Published:Updated:

`நான் நானாக இருக்க பாபாவே காரணம்!'

வசந்த் எஸ் சாய்
பிரீமியம் ஸ்டோரி
வசந்த் எஸ் சாய்

வி.ஐ.பி ஆன்மிகம் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய்

`நான் நானாக இருக்க பாபாவே காரணம்!'

வி.ஐ.பி ஆன்மிகம் திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய்

Published:Updated:
வசந்த் எஸ் சாய்
பிரீமியம் ஸ்டோரி
வசந்த் எஸ் சாய்

திரைப்பட இயக்குநர் வசந்த் எஸ் சாய், திரைக்கதை, வசனம், இயக்கம் மட்டுமல்ல; எதைச் செய்தாலும் நேர்த்தியாகச் செய்யக் கூடியவர். எதைப் பேசினாலும் தெளிவாக, செறிவாகப் பேசக் கூடியவர். ஆன்மிகம் பற்றி அவரிடம் பேசினால், மணிக்கணக்காகப் பேசிக் கொண்டே இருக்கலாம். அத்தனை விஷயங்கள்... அவ்வளவு அனுபவங்கள்! ‘சக்தி விகடனு’க்காக அவருடைய ஆன்மிக ஈடுபாடு குறித்தும் மறக்க முடியாத சில அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார்.

`நான் நானாக இருக்க 
பாபாவே காரணம்!'

``எங்கள் ஊர் தேவகோட்டை. அங்கே வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கும் கலங்காத கண்ட விநாயகர் கோயில் மிகவும் பிரபலம். அவர்தான் எனக்கு முதலில் அறிமுகமான தெய்வம். ஐநூற்றீஸ்வரரும் பார்வதி தேவியும் அங்கே உண்டு.

எனக்கு நன்கு நினைவிருக்கிறது... மூன்றரை - நான்கு வயதில், அப்பா, அம்மாவுடன் அந்தக் கோயிலுக்குத் தினமும் போயிருக்கிறேன். தினசரி அர்த்தஜாமப் பூஜைக்குக் கண்டிப்பாகப் போவோம். அந்த வயசிலேயே காலச்சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று எல்லா பூஜைகள் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். வீட்டில் வெள்ளிக்கிழமைதோறும் அம்மா பூஜை செய்வார்கள். பூஜைக்குத் தேவையானதை எல்லாம் நான்தான் வாங்கி வந்து கொடுப்பேன்.

சென்னைக்கு வந்து செட்டிலானதில் இருந்து, என் மனதுக்கு நெருக்கமான கோயிலாக இருப்பது கபாலீஸ்வரர் கோயில். அங்கே இருக்கும் நர்த்தன விநாயரை மிகவும் பிடிக்கும். சிறு வயதில் அம்மாவுடன் போகும்போது, கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு சிவாசார்யர் தினமும் கல்கண்டு தருவார். அவருக்கு ‘கல்கண்டு சாமி’ என்று பெயர் கூட வைத்திருந்தேன். அதேபோல், லஸ்கார்னர் நவசக்தி விநாயகர் கோயிலுக்கும் எனக்கும் ஓர் ஆச்சர்யமான தொடர்பு உண்டு. நாங்கள் சென்னைக்கு வந்த தினத்தில்தான் அங்கே கும்பாபிஷேகம். அதனால், வந்து இறங்கிய அன்றே அங்கே யாகசாலை, கும்பாபிஷேகம் என்று எல்லாவற்றையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

கோயிலுக்கு அம்மா, அப்பாவுடன் போய்விட்டு வருவேனே தவிர, முறையாக பிரார்த்தனை செய்வதெல்லாம் அந்த வயதில் தெரியவில்லை. கொஞ்சம் விவரம் தெரிந்தபோது, அம்மா ஒரு முறை ‘இன்னைக்கு நம்ம கேஸ் கோர்ட்ல தீர்ப்புக்கு வருது. நியாயமாக நமக்கு வரவேண்டிய பணம்... குழந்தை வேண்டிக்கிட்டா நடக்கும். நீ சாமிகிட்ட வேண்டிக்க’ என்று சொன்னார்.

`நான் நானாக இருக்க 
பாபாவே காரணம்!'

அப்போதுதான் முதல்முறையாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தைக் கேட்டு கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். அந்த வழக்கில் தீர்ப்பு எங்கள் பக்கம் வந்து, நியாயம் ஜெயித்தது. அதற்குப் பிறகு எத்தனையோ பிரார்த்தனைகள்... எனக்குள் இயல்பாகவே இருந்த கடவுள் பக்தி விஸ்வரூபமெடுத்த தருணங்கள்... பல கோயில்களுக்குப் போகக் கிடைத்த வாய்ப்புகள்... இப்படி எல்லாமே அமைந்தன.

ஶ்ரீரங்கம் பெருமாள் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அதன் பின்னர் திருச்செந்தூர் கோயில், பாபா கோயில் என்று அது நீண்டுகொண்டே போகும். என் குரு சாய்ராம். ஆனால் மகா பெரியவா, ரமணர், யோகி ராம்சுரத்குமார், குடவாசல் சுவாமி என்று பல குருமார்கள் மேல் மிகுந்த அபிமானம் கொண்டு, அவர்கள் எல்லோரையுமே வணங்கும் பழக்கம் உண்டு.

1973 - 74 களில் மயிலாப்பூர் பாபா கோயிலைத் தாண்டித்தான் பள்ளிக்குப் போய் வருவேன். ஆனால் ஒருநாள்கூட கோயிலுக்குள் போனதில்லை. ஒருமுறை அப்பா ஷீர்டிக்குப் போனபோது, துணைக்கு என்னையும் அழைத்துச் சென்றார். அப்போதுதான் சாய்ராம் பற்றித் தெரிந்துகொண்டேன். பாபாவை முதன்முதலில் ஷீர்டியில்தான் தரிசித்தேன். அந்தக் கண்களும் கருணையும் என்னை ஆகர்ஷித்தன. அப்போதிலிருந்து மயிலாப்பூர் பாபா கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். நான் நானாக இருக்கக் காரணமே அவர்தான். அதனால்தான் என் பெயரில்கூட அவரை இணைத்துக் கொண்டேன்.

குரு வழிபாடு என்றதும் எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது, ‘யூத் அசோஸியேஷன்’ அமைப்பிலிருந்து நாங்கள் சில பேர் காஞ்சிபுரத்துக்குச் சென்னை யிலிருந்து நடந்தே போனோம். கால் வலி பின்னியெடுத்தது. கால்கள் இரண்டும் வீங்கிவிட்டன. காஞ்சி மடத்துக்கு மகா பெரியவாளை சேவிப்பதற்காகப் போய் நின்றோம். பெரியவாளிடம் நாங்கள் நடந்தே வந்திருக்கும் விஷயத்தை மடத்தினர் சொல்ல, அவரை நாங்கள் சேவிக்கிறோம்...

அப்போது அவர் தன்னுடைய கால்களை மெதுவாகப் பிடித்து (அமுக்கி) விட்டுக் கொண்டார். என்ன ஆச்சர்யம்... எங்களின் கால் வலி போன இடம் தெரியவில்லை... சிலிர்க்கவைக்கும் நிகழ்வு அது!

`நான் நானாக இருக்க 
பாபாவே காரணம்!'

நான் பாலகுமாரனின் தீவிர ரசிகன். அவர் மூலமாக அறிமுகமான யோகி ராம்சுரத்குமாரையும் மிகவும் பிடிக்கும். ‘பொங்கு கோபமாயினும் புன்சிரிப்பு ஆயினும் யோகி ராம்சுரத்குமார் என்னை வந்து ஆளுவாய்!’ என்பது எப்போது என் மனதுக்குள் ஓடும் வரிகள்!

என்னைப் பொறுத்தவரை ‘பக்தி’ என்பது தனிமனிதரைப் பொறுத்த விஷயம் என்று நினைக்கிறேன். நான் சரியாக இருக்கிறேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் சரியாக இருக்கவேண்டுமென நினைக் கிறேன். நான் நல்லவனா? தெரியாது. ஆனால், நல்லவனாக இருக்க நினைக் கிறேன். இதை நோக்கிச் செல்லுவதுதான் என்னைப் பொறுத்தவரையில் பக்தி!

‘அன்பே சிவம்’ என்ற பாடலைச் சொல்லாமல் எந்த மீட்டிங்கிலும் பேச்சைத் தொடங்கமாட்டேன். பக்தி இலக்கியங் களை நிறைய வாசிக்கிறேன்; நிறையக் கேட்கிறேன். நாரத கான சபாவில் மார்கழி மாதம் வழக்கமாக திருப்பாவை உபன்யாசம் கேட்கப் போவேன். முன்பெல்லாம் ஆஸ்திக சமாஜத்தில் வாரியார் பேசுவார். 20 நாட்களும் விடாமல் தொடர்ந்து போய் கேட்பேன். அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்கு மிகவும் விருப்பமானவை!

``சித்தர்களின் மேல் எனக்கு மிகப் பெரிய காதல் உண்டு. நான் ஒரு திருமூலர் பைத்தியம். அவருடைய திருமந்திரத்தில் பல பகுதிகள் மனப்பாடம். பக்தி இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், ஆறுமுகத் தமிழனின் எழுத்துகள் மிகவும் பிடித்தவை. ராஜாஜி எழுதிய ‘சக்ரவர்த்தி திருமகன்’தான் என்னுடைய பைபிள். பள்ளி நாட்களில்-விடுமுறையில், வீட்டில் தினமும் ராமாயணம் ஒரு பக்கம் படிப்போம். அந்தப் பழக்கம் இப்போது வரை தொடர்கிறது’’ என்கிறார் சின்னச் சிரிப்புடன்.

பேசிக்கொண்டே இருக்கலாம் போன்ற உணர்வினை ஏற்படுத்தும் கருத்துகள், பாடல் வரிகள், அனுபவங்கள்... இயக்குநர் வசந்த்தின் மறுபக்கம் நம்மை வியப்பின் உச்சிக்குக் கொண்டு செல்ல, ஆச்சர்யம் அகலாமலேயே விடைபெற்றோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism