பிரீமியம் ஸ்டோரி

கரங்களில் புனிதமானதும், உலக உயிர்கள் அனைத்துக்கும் பிறந்த ஊர் இதுதான் என்று சொல்லும் மகிமை கொண்டதுமாகத் திகழும் திருத்தலம் கும்பகோணம்.

‘கோயில்களின் நகரம்’ என்று போற்றப்படும் கும்பகோணத்தில், உலகப் பிரசித்தி பெற்ற மகாமகத் திருவிழா கொண்டாடப்பெறும் இந்த உன்னத நேரத்தில், இந்தத் திருத்தலத்தின் மகிமைகளைப் பலருக்கும் உணர்த்தும் விதமாக ‘கும்பகோணத்தில் உலா’ என்ற தலைப்பில் அரிய பல தகவல்களின் களஞ்சியமாக ஒர் அற்புதமான புத்தகம் வெளிவந்திருக்கிறது.

‘திருப்புகழ் ஞானபானு’ வலையப் பேட்டை ரா.கிருஷ்ணனின் அயராத உழைப்பில் அரியதொரு பொக்கிஷமாக வெளிவந்திருக்கும் இந்த நூலை, மாவிலைத் தோரணம் என்னும் நுழைவாயில் வழியாகச் சென்று பார்க்கும்போதும் படிக்கும்போதும், ‘கும்பகோணம் நகரத்துக்கு இத்தனை சிறப்புகளா?!’ என்று வியப்பில் ஆழ்கிறோம்.

கும்பகோணத்தில் உலா

சோழர்களின் தலைநகராக விளங்கிய பழையாறை என்னும் பழம்பெரும் பதியின் ஒரு பகுதியாக விளங்கிய ஊர் கும்பகோணம் என்ற அறிமுகத்துடன் தொடங்குகிற இந்த நூல், கும்பகோணத்தில் அமைந்திருக்கும் கோயில்களில் உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றின் மகிமைகள் பற்றி அழகுபட விவரிக்கிறது.

‘இந்த ஊருக்கு குடமூக்கு, குடந்தை, கும்பகோணம் போன்ற பெயர்கள் ஏற்பட்டது எப்படி?’ என்ற தெளிவை நமக்கு ஏற்படுத்துவதோடு, கும்பகோணத்தில் அமைந்துள்ள கோயில்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல், கோயில் சார்ந்து வளர்ந்த கலைகள், இலக்கியங்கள், கும்பகோணத்தில் தோன்றிய மகான்கள், ஆன்றோர்கள், சான்றோர்களைப் பற்றியும் விளக்கமுற விவரிக்கிறது.

கும்பகோணத்தில் அமைந்திருக்கும் கோயில்களுடன், சுற்றிலும் அமைந்துள்ள திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருக்கொட்டையூர், திருப்புறம்பியம் போன்ற பல்வேறு கோயில்களையும் இந்த உலாவில் நாம் தரிசிக்கலாம். மேலும், அந்தக் கோயில்களில் மன்னர்கள் செய்த திருப்பணிகளையும், அங்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வுகளையும்கூடத் தெரிந்துகொள்ளலாம்.

கும்பகோணத்தில் உலா

இறைவனின் அருளுடன் கலைகளும் வளர்ந்து செழித்தோங்கும் கும்பகோணம் நகரத்தில், வளம் சேர்க்கும் வணிகமும் தொழிலும் எப்படியெல்லாம் வளர்ந்து வந்திருக்கின்றன என்பதையும் இந்த உலாவில் நாம் விளக்கமுற அறிந்துகொள்ளலாம்.

கருத்துக்கு விருந்தாக கும்பகோணம் பற்றிய பல அரிய தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த நூலில், கண்ணுக்கு விருந்தாக பல அரிய படங்களையும் தேடித் தேடிச் சேர்த்திருக்கிறார் நூலாசிரியர்.

கும்பகோணத்தின் ஆன்மிக மகிமைகளையும், கலை இலக்கியச் சிறப்புகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் தகவல் களஞ்சியமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கும் ஆசிரியரின் முயற்சியும், தேடலும், உழைப்பும் பாராட்டுக்குரியது.

கும்பகோணத்தில் உலா

ஆசிரியர்: வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்,

வெளியீடு:
யுனிவர்சல் பப்ளிஷிங், 142, முதல் தளம், இந்தியன் ஆபீசர்ஸ் பில்டிங், 69, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை-600 014

பக்கங்கள்: 360+16 பக்க வண்ணப் படங்கள்

விலை: ரூ.270/-

தொடர்புக்கு:
9003232722

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு