Published:Updated:

``வீட்டில் ஊதுபத்தி நறுமணம்; யாரோ நடக்கிற உணர்வு”- ஆன்மிக அனுபவங்களைப் பகிர்கிறார் காதல் சரண்யா

காதல் சரண்யா

அப்ப எனக்கு 20 வயசு இருக்கும். இனியும் வாழத் தேவையில்லை. இந்த வாழ்க்கையை முடிச்சிக்கலாம்னு நினைச்சேன். என் பாட்டி வீட்டுக்குப் போயிட்டு அவங்ககிட்ட பேசிட்டு அங்கிருந்த கிணத்துல விழுந்திடலாம்னு முடிவு பண்ணிப் போனேன். ஆனா...

``வீட்டில் ஊதுபத்தி நறுமணம்; யாரோ நடக்கிற உணர்வு”- ஆன்மிக அனுபவங்களைப் பகிர்கிறார் காதல் சரண்யா

அப்ப எனக்கு 20 வயசு இருக்கும். இனியும் வாழத் தேவையில்லை. இந்த வாழ்க்கையை முடிச்சிக்கலாம்னு நினைச்சேன். என் பாட்டி வீட்டுக்குப் போயிட்டு அவங்ககிட்ட பேசிட்டு அங்கிருந்த கிணத்துல விழுந்திடலாம்னு முடிவு பண்ணிப் போனேன். ஆனா...

Published:Updated:
காதல் சரண்யா

`என்னைப் பொறுத்தவரைக்கும் மனதார நல்ல எண்ணங்களோட கடவுளை வணங்குறதுதான் ஆன்மிகம். எப்பவும் நான் எனக்காக வேண்டிக்கிட்டதைவிட என்னை சுற்றியுள்ளவர்களுக்காகத்தான் அதிகமா வேண்டியிருக்கேன். அந்த எண்ணத்தைத்தான் ஆன்மிகம்னு நினைக்கிறேன்!' என்றவாறு பேசத் தொடங்கினார் சரண்யா. 'காதல்' சரண்யா என்றால் சட்டென இவரது முகம் நினைவிற்கு வரும்! அவருடைய ஆன்மிக நம்பிக்கை குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

காதல் சரண்யா
காதல் சரண்யா

என் அப்பாவும், அம்மாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவங்க. அதனால எது எங்க குலதெய்வம்னு அவங்க எனக்குச் சொன்னதில்லை. நான் என் குருநாதரைத்தான் குலதெய்வமாக நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் திருத்தணி முருகன் கோயிலுக்கு அடிக்கடிப் போயிட்டு வர ஆரம்பிச்சேன். திடீர்னு அவர் மீது அதீத பற்று வந்தது. அப்ப அவர்தான் எனக்கு வழிகாட்டியாய் குலதெய்வமாய் இருப்பார்னு நினைக்க ஆரம்பிச்சேன். அதே மாதிரி, காமாட்சி அம்மன் கோயிலுக்கும் அடிக்கடிப் போயிட்டு வர்றதுனால அவங்களையும் என் குலசாமியாகத்தான் பார்க்கிறேன்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்ப என் இஷ்ட தெய்வமாக திருத்தணி முருகன்தான் இருக்கிறார். சமீபத்தில் ஆடிக் கிருத்திகை அன்னைக்கு அவரைப் பார்க்க ஆசைப்பட்டு கோயிலுக்குக் கிளம்பி போயிட்டேன். அன்னைக்கு ஒருநாள் மட்டும் அவருக்குப் பச்சை வைரக்கல் சாத்தியிருப்பாங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. அதனால, அவரை எப்படியாச்சும் பார்த்திடணும் என்கிற எண்ணத்தோட போனேன். அங்க ரொம்ப கூட்டம். காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றின சிலரால் கூட சாமியை தரிசிக்க முடியல. அந்த அளவுக்குக் கூட்ட நெரிசலில் நீ எப்படி சாமியை பார்க்க முடியும்னு என்னோட இருந்தவங்க எல்லாரும் கேட்டாங்க. 200 ரூபாய் டிக்கெட் எடுத்து வரிசையில் நின்று ஒன்றரை மணி நேரத்தில் சாமியை பார்த்தேன். அன்றைக்கு என்னை அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன் என்றவரிடம் அவருடைய குரு குறித்துக் கேட்டோம்.

காதல் சரண்யா
காதல் சரண்யா

என்னோட குருநாதர் பரஞ்சோதி பாபா. நான் அவரை ஐயான்னு தான் கூப்பிடுவேன். 2010-ல் பேராண்மை திரைப்படம் முடித்த சமயத்தில் என்னோட வீட்டில் ரொம்ப பிரச்னை. தனிமையில்தான் இருந்தேன். அப்ப எனக்கு 20 வயசு இருக்கும். இனியும் வாழத் தேவையில்லை. இந்த வாழ்க்கையை முடிச்சிக்கலாம்னு நினைச்சேன். என் பாட்டி வீட்டுக்குப் போயிட்டு அவங்ககிட்ட பேசிட்டு அங்கிருந்த கிணத்துல விழுந்திடலாம்னு முடிவு பண்ணிப் போனேன். என் பாட்டிக்கிட்ட எனக்குப் பேராண்மை சமயத்தில் சிலம்பம் கற்றுக் கொடுத்த பாண்டியன் ஆசான் நம்பரையும், என் சில ஃப்ரெண்ட்ஸ் நம்பரையும் கொடுத்துட்டு எமோஷனலா அவங்ககிட்ட பேசிட்டுக் கொஞ்ச நேரம் கிணத்துக்கிட்ட உட்கார்ந்துட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனேன்.

