பிரீமியம் ஸ்டோரி

குபேரன் செல்வத்தின் அதிபதி. அவருடைய திசை வடக்கு. நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன் குடியிருக்கும் இடம் சிரசு. குபேர முத்திரையின் மூலம் சிரசின் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த முத்திரையின் மூலம் நமது வேண்டுதல்களை இறைவனிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதாகவே கொள்ளலாம்.

எப்படிச் செய்வது?: இந்த முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு. சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி மற்றும்
கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும்.

மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும்.

முத்திரையின்போது எதை மனதில் நிறுத்தலாம்?

உங்களது குறிக்கோளை மூன்று சொற்கள் அடங்கிய  வாக்கியமாக மாற்றிக் கொள்ளுங்கள். கண்களை மூடி அந்த வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கலாம். அதிலிருந்து ஒரு காட்சி விரியும்.
உங்கள் மனதுக்கு இனிமையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் அக் காட்சியை ஓர் அசையாத சித்திரமாக மனக்கண்ணில் நிறுத்துங்கள். உதாரணத்துக்கு, ‘சகல சௌபாக்கியங்களோடு, மங்களகரமான மனைவியும், குழந்தைகளும் உள்ள ஒரு வீட்டின் சித்திரம்’. இதை மனதில் நிறுத்தியவுடன் கைகளில் முத்திரையை வைக்க லாம். பின்னர் இதே நிலையில் 5 முதல் 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கவும். கவனத்தைக்கலைக்காமல்,  உங்களால் எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.

குபேர முத்திரை!

பயன்கள்: இம்முத்திரையைச் செய்து வரும் போது, உடலில் மண் மற்றும் நீர் பூதம் குறைக்கப்படுவதால், ஆழ் மனதில் தேவையற்ற எதிர்மறை எண்ணங்கள் அழிக்கப்படுகின்றன.

• செல்வம் மட்டுமல்ல, நமது உயர்ந்த குறிக்கோள் எதுவாயினும் அதை அடைய உதவும் முத்திரை இது. எந்தவொரு பெரிய செயலைத் துவங்குவதாக இருந்தாலும் அதற்குமுன் இந்த முத்திரையைச் செய்வது நன்கு பலனளிக்கும்.

•   தீ, காற்று மற்றும் ஆகாய பூதங்கள் சமநிலையில் இயக்கப்படுவதால், விசுத்தி மற்றும் ஆக்ஞா சக்கரங்கள் இயங்கத் தொடங்கும். எனவே பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் மற்றும் மூளை பிரகாசமாகச் செயல்பட்டு ஆழ்மன அமைதி கிட்டும்.

• பார்வை குறைபாடு, காதில் இரைச்சல், வலி, தலையில் நீர் கோத்தல், மூக்கடைப்பு ஆகியவை நீங்கும். இந்த முத்திரையை ஒரு மண்டலம்  (48 நாட்கள்) செய்து வர, மனதில் உள்ள குழப்பங்கள், அழுத்தம் தரும் எண்ணங்கள் நீங்கித் தெளிவு கிடைக்கும். மருக்கள், கருமை நீங்கி முகம் பொலிவடையும்.

•   இந்த முத்திரை ஆல்பா தியான நிலைக்கு நம்மை எடுத்துச் செல்கிறது. அதாவது ஆழ்மனதின் கதவுகள் திறக்கப்படுகின்றன. எனவே தொலைந்த பொருளைத் தேடவும், பொருள் வைத்த  இடத்தை ஞாபகப்படுத்தி எடுக்கவும், விரும்பிய நிறமுள்ள ஆடைகள், அணிகலன்கள் நம்மைச் சேரவும், ஆசைப்பட்ட பொருளை வாங்கவும், இம்முத்திரையைச் செய்து பயனடையலாம்.

•   குபேர பூஜையோ, மகாலட்சுமி யாகமோ செய்ய இயலாத நிலையில் உள்ளவர்களும் குபேர முத்திரையை செய்து வந்தால், சகல ஐஸ்வர்யங் களும் பெற்று நிறைவாக வாழலாம்.

தொகுப்பு: ப்ரீத்தி, படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு