Published:Updated:

உதவலாம் வாருங்கள் !

உதவலாம் வாருங்கள் !

வாசகர்களே! 

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம்.  அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களைகேள்விகளை 'உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்துகொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை 'உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

சோழி பார்த்து பிரச்னம் சொல்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். சோழி பிரச்னம் பார்ப்பதற்கு உரிய புத்தகம் எதுவும் இருக்கிறதா? இருந்தால் அது எங்கே கிடைக்கும் என்பதைத் தெரிவித்தால், எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உதவலாம் வாருங்கள் !

கே.ராதா கிருஷ்ணன், சேலம்

என்னுடைய சொந்த ஊர் காரைக்குடிக்குப் பக்கத்தில் உள்ள ஏகிணிவயல்! என் தந்தையின் சிறு வயதிலேயே திருச்சிக்குக் குடிபெயர்ந்துவிட்டோம். அதன் பிறகு, அந்த ஊருடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. தற்போது நான் பல பிரச்னைகளால் கஷ்டப்படுவதால், குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும் என்று சொல்கிறார்கள். ஏகிணிவயல் ஊரைப் பற்றியும் அந்த ஊரைச் சேர்ந்தவர்களின் குலதெய்வம் எது என்பது பற்றியும் விவரம் தெரிந்தவர்கள் பகிர்ந்து கொண்டால் பெரிய உபகாரமாக இருக்கும்.

ஆர்.சுந்தரம், திருச்சி

வெள்ளிக்கிழமை உதயத்துக்கு முன் ஐந்து முக விளக்கு ஏற்றி வழிபடக்கூடிய 'பாலா திரிபுரசுந்தரி தீப ஸ்தோத்திரம்’ 15 ஸ்லோகங்கள் கொண்டது. அதன் ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் ஒரு நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று நான் கேள்விப்பட்டிருக் கிறேன். அதைப் பற்றி தெரிந்த ஆன்மிக அன்பர்கள், ஸ்லோகத்துடன் கூடிய நமஸ்கார முறையைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஜெ.மனோன்மணி ஜோகேந்தர், கோவை

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது என்பதால், தவறாக உச்சரித்துவிடுவேனோ என்ற பயத்தில், சுந்தர காண்டம், நாராயணீயம், கீதை அனைத்திலும் தமிழ் அர்த்தத்தை மட்டும் தினம் ஒரு சர்க்கம் படிப்பேன். எனக்கு நாராயண கவசம் 44 ஸ்லோகத்துக்கும் தமிழ் அர்த்தம் வேண்டும். வயது முதிர்ச்சி காரணமாக வெளியே சென்று வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். நாராயண கவசம் ஸ்லோகத்துக்கான அர்த்தம் தமிழில் உள்ள புத்தகம், சக்தி விகடன் வாசகர்கள் யாரிடமாவது இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எம்.பிரேமா, சென்னை

தக்ஷிண ஸம்ப்ரதாய ஸ்ரீஹரி நாம ஸங்கீர்த்தனம் என்னும் புத்தகத்தில் உள்ள பாடல்களை அர்த்தத்துடன் சொல்லித் தரும் வகுப்புகள் சென்னையில் எங்காவது நடைபெறுகிறதா? விவரம் தெரிந்த வாசகர்கள் விலாசத்துடன் தெரிவித் தால், எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

எஸ்.விசாலம், சென்னை

உதவிக்கரம் நீட்டியவர்கள்...

** சக்தி விகடன் 1.9.15 தேதியிட்ட இதழில், ஓர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, ஒவ்வொரு வருஷமும் வருஷாபிஷேகம் எந்த நாளில் நடத்தவேண்டும் என்று அருப்புக்கோட்டை வாசகர் குருசாமி கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு, வருஷம்தோறும் நடத்த வேண்டிய வருஷாபிஷேகத்தை, கும்பாபிஷேகம் நடைபெற்ற தமிழ் மாதம், நட்சத்திரம், திதி வரும் நாளிலேயே செய்ய வேண்டும். ஆங்கில மாதம், தேதி அடிப்படையில் நடத்துவது சரியல்ல என்று திருச்சி வாசகி சரோஜா சுதர்சன் தெரிவித்து இருக்கிறார்.

** சக்தி விகடன் 1.9.15 தேதியிட்ட இதழில், ஓவியர் வினு அவர்கள் வரைந்த ஸ்ரீஜெய அனுமன் வண்ணப்படம் தேவைப்படுவதாக சென்னையைச் சேர்ந்த வசந்தா என்ற வாசகி கேட்டிருந்தார்.  இதைப் படித்துவிட்டு, டெல்லியில் இருந்து லட்சுமி என்ற வாசகி, வினு வரைந்த ஸ்ரீஜெய அனுமன் வண்ணப்படம் அனுப்பி வைத்திருந்தார். அந்தப் படம், வாசகி வசந்தாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

** சக்தி விகடன் 15.9.15 தேதியிட்ட இதழில், 'அம்பிகையின் ஷோடச (16) நாமங்களை சேலம் வாசகர் கே.குணசேகரன் கேட்டிருந்தார். இதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட 16 நாமங்களையும் சென்னை வாசகர் ஹரிஹரன் அனுப்பி வைத்திருந்தார். அந்த நாமங்கள் அவற்றுக்கான பலன்களோடு இங்கே உங்களுக்காகவும்...

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் உள்ள அம்பிகையின் ஷோடச நாமங்கள்: 16

ஓம் ஸ்ரீ ஸ்வாதீன வல்லபாயை நம: (நல்ல கணவனை அடைய)

ஓம் மகா ஸக்த்யை நம: (மூவகை சக்திகளை அடைய)

ஓம் பக்த சௌபாக்யதாயின்யை நம: (சகல சௌபாக்கியங்களும் பெற)

ஓம் ஸ்ரீ கர்யை நம: (செல்வம் பெற)

ஓம் புருஷார்த்த ப்ரதாயை நம: (அறம், பொருள், இன்பம், வீடு இவற்றை அடைய)

ஓம் விக்ன நாசின்யை நம: (எடுத்த காரியம் தடங்கல் இன்றி நிறைவேற)

ஓம் ஸர்வ வியாதி ப்ரசமந்யை நம: (வியாதிகள் விலகவும், வராமல் தடுக்கவும்)

ஓம் தயாமூர்த்யை நம: (கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாக)

ஓம் ஸாம்ராஜ்ய தாயின்யை நம: (நிலம், வீடு, மனை யோகம் உண்டாக)

ஓம் ஸர்வலோக வசங்கர்யை நம: (உயர்ந்த பேச்சாளராகவும், வர்த்தகத்தில் வெற்றி பெறவும்)

ஓம் ஸாமரஸ்ய பராயணாயை நம: (குடும்பத்தில் அனைவரிடத்திலும் சுமுகமாக இருக்க)

ஓம் ப்ராணதாத்ர்யை நம: (சுகப்பிரசவம் உண்டாக, மனோவியாதிகள் நீங்க)

ஓம் தன தான்ய விவர்த்தின்யை நம: (அறுவகை செல்வங்களை அடைய)

ஓம் நாத ரூபிண்யை நம: (சுவாசம் சம்பந்தமான நோய்கள் நீங்க, இசையில் தேர்ச்சி பெற)

ஓம் சுத்த மானஸாயை நம: (தூய்மையான மனப்பக்குவம் பெற)

ஓம் சிவசக்த்யைக்ய ரூபிண்யை நம: (தம்பதிகளிடையே அந்நியோன்னிய உறவு நிலவ)

அடுத்த கட்டுரைக்கு