Published:Updated:

"நிலக்கோட்டை பெருமாளுக்கு ஆர்ச் வைக்க நினைச்சோம். அந்த வருஷம்..."- செந்தில்கணேஷ், ராஜலட்சுமி

"பொதுவா அம்மன் தாலாட்டுப் பாடினா சிலருக்கு சாமி வரும். வரணும். நானோ முதல்முறை பாடுறேன். யாருக்கும் சாமிவருமான்னு உள்ளுக்குள்ள சந்தேகம். ஆனா பாடத்தொடங்கினதுமே நான் என்னை மறந்துட்டேன். நான் பாடி முடிக்கிறதுக்குள்..." - செந்தில்கணேஷ், ராஜலட்சுமி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி, அறிமுகம் தேவையில்லாத பிரபலங்கள். தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகித் தங்களின் வெள்ளந்தியான பேச்சாலும் கிராமிய மண்ணின் மணம் மாறாத குரலாலும் தமிழர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்கள். இவர்களின் ஆன்மிக வாழ்க்கை, நம்பிக்கை, பிடித்த கோயில்கள், வித்தியாசமான இறை அனுபவங்கள், அற்புதங்கள் என ஆன்மிகம் சார்ந்த பல்வேறு கேள்விகளை சக்திவிகடன் சார்பாக முன்வைத்தோம். அதற்கு அவர்கள் தந்த சுவாரஸ்யமான பதில்கள் இதோ உங்களுக்காக...
செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி!
செந்தில்கணேஷ் - ராஜலட்சுமி!

உங்கள் பக்தியின் தொடக்கப் புள்ளி எது?

ராஜலட்சுமி: பக்தியின் தொடக்கப்புள்ளி எங்கள் குடும்பம்தான். எங்கள் தாத்தா ஓர் இசைக்கலைஞர். மார்கழிமாத பஜனை, புரட்டாசி மாத பஜனை எல்லாம் செய்வார். அதனால் வீட்டில் எப்போதும் பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கும். எனவே பக்தியும் பாடலும் எங்கள் குடும்பத்தில் எப்போதும் இருக்கும் விஷயங்கள்.

செந்தில் கணேஷ்: சின்ன வயதில் முருகனுக்கு ஐயப்ப சாமிக்கு மாலைபோடும் பக்தர்கள் செய்யும் பஜனைகளில் சென்று கலந்துகொள்வேன். அது எனக்குள் பக்தியை வளர்த்தது. சின்ன பசங்க ஒரு பத்துபேர் சேர்ந்து கூட்டாஞ்சோறெல்லாம் செய்து சாமி கும்பிட்டு பூஜை செய்து விளையாடுவோம். காலப்போக்கில் இதோட தொடர்ச்சியா சபரிமலைக்கு மாலை போடணும்னு ஆசை வந்தது. அதன் விளைவாக சபரிமலைக்கு மாலைபோட்டுப் போய்வர ஆரம்பித்தேன். இதுவரைக்கும் 12 வருடங்கள் சபரிமலைக்குப் போய்வந்திருக்கிறேன். அப்போ பல கோயில்களுக்குப் போவோம். அது எனக்குள்ளே பக்தியை ஆழமா விதைத்தது. அப்போதான் எங்க குலதெய்வம் மேல எனக்குத் தீவிர பக்தி உருவாச்சு. அது இன்றுவரை தொடர்கிறது. இன்றுவரை எங்களை வழிநடத்துகிறது அதுதான் என்பதுதான் என் நம்பிக்கை.

உங்கள் குலதெய்வம் குறித்துச் சொல்லுங்கள்?

செந்தில் கணேஷ்: எங்கள் குலதெய்வம் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வழியாகச் செல்லும்போது வரும் பெருங்களூரில் இருக்கும் உருமநாதர். அங்கே ஐந்து தெய்வங்கள் உண்டு. கோயில் ரொம்ப பழைமையா இருக்கும். அங்கே அடிக்கடிபோய் வழிபடுவோம். அதேபோல எங்க வீட்டுக் காவல் தெய்வமா இருக்கிறது காளியம்மன், நொண்டி அப்பாச்சி. இப்போதும் எந்தக் காரியத்தை முதலில் தொடங்கினாலும் குலதெய்வக்கோயிலுக்குப் போய் மாலைகட்டிப்போட்டு விழுந்து சாமி கும்பிட்டுட்டுத்தான் தொடங்குவோம்.

ராஜலட்சுமி: வையம்பட்டி எல்லையம்மன்தான் எங்க குலதெய்வம். ஊருக்கு வெளியே இருக்கும். எல்லையம்மனுக்கு சத்தம் பிடிக்காது. உலக்கை சத்தமும் குலவை சத்தமும் பிடிக்காதுன்னு சொல்லுவாங்க. அதனால அங்கே கச்சேரிகள் எதுவும் வைக்கமாட்டாங்க. நான் தனியா சந்நிதியில் அமர்ந்து அமைதியா பாடிட்டு வந்திடுவேன். கல்யாணத்துக்கு அப்புறம் உருமநாதர். என் உயிரோட கலந்த தெய்வம் அது.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

நினைவில் நிற்கும் திருவிழாக்கள்... கொண்டாட்டங்கள்...?

செந்தில் கணேஷ்: எங்கள் ஊரைச்சுற்றி நிறையத் திருவிழாக்கள் நடக்கும். முதல் திருவிழா புதுக்கோட்டை மாரியம்மன் கோயிலில் நடக்கும் பூச்சொரிதல்தான் ஒவ்வோர் ஆண்டும் முதல் திருவிழாவா அமையும். அதைத் தொடர்ந்து கொன்னையூர், நார்த்தாமலை, வைத்தூர் இப்படிச் சுற்றியிருக்கக் கூடிய ஆறு கோயில்களுக்குத் திருவிழா நடக்கும். இந்தத் திருவிழா எதையும் விடமாட்டோம். தவறாமக் கலந்துக்குவோம்.

ராஜலட்சுமி: கல்யாணத்துக்கு முன்னாடி திண்டுக்கல் மாவட்டத்துல முச்சந்தி பூஜைன்னு சொல்லுவாங்க. அதாவது மழை வரணும்னு முச்சந்தில்ல அம்மன் சாத்திக் கும்புடுவாங்க. அது என்னன்னா, குடத்தின் மீது தேங்காய் வைத்து மஞ்சள் பூசி, அதற்குப் புடவை கட்டி விட்டு அம்மனாக் கொண்டாடி வேண்டுவாங்க. அப்போ அம்மன் தாலாட்டுன்னு ஒண்ணு பாடுவாங்க. எங்கம்மா 'அந்த பூஜைக்குப் போய் கலந்துகொண்டு மாரியம்மன் தாலாட்டு பாடு'ன்னு சொல்லுவாங்க. அப்போ நான் மூணாவதோ நாலாவதோ படிக்கிறேன். எனக்கு அந்தப் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தாலே பிரமிப்பா இருக்கும். ஏன்னா மிகப்பெரிய பாட்டு அது. 45 நிமிடங்கள் ஆகும் பாடி முடிக்க. அதை என்னால் பாட முடியுமான்னு சந்தேகமாவே இருக்கும். ஆனால் ஒருநாள் அது நிகழ்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`எல்லாம் கோவிந்தனின் மகிமை!' - இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த நாள் நினைவுகள்!

மாரியம்மன் தாலாட்டுப் பாடுகிறவர் வரவில்லை. ஊர்க்காரங்க என்கிட்ட அந்தப் புத்தகத்தைக் கொடுத்துப் பாட சொன்னாங்க. மாரியம்மனை வேண்டிக்கிட்டுப் பாட ஆரம்பிச்சேன். பொதுவா அம்மன் தாலாட்டுப் பாடினா சிலருக்கு சாமி வரும். வரணும். அதுதான் ஐதிகம். நானோ முதல்முறை பாடுறேன். யாருக்கும் சாமிவருமான்னு உள்ளுக்குள்ள சந்தேகம். ஆனா பாடத்தொடங்கினதுமே நான் என்னை மறந்துட்டேன். நான் பாடி முடிக்கிறதுக்குள்ளையே நிறையபேருக்கு சாமி வந்தது. அது அந்த அம்மாவோட அருள்.

செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி
செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

அதேபோன்று நிலக்கோட்டையில் நடக்கும் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு ரொம்ப விசேஷம். அப்போ நடந்த அற்புதங்கள் அநேகம். கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு புரட்டாசி மாதம் அங்கே போயிருந்தோம். பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கார். அப்போ எனக்குத் தோணுது, 'பெருமாளுக்குப் பின்னாடி ஒரு ஆர்ச் இருந்த நல்லா இருக்குமேன்னு. அப்போ நான் வேண்டிக்கிட்டேன். அடுத்த வருஷத்துக்குள்ள நான் கொஞ்சம் முன்னேறிவந்தா நிச்சயம் ஒரு ஆர்ச் செய்து வைக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன். அந்த வருஷம்தான் நாங்க சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்குத் தேர்வானோம்னு சொல்லணுமா என்ன... அடுத்த வருஷம் வேண்டிக்கிட்ட மாதிரி ஆர்ச் செய்து வைத்தோம்.

இதைப்போன்று போக நினைத்து இதுவரைப் போகாத கோயில் எது? தன்னை மறந்து பாடும் பாடல் எது... ஏன்? உங்கள் பூஜையறைப் பொக்கிஷம் எது? கடவுள் உங்கள் வாழ்வில் புரிந்த அற்புதம் என்று எதைச் சொல்வீர்கள்?
இப்படிப் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமான் பதில்களை பாட்டோடு பதில் சொல்லி அசத்தியிருக்கிறார்கள் செந்தில்கணேஷ் ராஜலட்சுமி தம்பதியினர். மண் மணம் மாறாத அவர்களின் முழுப் பேட்டியையும் கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு