
மனதைக் கவரும் பூக்களில் ஒன்று பாதிரி. வெளிர் மஞ்சள் மற்றும் அடர் மஞ்சள் வண்ணத்தில் திகழும் இப்பூவைக் கூன்மலர், வளை மலர் என்றெல்லாம் சிறப்பிப்பர். வடமொழியில் இதற்குப் ‘பாடலம்’ என்று பெயர். இதைக் கானப் பாதிரி, அத்தப் பாதிரி என்று வகைப்படுத்துவார்கள்.
பாதிரி மலரை சிவனார் சூடி மகிழ்வதாலும், பாதிரி மரத்தின்கீழ் இருப்பதாலும் பாதிரியப்பர் என்ற திருப்பெயர் அவருக்குண்டு. புலிக்கால் முனிவர் வழிபட்ட சிவத்தலம் ஒன்றின் தல மரம், பாதிரி மரம். அதுவே திருப்பாதிரிப்புலியூர் ஆகும். இங்கே அருள்பாலிக்கும் இறைவனுக்குப் பாடலீசுவரர் என்று திருப்பெயர்.
சங்க இலக்கியங்களில் சூல்கொண்ட பெண்ணின் வயிறுபோல் வளைந்திருப்பதாக இந்தப் பூக்களைக் குறித்த தகவல் உண்டு. வேறு சில நூல்களில், யாழுக்குத் தைக்கப்பட்ட தோல் பைக்கு உவமையாக இந்த மலர் சொல்லப்பட்டுள்ளது.
பாதிரி மலரை நத்தையின் நாக்குக்கு உவமையாகச் சொல்லும் குறிப்பு சீவக சிந்தாமணியில் உண்டு. ‘நாலடியார்’ பாதிரி மலரின் குளிர்தரும் தன்மையைச் சுட்டிக்காட்டும். குளிர்ச்சியைத் தருவதால் இதற்குத் `தண் பாதிரி' என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இதமும் குளிர்ச்சியும் தருவதால் இதை நீரில் இட்டுவைக்கும் வழக்கம் இருந்ததாம். பானையில் இந்தப் பூக்களை இட்டு மூடிவைத்துவிட்டு, சில மணி நேரத்துக்குப் பிறகு, பூக்களை எடுத்துவிட்டு நீரை நிறைத்து வைப்பார்களாம். இதனால், அந்த நீர் குளிர்ச்சியைப் பெறுவதுடன் மணமும் சுவையும் கொண்டதாக இருக்கும் என்பார்கள்.