நான் கிணத்துல குதிக்க நினைச்ச கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் பாட்டி வேகமா என்கிட்ட வந்து, 'உங்க சிலம்பு ஆசான் உன்கிட்ட பேசணுமாம். அவசரமாம்'னு சொல்லி ஃபோன் கொடுத்தாங்க. அவர் என்கிட்ட, "எனக்கு ரொம்ப மனசு கஷ்டமா இருக்கும்மா. மிகப்பெரிய பிரச்னை... நீ உடனே கிளம்பி வடபழனி வந்துடு"ன்னு சொல்லி ஃபோனை வச்சிட்டார். நானும், என் பாட்டியும் ஆட்டோவில் வடபழனிக்குக் கிளம்பினோம்.

போகும் வழி முழுக்க அவர் மீது ஒருவித வெறுப்போடுதான் போனேன். அங்க போனதும் "மகான் ஒருத்தரை சந்திக்கலாம் வா"ன்னு கூட்டிட்டு போனார். வடபழனி பக்கத்துல ஒரு ஆசிரமம். உள்ளே போனோம். அங்க ஒரு வயசானவர் உட்கார்ந்திருந்தார். அவருக்கு என்ன தோணிச்சோ, என்னைப் பார்த்த நொடி, "யார் நீ.. வெளியில போ"ன்னு சொல்லிட்டார்.

எனக்கு அது உச்சபட்சக் கோபத்தை உண்டாக்கிடுச்சு. என்னடா இந்த வயசானவன் கூட நம்மை சேத்துக்க மாட்டேங்கிறான்னு தோணுச்சு. அன்னைக்கு அவரை அவன், இவன்னுதான் கூப்பிட்டேன். இந்த டென்ஷன்ல நான் சாகணும்னு செஞ்சிருந்த முடிவு மறந்துபோச்சு. எப்போ அந்த முடிவைக் கைவிட்டேன்னு கூட எனக்கு தெரியல. ஒருவேளை அவர் என்னை உள்ளே வரச் சொல்லி ஆசீர்வாதம் பண்ணியிருந்தா நிச்சயம் வீட்டுக்கு போய் தற்கொலை பண்ணியிருப்பேன். அவர் தான் என்னை அந்த எண்ணத்துல இருந்து என்னை மீட்டுக் கொண்டு வந்திருக்கார்னு இப்பவும் நம்புறேன்.

காதல் சரண்யா
காதல் சரண்யா

2011-ல் அவர் ஸித்தியானபோதுகூட அவரை வழிபடணும்னு எனக்கு தோணல. ஆனா, அவரை நான் ஏத்துக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் அவருடைய எல்லா முக்கியமான நாள்களிலும் நிச்சயமா நான் அந்த இடத்தில் இருப்பேன். அவரோட 3,4வது குருபூஜையின் போதுதான் எனக்கு அவர் மீது நம்பிக்கை வர ஆரம்பிச்சது. அதன் பிறகு என் வாழ்க்கையில் மாற்றங்களும் நிகழ ஆரம்பிச்சது.

அவருடைய புகைப்படங்கள், அவர் பயன்படுத்தின பொருள்கள் எல்லாமும் என் வீடு தேடி வந்துச்சு. ஒருநாள் விடியற் காலையில் வீட்டில் ஊதுபத்தி நறுமணம் வந்துச்சு. தூக்கத்திலிருந்து கண் திறந்து பார்த்தப்ப அவர் நடந்து போகிற மாதிரி தெரிஞ்சது. அப்போது தான் அவர் என் கூடவே இருக்கார்னு உணர்ந்தேன். இப்போ கிட்டத்தட்ட பதினோரு வருஷமா அவர் புகைப்படங்கள் என் வீடு முழுக்கவும் இருக்கு. எங்க போறேன்னு இவர்கிட்ட சொல்லாம வெளியே போக மாட்டேன். அவருடைய முகத்தைத்தான் என் கழுத்தில் டாலராக போட்டிருக்கேன்!' என்றார்.

தன் குரு குறித்து இப்படி சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்ட காதல் சரண்யா தொடர்ந்து தன் வாழ்வில் திருத்தணி முருகன் நிகழ்த்திய சிலிர்ப்பூட்டும் அற்புதங்கள் குறித்துப் பேசினார். இது குறித்து அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

புகைப்படங்கள் : பாலாஜி ரமேஷ்