Published:Updated:

ஆறு மனமே ஆறு - 46

ஶ்ரீ மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீ மாதா அமிர்தானந்தமயி

எம்.எஸ்.நாகராஜன்

ஆறு மனமே ஆறு - 46

எம்.எஸ்.நாகராஜன்

Published:Updated:
ஶ்ரீ மாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீ மாதா அமிர்தானந்தமயி

மனிதனின் தேவைக்கு அளவே இல்லை என்பதுதான் உண்மை. தேவையென்று ஒன்று இருந்தால் அதை அடையும் ஆசை என்பதும் இருக்கும். ஆசை இல்லாத மனிதன் யார்? பணம், பொருள், வீடு, பேர் சொல்லும் சாம்ராஜ்ஜியம்... இப்படிப் பற்பல ஆசைகள் மனிதனுக்கு. அவன் அனைத்துக்கும் ஆசைப்படுகிறான்; சில தருணங்களில் பேராசையும் கொள்கிறான்.

அதை நிறைவேற்ற எல்லா வழிகளையும் பயன்படுத்துகிறான்; ஆசையை அடையும் பொருட்டு எதைச் செய்யவும் தயங்குவதில்லை. இதுதானே உண்மை என் செல்லங்களே!


சிலர், எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்பார்கள். சிலரோ, உலக சுகங்களைத் தியாகம் செய்துவிட்டுப் பற்றற்றவனாக இரு என்பர். இன்னும் சிலர் உண்டு. அவர்கள், `அப்படியும் வேண்டாம்; இப்படி யும் வேண்டாம். தேவையானதற்கு மட்டுமே ஆசைப்பட வேண்டும்’ என்பார்கள். ஆசைப்படுபவனைக் கேட்டால், ``ஆசைப்படாமல் நான் எப்படிச் சிறப்பாக வாழ முடியும்?’’ என்பான். ஆசைப்பட்டுச் சறுக்கியவனைக் கேட்டால், ``ஆசைப்பட்டதால் வந்த வினை இது’’ என்பான்.

இதில் யார் சொல்வதைக் கேட்பது. அவர்கள் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமா? நான் படித்த கதையொன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்...

 பேராசை பெருநஷ்டம்

கிராமத்து இளைஞர்கள் நால்வர் துறவி ஒருவரைச் சந்தித்து, தங்களுக்கு வாழ வழிகாட்டுமாறு வேண்டிக்கொண்டனர். அவர்களை அவ்வூர் காளியம்மனிடம் பிரார்த்தனை செய்யும்படிச் சொன்னார் துறவி. இளைஞர்களும் அப்படியே செய்தனர்.

அவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட காளி, ஆளுக்கொரு தாயத்து கொடுத்தாள். அதை தலையில் வைத்துக் கொண்டு பயணிக்குமாறு உத்தரவிட்டாள். அந்தத் தாயத்து எங்கு விழுகிறதோ, அங்கு தோண்டுங்கள். தோண்டிய இடத்தில் கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அருளாசி வழங்கினாள்.

பயணம் தொடங்கியது. ஓரிடத்தில் முதலாமவனின் தலையில் இருந்து தாயத்து கீழே விழுந்தது. அங்கு தோண்டினான். அவனுக் குத் தாமிரக் கட்டிகள் கிடைத்தன. இரண்டாமவனுக்கு வெள்ளிக் கட்டிகள் கிடைத்தன. மூன்றாவது இளைஞனுக்குத் தங்கக் கட்டிகள் கிடைத்தன. அப்போதே பொழுது இருட்டத் தொடங்கியது.

