
படம் : ந.வசந்தகுமார்
வணக்கம்.
‘ஹேவிளம்பி’ வருடம் தொடங்கவிருக்கிறது. மங்கலம் பொங்கும் ‘தாரண’ தமிழ்ப் புத்தாண்டில் தொடங்கிய உங்கள் சக்தி விகடனின் ஆன்மிகப் பயணம், 14-வது வருடத்தில் வெற்றிகரமாகப் பீடுநடை போடுகிறது. இதற்கு முழுமுதற் காரணம், உங்களின் அன்பும் அக்கறையும் கூடிய ஒத்துழைப்புதான் என்பதில் ஐயமில்லை.
இத்தனை வருடங்களில், ஒவ்வொரு தருணத்திலும் நீங்கள் அளித்த ஆலோசனைகளும் கருத்துகளுமே சக்திவிகடன் மென்மேலும் பொலிவுபெற பெரும் உந்துதலாக இருந்தன என்றால் மிகையில்லை. அதற்காக முதற்கண் எங்களின் நன்றியை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.
ஒவ்வோர் இதழிலுமே உங்களது விருப்பத்துக்கு ஏற்ப பல்வேறு ஆன்மிகத் தகவல்கள் இடம்பெறும் என்றாலும், ஆண்டு சிறப்பிதழில் புதுப்பொலிவு பெறும் சக்தி விகடன். அந்த வகையில், இந்த 14-ம் ஆண்டு சிறப்பிதழிலும் உங்களின் மனம் கவரும் புதிய தொடர்களும், புதிய பகுதிகளும் ஆரம்பமாகின்றன.

சனங்களின் சாமிகள்: மனிதர்களாக நம்முடனேயே வாழ்ந்து மறைந்து, நம் மக்களால் தெய்வமாகக் கொண்டாடப்படுபவர்களின் கதைகளைச் சொல்லும் மண்மணக்கும் தொடர் இது.
கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்: காலத்தில் உறைந்துவிட்ட நம் முன்னோர் வாழ்க்கையைச் சரித்திரக் கண்கொண்டு பார்க்கவைக்கும் தொடர். அவர்கள் விட்டுச்சென்ற தடயங்கள் கட்டடங்களாய், கோயில்களாய், அணைகளாய், கலைப் பொருள்களாய், இலக்கியங்களாய் நம்முடன் இருக்கின்றன. அவற்றை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் அற்புத பயணம் இது.
குறை தீர்க்கும் கோயில்கள்: அன்பர்களது உடற்குறைகளைக் களைவதுடன், அவர்களது பிறவிப் பிணியையும் போக்கும் இறையின் வல்லமையை உணர்த்தும் ஆலயங்களைத் தேடிக் கண்டடைய உதவும் தொடர்.
புதிய புராணம்: புராணங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டவை வெறும் கதைகள் மட்டுமல்ல, நமக்கான வாழ்க்கைப் பாடங்களும்கூட. அந்தப் பாடங்களை மிக எளிமையாய் விளக்கி, வாழ்வின் புதிர்களை அவிழ்த்துப் புனிதமாக்கும் புதிய புராணம் இது.
மேலும், ஏற்கெனவே ஆனந்த விகடன் இதழில் வெளியாகி வெற்றிபெற்ற, மகான்களின் மகத்துவத்தை விவரிக்கும் ‘குருவே சரணம்’ தொடரும் இந்த இதழ் முதல் இடம்பெறுகிறது. இவை தவிர, புதுப்பொலிவுடன் புதிர்ப்பகுதி, பெண்களுக்கான பூஜையறை பொக்கிஷமாகத் திகழப்போகும் ‘சக்தியர் சங்கமம்’, ஆகிய பல புதிய பகுதிகளுடன் மலர்கிறது இந்தச் சிறப்பிதழ்.
அன்பு வாசகர்களே...! ஒவ்வொரு பகுதியையும் படியுங்கள்; ரசியுங்கள்; உங்களின் மேலான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
மிக்க அன்புடன்,
ஆசிரியர்.