ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோயில். பிரதி தமிழ் மாதம்தோறும் அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட நாள்களில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும். பூஜைக்கு இரண்டு நாள்கள் முதல் நான்கு நாள்கள் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட பிரதான அமாவாசை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து மலையேறி சுந்தரமகாலிங்க சாமியை தரிசனம் செய்வர்.

இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை சதுரகிரியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது. எனவே, சித்தர்கள் இன்றளவும் வாழும் பெருமை வாய்ந்த சதுரகிரி மலைக்கு ஆடி அமாவாசை நாளில் சாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள், சாதுக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டியிடம் பேசினோம், "பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சாமி கோயில் ஆடி அமாவாசை விழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சதுரகிரி மலைப்பாதையில் செய்யவேண்டிய அடிப்படை தேவைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 28-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மகாலிங்க சாமியை தரிசனம் செய்வதற்கு வரும் 26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை 4 நாள்கள் மட்டும் பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சாமிதரிசனம் செய்ய, பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலையேறி செல்லலாம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தூக்கியெறியும் வகையான பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கோயிலில் பக்தர்கள் இரவு தங்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையை பின்பற்றும் வகையில் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மலையேறும் பக்தர்களின் வசதிக்காகத் தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துக்கொடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்குப் பின்பு சதுரகிரி மலையில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா என்பதால், பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்றாகக் கூடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 1,200-க்கும் மேற்பட்ட போலீஸார், வனத்துறை, தீயணைப்புத்துறை காவலர்கள், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வத்திராயிருப்பு, தாணிப்பாறை பிரிவு ஆகிய இரு இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையமும், வாகன நிறுத்துமிடமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
