாம் இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள்’ என்றார் மந்திரி. ராஜாவும், 'தந்தனத்தோம் என்று சொல்லியே...’ என்று பாடத் தொடங்கினார். 'தன்னைத் தந்தோம்... தன்னைத் தந்தோம்’ என்பதுதான் 'தந்தனத்தோம்’ என்று மாறியது. பானை உருவில் இருந்த கடம் பக்க வாத்தியமாயிற்று. பக்க வாத்தியமா அது..! 'பக்கா’ வாத்தியம்!  நிமிர்த்தி வைத்தால் குடம்; கவிழ்த்துப் போட்டால் கடம்! ராஜாவின் பாட்டுக்கு மந்திரி, 'ஆமாம்’ போட்டார். அதானே அவர் வேலை?! 'ஆமாம்’ போட்டாலே பிரச்னைகள் அத்தனையும் இல்லாமல் போய்விடுமே! மனைவி சொல்லுக்குக் கணவன் ஆமாம் போட்டால், இல்லறம் நல்லறமாக இனிக்கும்.

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

காட்டில், ராஜா பாடிய பாட்டை மான்களும், புலிகளும் மற்ற விலங்குகளும்கூட ரசித்துக் கேட்டன. நாட்டுக்குத் திரும்பிய பிறகும், நல்ல கருத்துக்களைக் கூறும்விதமாக இந்த வில்லுப்பாட்டைத் தொடர்ந்து நடத்தும்படி கட்டளையிட்டார் ராஜா. ஆக, கொலைக்கருவியாக இருந்த வில் கலைக்கருவியாயிற்று; வேட்டைக் கருவியாக இருந்தது, பாட்டுக் கருவியாயிற்று!''

சுப்பு ஆறுமுகத்துடனான சந்திப்பு உரையாடல் எடுத்த எடுப் பிலேயே அவரது வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப்போல் கலகலப்பாகக் களைகட்டிவிட்டது!

''கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பல ஆண்டுகள் இருந்திருக்கிறீர்கள். அப்போது நிகழ்ந்த சுவாரசியமான சம்பவம் ஏதாவது...?'' - வாசகி உஷாவின் கேள்வி இது.

 ''ரொம்பவும் பெரிய மனிதர் அவர்! 'காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டா பாடுங்க, அண்ணே’ என்று கேட்டேன். 'எழுதிக் கொடு, பாடறேன்’ என்று ஒப்புக் கொண்டார். 'காந்தி பேரைச் சொன்னவுடன் கம்பெடுத்து வந்தவங்க கண் முன்னாலே, அதே கம்பில் காந்திக் கொடி கட்டினாங்க’ என்று சுதந்திரம் அடைந்த அன்று மக்கள் மனோநிலையை பாட்டாக எழுதிக் கொடுத்தேன். அவருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது.

பிறகு ஒருமுறை, நாகர்கோவில் சென்ற போது, என்னையும் கூடவே அழைத்துச் சென்றார். பக்கத்தில்தான் எங்கள் ஊர் சத்திரம் புதுக்குளம் என்று தெரிந்ததும், என் வீட்டுக்கும் வந்தார். என் தாயார் விளக்கு பூஜை முடித்து, விபூதி கொடுத்தவுடன், கலைவாணர் அதை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டார். கிளம்பி வரும் வழியில், 'அண்ணே! அம்மா தந்த விபூதியை நெத்தியில் பூசிக்கிட்டீங்களே..?!’ என்று வியப்புடன் கேட்டேன். ஏனென்றால், அவர் பகுத்தறிவாளர்; நாஸ்திக வாதத்தைச் சேர்ந்தவர்களுடன் இணக்கமாக இருந்தவர்.

'சுப்பு! கண்காணாத தெய்வத்துக்காக கண்கண்ட தெய்வம் அம்மா கொடுக்கும் விபூதியை ஏன் மறுக்கணும்? மறுத்தால் அவங்க மனசு வருத்தப்படுமில்லையா? அதனாலதான் பூசிக்கிட்டேன்’ என்றார். எத்தனை உயர்ந்த உள்ளம், பாருங்கள்!

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

நான் தங்கியிருந்த இடத்தில், என் ஒருவ னைத் தவிர, மற்ற எல்லோரும் நாஸ்திகர்கள். கடவுள் பக்தி இல்லாதவர்கள். நான் ஒருவன் மட்டுமே காலையில் எழுந்ததும், குளித்து முடித்து நெற்றியில் விபூதி குங்குமத்துடன் இருப்பேன். அங்கு என்னைத் தவிர, எல்லோரும் அசைவம்! எனக்கு இது சரிப்பட்டு வரவில்லை. ஊருக்குத் திரும்ப முடிவெடுத்து, அவரிடம் சொன்னேன். காரணம் தெரிந்தவுடன், எனக்கென்று தனியாக ஒரு சமையல்காரரை ஏற்பாடு செய்து, தனியாக பாத்திரங்கள் வாங்கி சைவ சமையல் செய்து தினமும் போடச் செய்தார். மிகப் பெருந்தன்மையான மனிதர் கலைவாணர்.''

''காந்தி மகான் கதை என்றதும் நினைவுக்கு வருகிறது... கொத்தமங்கலம் சுப்பு அவர்களும் காந்தி மகான் கதையை வில்லுப்பாட்டில் சொல்லியிருக்கிறார் அல்லவா?'' - கேட்டவர் கிருஷ்ணன்.

''ஆமாம்! அவருடன் பழகியிருக்கிறேன். சொல்லுக்கொரு சுப்பு, வில்லுக்கொரு சுப்பு என்று எங்களைச் சொல்லுவார்கள். மிக அருமையான மனிதர். நாங்கள் இருவரும் சேர்ந்து சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறோம்!''

''வாரியார் சுவாமிகளுடன் பழகியதுண்டா?'' என்று வாசகர் பாலசுப்ரமணியன் ஆர்வத்துடன் கேட்டார்.

''உண்டு! அவரது சொற்பொழிவுக்கு நானும், எனது வில்லிசைக் கச்சேரிக்கு அவரும் ரசிகர்கள். என் இரண்டாம் மகள் பாரதி, தனக்கு இசையில் நாட்டமுள்ள மணமகன்தான் வரவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அதேபோல் ஒரு திருமகன் கிடைத்தார். அவர் அடிப்படையில் கணிதப் பேராசிரியர். இருந்தாலும் எங்களுடன் கச்சேரிக்கு வந்து பாடுவார். வாரியார் சுவாமிகள் ஆசீர்வதித்தது போலவே அந்த மாப்பிள்ளை அமைந்தார். வாரியார் சுவாமிகள்தான் என் மகள் திருமணத்துக்கு முகூர்த்த நாள் குறித்துத் தந்தார். அவர் முன்னிலையில்தான் திருமணமும் நடந்தது. என் மகளும்  மருமகனும் மிகவும் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இப்போது அவர்களின் மகன், அதாவது என்னுடைய பேரன் கலைமகனும் கச்சேரிக்கு வந்து அமர்க்களப்படுத்துகிறான்!'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார் சுப்பு ஆறுமுகம்.

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

''சமீபகாலத்தில் கணவன் மனைவி உறவு முறையில் பல சிக்கல்கள் வருகின்றன. தவிர, திருமணம் என்பதே ஆடம்பரம் சார்ந்ததாக ஆகிவருகிறதே தவிர, ஆத்மார்த்தமாக, அன்பைப் பரிமாறும் வகையில் அமைவதில்லை. இதுகுறித்துத் தங்களின் கருத்து என்ன?'' - வாசகர் காமேஸ்வரனின் கேள்வி இது.

''சமீபத்தில், திருமணம் ஒன்றில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி.  அங்கே ஒரு புது விஷயம் சொன்னேன். பொதுவான விஷயமும் கூட! இந்த விஷயத்தை நான் சொன்னேன் என்றுகூட சொல்லமாட்டேன். சொல்லச் சொல்லி காஞ்சி காமாட்சியின் கட்டளை! திருமணம் என்பது ஒரு வீட்டின் நிகழ்ச்சி அல்ல. ஒரு குடும்பத்தின் நிகழ்ச்சியும் அல்ல. உற்றார் உறவினர் எல்லோரும் கூடியிருந்து ஒரு பெண்ணையும் மாப்பிள்ளையையும் சேர்த்து வைக்கும் நிகழ்ச்சி என்றும் நினைத்துக் கொள்ளக்கூடாது.  இது ஒரு தெய்விக நிகழ்ச்சி!

மேலும், ஒவ்வொரு திருமணத்திலும் தேசியம் கலந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு நல்ல திருமணம், நல்ல குடும்பத்தை உருவாக்குகிறது.  நல்ல குடும்பம், நல்ல குழந்தைகளை உருவாக்குகிறது. நல்ல குழந்தை, சிறந்த குடிமகனாகி நல்ல நாடு உருவாவதற்குக் காரணமாக அமைகிறது. அந்த நல்ல நாடு, மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்து, உலகமே க்ஷேமம் அடையக் காரணமாகிறது. இந்தக் கோணத்தில் பார்த்தால், ஒவ்வொரு திருமணமும் உலகம் நலமாக அமையக் காரணமான திறவுகோல்  என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

திருமணத்தின்போது, மேடையில் ஏற்றி வைக்கப்படும் குத்து விளக்கு, ஐ.நா. சபையில் ஏற்றி வைக்கப்படும் விளக்குக்குச் சமம்! இந்த வீட்டில் பிறக்கப்போகும் குழந்தை, நாளை ஐ.நா.சபையின் தலைவராக வரலாம். ஒரு மகாகவி பாரதியாக, எம்.எஸ்.சுப்பு லட்சுமியாக, மாண்டலின் ஸ்ரீனிவாசாக... இப்படிப் பல்வேறு வகையில் தலைமைப் பண்புகளுடன் சிறப்பான மனிதனாக உருவாவதற்கு அடித்தளமிடப்படுவது, இந்த மணமேடையில்தான். இந்தக் காரணங்களுக்காக ஒரு திருமணத்தை நல்லவிதமாக நடத்தி, ஒரு புதிய உறவு முறையைத் தொடங்கி வைத்தால், அது ஒரு தேசிய நிகழ்ச்சி என்றே கொள்ளவேண்டும். இந்தியாவுக்கு ஒரு புதிய மேதை, பாரத மாதாவுக்கு ஒரு திறன்மிகு தவப்புதல்வன் கிடைக்கப்போகிறான் என்று பொருள்.

இங்கும்கூட 'தந்தனத்தோம்’ என்பது மிகச் சரியாக வரும். கணவன் மனைவியிடம் 'தன்னைத் தந்தோம்’ என்றும், மனைவி கணவனிடம் 'தன்னைத் தந்தோம்’ என்றும் தன்னையே ஒப்புவித்து வாழ்ந்தால், பிரச்னைகளே வராது. அப்படி வாழும் இல்லறத்தில், கடவுளே 'தன்னைத் தந்தோம்’ என்று குழந்தையாக வந்து பிறந்துவிடுவார்.

அந்தத் திருமணத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்தேன். மண மேடையில் இறைவன், இறைவி படங்களை வைக்கிறோம். நமது குடும்பத்து மூத்தோர் படங்களை வைக்கிறோம். கூடவே, இந்தியாவின் வரைபடத்தையும் வையுங்கள்; நமக்கு தேசப்பற்று வரட்டும் என்று சொன்னேன். என் கருத்தை மதித்து உடனடியாக எப்படியோ எங்கிருந்தோ ஒரு 'மேப்’பைக் கொண்டு வந்து, அங்கு வைத்துவிட்டார்கள். மனத்துக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது!'' என்று சொல்லும்போதே சுப்பு ஆறுமுகத்தின் முகத்தில் அப்படியொரு புத்துணர்ச்சி!

? ''மகான்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் அல்லது கருத்துக்களால் உங்களை வழிநடத்திய வர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?'' - வாசகர் ராமமூர்த்தியின் இந்தக் கேள்விக்கு உற்சாகத்துடன் பதில் சொல்லத் தொடங்கினார் சுப்பு ஆறுமுகம்.

 ''ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகா னந்தர், வினோபாபாவே, ரமண மகரிஷி, காஞ்சிப் பெரியவர்... இவர்களெல்லாம்தான் நான் இன்று இருக்கும் நிலைக்குக் காரணம். அவ்வளவு ஏன்... இந்திய வாழ்க்கை இன்று இருக்கும் ஸ்திர நிலைக்கு இவர்கள் செய்த தவம்தான் காரணம். இந்தியா ஒரு மண்டபம் என்றால், இவர்கள் எல்லோருமே இந்தியா வைத் தாங்கி நிற்கும் வைரத் தூண்கள்.

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

என மகன் பெயர் காந்தி; என் மகள் பெயர் பாரதி. காந்தியும் பாரதியும் நான் கும்பிடும் மனித தெய்வங்கள். அதனால்தான் அவர்களின் பெயர்களை என் பிள்ளைகளுக்கு வைத்தேன். வேஷ்டியும் கோட்டும், தலைப் பாகையும் அணிந்த மகரிஷி- பாரதியார்.

கடந்த பத்து ஆண்டுகளாக, இவர்களைப் பற்றியெல்லாம் இளைஞர்கள் கவனிக்க வில்லையோ என்ற கவலை எனக்குள் எழுகிறது. வெளிநாட்டு மோகம், சாஃப்ட் வேர் நிறுவனங்களில் கிடைக்கும் பணம் ஆகியவை நமது பாரம்பரியத்தை ஆட்டிப் படைக்கிறதோ என்ற சந்தேகம் அதிகமாக ஏற்படுகிறது. இலக்கியங்களில்கூட வெளிநாட்டு இலக்கியங்களின் தாக்கம் அதிகமாகி வருகிறது. இந்திய இலக்கியங்களில் இல்லாத விஷயங்களா வெளிநாட்டு இலக்கியங்களில் இருக்கப்போகின்றன?!

இந்தியனுக்கு அடிக்கடி மறந்துபோவது ஒன்றுதான்! அதுதான் 'இந்தியா’! பாம் புக்குக்கூட தனது புற்றின்மீது பற்று உண்டு. அதற்கு தாய்நாடு புற்றுதான். அதனை இடித்தால் புஸ்ஸென்று சீறியெழும். ஒரு பாம்புக்கு இருக்கும் அபிமானமாவது, நம் தேசத்தின் மீதும், அதன் கலாசாரத்தின்மீதும் நமக்கு வேண்டாமா? தாயும் தாய்நாடும் ஒன்று. தாயை தெய்வமாக மதிக்கவேண்டும். அவளுக்கு நிகரான தெய்வம் வேறில்லை. நம்முடைய மகான்கள் எல்லோருமே தாய்க்குச் சமமானவர்கள். இந்த வையகத்தின்மீது முழுமையாக அன்பு செலுத்தியவர்கள்.

இதுதான் ஆன்மிகம்! மானிடப் பிறவியின் ரகசியம்!''

''காஞ்சிப் பெரியவரிடம் தங்களுக்கு பக்தி உண்டு என்று தெரியும். அவர் தங்களுக்குப் பிரத்யேகமாக வழங்கிய அருளுரைகள், அறிவுரைகள் இருந்தால் கூறுங்களேன்..?''

 ''சமூகப்பிரச்சினைகளை உங்கள் வில்லிசையின் வழியாக மக்களுக்குக் கொண்டு செல்வீர்களா?''

 ''கடவுள் நம்பிக்கை மனிதனுக்கு எந்த அளவுக்கு அவசியம் என நினைக்கிறீர்கள்?''

இதுபோன்று பல கேள்விகளுக் கான சுப்பு ஆறுமுகத்தின் விறுவிறு சுறுசுறு பதில்கள் அடுத்த இதழில்...

படங்கள்: 'கிளிக்’ ரவி

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

''முன்பெல்லாம் எண்பதுகளில் அடிக்கடி தூர்தர்ஷனில் 'தந்தனத்தோம் என்று சொல்லியே’ என்ற தங்களது கணீர்க் குரலுடன் வில்லிசை ஒலிக்கும். இப்போதெல்லாம் அவ்வளவாகக் கேட்க முடிவதில்லையே?''

- ரமணா, நெல்லை

''தமிழ்நாடு கலைஞர்கள் அன்றாடம் மலர்ந்து  வளர்ந்து கொண்டிருக்கும் தடாகம் அது. ஜனநாயகம் தழைக்கும் கலை நாட்டில் பல நாயகங்கள் பார்வைக்கு வரட்டும் என்று சில நாயகங்கள் ஒதுங்கிக்கொண்டு இருக்கிறோம். நடுநாயக மாக பொதிகை பவனி வருகிறது!  வாழ்க!''

''சமூகப்பிரச்னைகளை உங்கள் வில்லிசையின் வழியாக மக்களுக்குக் கொண்டு செல்வீர்களா?''

- வீ.ராமு, மேலூர்

''சமூகப்பிரச்னை என்ற அச்சில்தான் உலக வாழ்க்கை, சமுதாயம் அத்தனையும் பூகோளமாக, சரித்திரமாக அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அந்த அச்சு ஒழுங்காக இருக்கவேண்டுமே என்ற அச்சம் எனக்கு உண்டு.  அதை மறந்துவிட்டுப் பாடுவதோ பேசுவதோ எனக்குத் தெரியாது.  வள்ளித் திருமணத்தையே கலப்புத்திருமணம் என்று சமுதாய நோக்கில் சொல்லி வருபவன் நான்!''

''உங்கள் குரு என்று யாரைச் சொல்வீர்கள்?''

- கீர்த்தனா சேகர், வந்தவாசி

''என் வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய என் வாழ்க்கைத் துணைவி எஸ்.ஏ.மகாலட்சுமி அவர்களே எனது முதல் குரு! மேடையில் எதிரே அமர்ந்து என்னை ரசித்து வாழ்த்திக் கொண்டிருக்கும் அத்தனை கையொலி கரங்களும் என்னை ஆசிர்வதிக்கும் கரங்களே!

புள்ளி விவரமாகச் சொல்லவேண்டும் என்றால்... நான் தமிழ் கற்ற ராமய்யர், இசை படித்த தந்தையார் சுப்பையா பிள்ளை, அன்றாடம் சந்திக்கும் பொதுமக்கள், அத்தனைக்கும் கையெழுத்திட்ட கலைவாணர், நிறைவாக குருவாக நெஞ்சில் என்றும் வீற்றிருக்கும் ஜகத்குரு காஞ்சி மகா பெரியவர்!

வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் நினைவலைகள்: `தந்தனத்தோம் என்று சொல்லியே...' - சக்தி சங்கமம்

மேலும், எனக்கு தீட்சை வழங்கிய பேலூர் மடம் ஸ்ரீமத் சுவாமி ரங்கநாதானந்தாஜி மகராஜ் அவர்கள் கோபுரக்கலசம் போல  என்னுடைய மகா குரு எனலாம்.''

இதன் அடுத்த பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.