ஶ்ரீமாதா அமிர்ந்தானதமயி
ஶ்ரீமாதா அமிர்ந்தானதமயிநான்காமவன் பயணத்தைத் தொடர முற்பட்டான். அவனை மூன்றாமவன் தடுத்தான். `பொழுது இருட்டிவிட்டது. இப்போது கிடைத்திருக்கும் தங்கக்கட்டிகளில் பங்குபிரித்து எடுத்துச் செல்வோம்’ என்றான். ஆனால் நான்காமவன் கேட்கவில்லை. தனக்கு வைர-வைடூரியங்கள் கிடைக்கும் என்று எண்ணினான். அதனால் விளைந்த பேராசையில் பயணத்தைத் தொடர்ந்தான். ஓரிடத்தில் தாயத்து விழுந்தது. அங்கு தோண்டினான். கிடைத்ததோ இரும்புத் துண்டுகள்! அதுமட்டுமா, நள்ளிரவில் நடுவனத்தில் மீள வழி தெரியாமல் சிக்கிக் கொண்டான்.

முந்தைய நண்பன் பேச்சைக் கேட்டிருந்தால், தங்கக் கட்டிகள் கிடைத்திருக்கும். வனத்தில் மாட்டிக்கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்காது. `இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்’ எனும் பேராசை, கிடைக்கவிருந்த செல்வத்தையும் கைவிடச் செய்தது!

 ஆசையும் கோபமும்!

ஆசை வந்துவிட்டால் மனிதன் தன்னிலையில் இருப்பதில்லை. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால், ஏமாற்றத்துக்கு ஆளாகிறான். தனக்குக் கிடைக்காதது மற்றவர்களுக்குக் கிடைத்துவிட்டதே எனும் பொறாமைக்கு ஆளாகிறான். அதனால் ஏற்படும் குரோதமும் அவனை அலைக்கழிக்கும். விளைவுகள்... கொள்ளை, பணத்துக்காகக் கொலை என்று தவறான வழிகளைத் தேர்வுசெய்ய வைக்கும்.

இளம்பெண்கள் பலரும் பகட்டான ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு கயவர்களிடம் சிக்கி வாழ்வை இழப்பதை இன்றும் ஊடகங்கள் மூலம் காண்கிறோம். தற்காலத்தில் ஆசையும் கோபமும் மனிதனைப் பெரிதும் ஆட்கொண்டுள்ளன. நாம் மனதைக் கட்டுப்படுத்த வேண்டும் இல்லாவிடில், துன்பம் நம்மை விடாமல் துரத்தும்; வாழ்வின் இனியவையெல்லாம் காற்றில் பறந்துவிடும். ஆம், ஆசை நிறைவேறவில்லையென்றால் கோபம் ஏற்படும். அந்த கோபமே நம்மை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்.

 என்ன செய்யலாம்?

மனம் கட்டுப்பட்டால் துன்பம் நம் அருகில் வருவதற்கே அச்சப் படும். ஆசையின் பிடியில் சிக்காமல் இருக்க சில நெறிகளைப் பின்பற்ற உறுதியேற்க வேண்டும். எட்டாதவற்றுக்காக ஆசைப் படக்கூடாது. கிடைப்பதில் திருப்திகொள்ள வேண்டும். வீண் செலவு மற்றும் ஆடம்பரத்தை அறவே துறக்கவேண்டும். தேவைக்கு அதிகமான சொத்து சேர்ப்பது, அதற்காகக் கடன் வாங்குவது எல்லாம் கூடாது. நம் தேவைகளைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டு வாழப் பழகவேண்டும்.

ஆனால் எல்லோராலும் இப்படி வாழ முடியுமா? ஆசை நம்மை விடுவதாக இல்லையே, என்ன செய்வது? முயலுங்கள். உங்களால் முடியாதது எதுவும் இல்லை!

- மலரும்...

கேள்வியும் பதிலும்

? கடவுளுக்குக் காணிக்கை, குருவுக்குப் பாதக் காணிக்கை இவை கொடுத்தால்தான் அருள் கிடைக்குமா?

எந்தக் கடவுளும், `எனக்கு அதைச் செய், இதைச் செய்’ என்று கேட்பதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். அப்படிக் கொடுத்தால்தான் உன்னை ஆசீர்வதிப்பேன் என்றும் சொல்வது இல்லை. அதேபோல், பணம் - பொருள் கொண்டு வந்தால்தான் உன்னைச் சீடனாகவோ, பக்தனாகவோ ஏற்பேன் என்று எந்த குருவும் சொல்வதில்லை.

