பிரீமியம் ஸ்டோரி

வாசகர்களே!

கேள்விகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதிலும் ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை-கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும். இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்களது வினாக்களுக்கு வாசகர்களிடம் இருந்தே பதில் பெறப்போகிறோம். ஆமாம்! குறிப்பிட்ட வாசகர்கள் பெற விரும்பும் தகவல்களை... அதுபற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்கள், இந்தப் பகுதியில் பகிர்ந்து கொள்ளலாம். சந்தேகமோ விளக்கமோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம் வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களது தெளிவான முகவரி, இ.மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம். அத்துடன், சக்தி விகடனின் ‘உதவலாம் வாருங்கள்’ முகநூல் பக்கத்திலும் தங்களது சந்தேகங்களை பகிரலாம்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் வெளியீடான ஸ்ரீருத்ரம் புத்தகம் படித்தேன். அதில் தமிழ் விளக்கமும் உள்ளது.

ஆனால், அதன் உண்மையான உள்ளர்த்தம் எனக்கு விளங்கவில்லை. இது குறித்து விரிவான விளக்கங்கள் அடங்கிய புத்தகம் ஏதேனும் இருக்கிறதா? அது தொடர்பான விவரங்களை சக்தி விகடன் வாசகர்கள் தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஒவ்வொரு நவகிரகத்துக்கும் உரிய அஷ்டோத்திர சத நாமாவளி (108) சமஸ்கிருதத்தில் என்னிடம் இருக்கிறது.

அதன் ஒவ்வொரு வார்த்தைக்கும் சரியான அர்த்தம் தெரிந்தால், நன்றாக இருக்கும். இதன் முழு அர்த்தம் அடங்கிய புத்தகம் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்தப் புத்தகம் கிடைக்கும் இடம் அல்லது அதன் அர்த்தங்களை சக்தி விகடன் வாசகர்கள் தெரியப்படுத்தினால் பெரிதும் உதவியாக இருக்கும்.

- கே.எஸ்.பொன்னம்பலம், சென்னை-49

உதவலாம் வாருங்கள்!

மிக அரிய அபூர்வமான ஆன்மிக விஷயங்கள் நிறைந்த பிரபஞ்ச உற்பத்தி என்னும் பழைமையான நூல் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்நூல் எங்கு கிடைக்கும் என்னும் தகவலை யாரேனும் தந்தால் உதவியாக இருக்கும்.

அதேபோல், அம்பாள் உபாசனை அல்லது சக்தி உபாசனை பற்றிய புத்தகங்கள் எனக்குத் தேவைப்படுகின்றன. அந்த புத்தகங்கள், எங்கு கிடைக்கும் என்று தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்களேன். அல்லது, சக்தி விகடன் வாசகர்கள் எவரிடமேனும் இருந்தால் அவற்றை எனக்கு அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

- அ.ஆர்.ஆர்.சுதர்ஸனன், திருச்சி-17

உதவலாம் வாருங்கள்!

உதவிக்கரம் நீட்டியவர்கள்

** சக்தி விகடன் 19.1.16 தேதியிட்ட இதழில், சுப்பிரமணியர் விஞ்சை, வாராஹி மாலை ஆகியவற்றின் துதிகளுடன், குறிப்பிட்ட தெய்வங்களுக்கான பூஜை விவரங்கள் தேவைப்படுவதாக தேனி வாசகர் கே.சுப்பையா கேட்டிருந்தார்.

இதைப் படித்துவிட்டு, குறிப்பிட்ட தெய்வங்களுக்கான பூஜை விவரங்களைப் பிரதி எடுத்து சென்னை வாசகர் சாயி நடராஜன் அனுப்பி வைத்திருந்தார். அது சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

**  விநாயகருக்கு உகந்த நாட்களான சதுர்த்தி தினங்களில் கணேச பஞ்சரத்தினம், கணேச ஸ்தோத்திரம், கணேசாஷ்டகம் முதலான துதிப்பாடல்கள் கொண்ட புத்தகம் தேவைப்படுவதாக மேலூர் வாசகர் கே.கீர்த்தனா கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட துதிப்பாடல்கள் கொண்ட புத்தகத்தைப் பிரதி எடுத்து சென்னை வாசகர் சாயி நடராஜன், எஸ்.பங்கஜம்நாராயணன் மற்றும் திருச்சி வாசகி சரோஜா சுதர்சன்ராம் ஆகியோர் அனுப்பி வைத்திருந்தனர். சம்பந்தப்பட்ட வாசகருக்கு அது அனுப்பி வைக்கப்படுகிறது. அத்துடன், விநாயகர் பற்றிய துதிப் பாடல்கள் அடங்கிய புத்தகம் சென்னை கிரி டிரேடிங் புத்தகக் கடையில் கிடைப்பதாக சென்னை வாசகி எஸ்.சௌந்தரா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

**  சக்தி விகடன் 19.1.16 தேதியிட்ட இதழில், சப்த கரை கண்ட திருத்தலங்கள் தொடர்பான விவரங்களை சென்னை வாசகர் சொ.கண்ணப்பன் கேட்டிருந்தார்.

‘ஆலயப் பிரியர்’ சிவ.சுந்தரம் எழுதி, சுந்தரா பதிப்பகத்தால் (9840538876) ‘சப்த கரை கண்டீஸ்வரர் தலங்கள்’ என்னும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் முழு விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வாசகர் ஜி.கிருஷ்ணரத்னம் தெரிவித்துள்ளார்.

** சக்தி விகடன் 19.1.16 தேதியிட்ட இதழில், 64 யோகினிகள் பற்றிய விவரங்களை, கடலூர் வாசகர் து.கதிர்வேல் ஸ்வாமிகள் கேட்டிருந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோவில் 64 யோகினி தேவியருக்கான கோயில் உள்ளது என்று குறிப்பிட்டு, அந்த 64 தேவியர்களின் திருப்பெயர்களையும் அனுப்பி வைத்திருந்தார் மும்பை வாசகி ஈஸ்வரி நந்தகுமார். அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட வாசகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு