மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீன மடாதிபதியை நாற்காலிப் பல்லக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறையில் பழைமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கயிலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா மற்றும் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா உள்ளிட்டவை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாள்கள் கொண்டாடப்பட்டு பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது.
அந்த விழாவின் தொடர்ச்சியாக இன்று ஆதீன குரு முதல்வர் குருஞானசம்பந்தரின் குரு கயிலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது. ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்திலிருந்து நாற்காலிப் பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான பூங்காவிலுள்ள ஐந்து குருமகா சந்நிதானங்களின் குருமூர்த்தங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு, தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சந்நிதானத்தை குருவாக பாவிப்பதால் நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது மரபு அதனடிப்படையில் குருமகா சந்நிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார்.