வாசகர்களே!
கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அதுசார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• எங்கள் குலதெய்வம் பழஞ்சி மாங்காடு பகவதி அம்மன். இந்த தெய்வத்தின் கோயில், இடப்பால் மற்றும் குருவாயூர் (கேரளாவுக்கு அருகில்) ஆகிய இடங்களில் உள்ளது. இந்த தெய்வத்தின் திருவுருவப் படமோ ஓவியமோ என்னிடமோ, எங்கள் உறவினர்களிடமோ ஒன்றுகூட இல்லை. அந்தந்த கோயில்களிலும் புகைப்படம் தற்போது விநியோகம் செய்வது கிடையாது. அதனால், சக்தி விகடன் வாசகர்களிடம் இந்த தெய்வம் தொடர்பான திருவுருவப்படம் அல்லது ஓவியம் இருந்தால் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-கே.எஸ். லட்சுமி, சென்னை
• திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் ‘கோமதி அம்மன்’ எங்கள் குலதெய்வம். அதனால் ஓவியர் கொண்டையராஜு, டி.எஸ்.சுப்பையா இருவரும் வரைந்த ‘கோமதி அம்மன்’ வண்ணப்படம் எனக்கு தேவைப்படுகிறது. சக்தி விகடன் வாசகர்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- பி.ஆர்.லெஷ்மிநாராயணன், பெரியகுளம்
(மேலே வெளியாகியுள்ள ஸ்ரீகோமதியம்மன் வண்ணப்படம், ஓவியர் கொண்டைய ராஜு வரைந்தது. அது, வாசகர் லெக்ஷ்மி நாராயணனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது)
• ஸ்ரீபத்ரகாளி தேவிக்கான ‘கட்கமாலா ஸ்தோத்திரம்’ எனக்குத் தேவைப்படுகிறது. அந்த ஸ்தோத்திரம் அடங்கிய புத்தகம் எங்கு கிடைக்கும் என்று விவரம் தெரிந்த சக்தி விகடன் வாசகர்கள் தகவல் தந்து உதவினால், பெரிதும் மகிழ்வேன்.
- ஸி.கெ.லஷ்மணசர்மா, பாலக்காடு
• இழந்த பொருட்கள் மீண்டும் கிடைத்திட, கார்த்தவீர்யார்ஜுனன் என்ற தெய்வத்தை வழிபட வேண்டும் என்று நண்பர் ஒருவர் அறிவுறுத்தினார். அந்த தெய்வம் யாருடைய அம்சம் என்பதையும், அந்த கடவுளுக்கான வழிபாட்டு மந்திரங்களும் எனக்குத் தேவைப்படுகின்றன. இது தொடர்பான
புத்தகங்கள் மற்றும் குறிப்பிட்ட கடவுளின் படங்கள் எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். விவரம் அறிந்த சக்தி விகடன் வாசகர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன்.
-கே.ராதாகிருஷ்ணன், சேலம்
வி.ஐ.பி.பதில்கள்
* நம் கலாசாரத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே தொடர்பு உண்டு என்கிறார்களே, அப்படியா?
- சி.கார்த்திகேயன், சாத்தூர்
பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே, விஞ்ஞானத்தை தாண்டிய நிறைய தகவல்களை, நமது சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.

குளோனிங் குறித்து நாமறிவோம். இந்த விஞ்ஞான முறையை ரக்தபீஜன் கதை மூலம் விவரிக்கும் தேவி மகாத்மியம். இந்த அசுரனின் ரத்தம் சிந்தும் இடங்களில் எல்லாம் அவனைப் போன்ற அசுரர்கள் தோன்றிக்கொண்டே இருப்பார்களாம்! நாம் குருபகவானாகப் பார்ப்பதை, விஞ்ஞானம் ஜுபிடர் என்கிறது. அதற்கு அவர்கள் மஞ்சள் நிறத்தை பொருத்தியிருக்கிறார்கள். சாஸ்திரப்படி குருவுக்கு உகந்தது மஞ்சள் நிறம்தான். இதுபோன்ற உதாரணங்கள் இன்னும் ஏராளம் உண்டு!
உதவிக்கரம் நீட்டியவர்கள்
• சக்தி விகடன் 13.10.15 தேதியிட்ட இதழில், ‘மஹாலஷ்மி வருவாயம்மா உன் மலரடி சரணம் புகுந்தேனம்மா’ என்ற பாடலுடன் தொடங்கும் பாமாலை மற்றும், அஷ்டோத்திரம் அடங்கிய புத்தகம் தேவைப் படுவதாக சென்னை வாசகி சி.புஷ்பா கேட்டிருந்தார்.
இதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட புத்தகத்தின் பிரதியை பெங்களூர் வாசகி எம்.விஜயலட்சுமி அனுப்பி வைத்திருந்தார். அந்தப் புத்தகம் சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
• சக்தி விகடன் 29.9.15 தேதியிட்ட இதழில், ‘பாலா திரிபுரசுந்தரி தீப' ஸ்தோத்திரமும், அந்த ஸ்தோத்திரத் துக்கான நமஸ்கார முறை குறித்தும் கோவை வாசகி ஜெ.மனோன்மணி ஜோகேந்தர் கேட்டிருந்தார்.
இதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட ஸ்லோகத்தையும், அதற்கான நமஸ்கார முறையையும் சென்னை கோபாலபுரம் வாசகி ஜி.சரோஜா அனுப்பி வைத்திருந்தார். இந்த ஸ்லோகம் சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
• சக்தி விகடன் 8.12.15 தேதியிட்ட இதழில், நாராயண கவசம் 44 ஸ்லோகத்துக்கும், தமிழ் அர்த்தம் தேவைப்படுவதாக சென்னை வாசகி எம்.பிரேமா கேட்டிருந்தார்.
நாராயண கவசம் 44 ஸ்லோகத்துக்கும், தமிழ் அர்த்தங்களுடன் கூடிய புத்தகத்தை சென்னை திருவெற்றியூர் வாசகர் பி.எஸ்.நடராஜன் அனுப்பி வைத்திருந்தார். குறிப்பிட்ட அந்த புத்தகம், சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.