ஓர் ஊரில் மகான் ஒருவர் இருந்தார். ஆண்டுதோறும் குறிப்பிட்ட தினத்தில் அவரை தரிசிக்கப் பல இடங்களிலிருந்தும் திரளான மக்கள் வருவார்கள். அவரை வணங்கி, காணிக்கை அளித்து ஆசி பெற்றுச் செல்வார்கள். ஒருமுறை, சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழை ஒருவன் பாத யாத்திரையாக அவரை தரிசிக்க வந்தான்.

அவனிடம் பணமும் இல்லை உணவும் இல்லை. பசி காதை அடைத்தது. வழியில் ஓர் ஓடை தென்பட்டது. அதன் நீரை வயிறு நிரம்பப் பருகினான். அந்த ஓடையின் நீர் சுவைமிகுந்ததாக இருந்தது. மகானுக்குக் காணிக்கையாக அளிக்கத் தன்னிடம் ஏதும் இல்லை என்பதால், ஓடையின் நீரைக் குடுவையில் எடுத்துக் கொண்டான்.

மகானைத் தரிசித்ததும் அவரை வணங்கி நீரைச் சமர்ப்பணம் செய்தான். மகானும் அதை வாங்கிப் பருகிவிட்டு, `மிகச் சுவையாக உள்ளது’ என்று கூறி ஆசிபுரிந்தார். அத்துடன் அவன் நிலையைக் கேட்டறிந்து, அவனுக்குத் தேவையானவற்றை அளித்து அனுப்பி னார். அவன் சென்றதும் அணுக்கத் தொண்டர்கள் மகானை அணுகினர்.

``வழக்கமாக இதுபோன்று தீர்த்தத்தை எவரேனும் கொண்டு வந்தால் அதை அங்கேயே எல்லோருக்கும் பருகக் கொடுப்பீர்கள். ஆனால் இந்த ஏழை கொண்டு வந்த ஓடை தீர்த்தத்தைத் தரவில்லையே ஏன்’’ என்று கேட்டனர்.

மகான் சொன்னார்: ``அந்த நீர் பருகுவதற்கு உகந்ததாக இல்லை. ஆனால் பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு, அது அமிர்தமாக இருந்திருக்கிறது. ஆகவே அன்புடன் அதை எனக்கும் கொண்டு வந்து கொடுத்தான். அதை உங்களுக்குக் கொடுத்து, நீங்கள் குறை சொல்லிவிட்டால் அவன் மனம் புண்படும் அல்லவா? அதனால்தான் தரவில்லை’’ என்றார்.

கடவுளும் சரி, குருவும் சரி... இப்படித்தான்! இருவருக்குமே கொண்டு வந்தாலும், கொண்டுவராவிட்டாலும் பக்தன் என்றுமே பக்தன்தான்.

கேள்வியும் பதிலும் - குருவும் சீடனும்
கேள்வியும் பதிலும் - குருவும் சீடனும்

? சந்நியாசிகள் காவியுடை அணிவது வழக்கம். நீங்கள் மட்டும் வெள்ளையுடை அணிகிறீர்களே?

காவி அணிவதால் மட்டுமே ஒருவர் சந்நியாசி ஆகிவிட முடியாது. `சந்நியாசி எப்படி வாழவேண்டும்’ என்று விதிக்கப் பட்டுள்ளதோ, அதன்படி மனதளவில் வாழப் பழகி - வாழ்ந்து காட்டினால், உடையின் நிறம் பெரிய விஷயமே இல்லை என் செல்லங்களே. இன்றும், மருத்துவச் செவிலியர்கள் வெள்ளைச் சீருடை அணிந்தே பணிபுரிகிறார்கள். சிறு வயதினராக இருந்தாலும் செவிலியரை சிஸ்டர் என்றே அழைக்கிறோம். அவர்களின் பணி அவ்வளவு உத்தமமானது. வெள்ளை அமைதி, மரியாதையை அளிக்கும் நிறம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism