Published:Updated:

`200 ஆண்டுப் பாரம்பர்ய வழிபாடா... ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலா?!' - குழம்பும் காரைக்குடி பக்தர்கள்

`200 ஆண்டுப் பாரம்பர்ய வழிபாடா... ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலா?!' - குழம்பும் காரைக்குடி பக்தர்கள்
`200 ஆண்டுப் பாரம்பர்ய வழிபாடா... ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலா?!' - குழம்பும் காரைக்குடி பக்தர்கள்

200 ஆண்டுகளாக, ஒரு ஊரே வண்டிகட்டிக்கொண்டு வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபட்டுவரும் பாரம்பர்யம், இந்த ஆண்டு தேர்தலால் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மக்கள், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சித்திரைத் திருவிழாவா... இல்லை ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலா...? என்ற குழப்பத்தில் உள்ளனர்.

காரைக்குடிக்கு அருகே கீழச்சீவல்பட்டி என்னும் ஊரில் இருந்து, பெருந்திரளான மக்கள், இரட்டை மாட்டு வண்டிகள் கட்டிக்கொண்டு, ஆறு இரவுகள் பயணித்து, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் வந்தடைவர்.  சித்திரை இரண்டாம் செவ்வாய் அன்று, வைத்தீஸ்வரன் கோவிலில் கோயில்கொண்டுள்ள அருள்மிகு வைத்தீஸ்வரனை வழிபடுவர். இந்த வழக்கம் கடந்த 200 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. 

200 வருடங்களுக்கு முன்பு,  ‘பி.அழகாபுரி’ என்னும் கிராமத்தை சேர்ந்த மு.க.செட்டியார் என்பவரது வம்சத்தில் ஒருவருக்குத் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. அவரது கனவில் தோன்றிய வைத்தீஸ்வரர், ‘தான் வைத்தீஸ்வரன் கோவிலில் இருப்பதாகவும், தன்னை வந்து வழிபட்டால் உடல் நலம் சரியாகும்’ என்றும் அருளியிருக்கிறார். அவரது குடும்பத்தினர், மறுநாளே வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டுவந்து, சுவாமியை தரிசித்ததும் அவரது வயிற்றுவலி குணமடைந்தது.


இதைக்கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள், அடுத்த வருடம் முதல் அவர்களோடு சேர்ந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் பயணப் பட ஆரம்பித்தனர். இப்படித் தொடங்கிய இந்த வண்டிப் பயணம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்களோடு நிகழும் மிகப் பெரிய ஆன்மிகப் பயணமாக மாறிவிட்டது. 

தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினருக்கு, தையல்நாயகி அம்மனே குலதெய்வம். சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை, காரைக்குடியில் இருந்து நடைப்பயணமாகப் புறப்பட்டு இரண்டாவது செவ்வாய்க்கிழமை வைத்தீஸ்வரன் கோவில் வந்து சேர்வது வழக்கம். குலதெய்வம் என்பதாலும், ‘தையல்நாயகியம்மன்’ தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின் படியும், மக்கள் சீர்வரிசையுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இரண்டாம் செவ்வாய்க்கிழமை காலையில் நடக்கும் முதல் பூஜையில் கலந்துகொண்டு, பிறகு பக்தர்கள் ஊர் திரும்புவர். 

வழக்கம்போல, இந்த ஆண்டும் சித்திரைமாதத் திருவிழா வைத்தீஸ்வரன்கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை களைகட்டும் என்று எதிர்பார்த்த நிலையில், திருவிழாவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வியாபாரிகளுக்கும், பக்தர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். 

இந்த ஆண்டு, வருகிற 23 - ம் தேதி வைத்தீஸ்வரன்கோயில் சித்திரைத் திருவிழா என்பதால் பக்தர்கள் அனைவரும் காரைக்குடியில் இருந்து 16 ம் தேதியன்று கிளம்பினால் மட்டுமே ஆறு இரவுகள் பயணித்து 23 - ம் தேதி வைத்தீஸ்வரன்கோயில் வந்தடைய முடியும். ஆனால், மக்களவைத் தேர்தல் 18 - ம் தேதி என்பதால் பக்தர்கள் இன்று வண்டி கட்டிக் கிளம்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாரம்பர்யமாகப் பின்பற்றிவரும் வழக்கம் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டால், குடும்பத்தில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடும் என்பதால் வைத்தீஸ்வரன்தான் முக்கியம் என்று ஒரு சிலர் மாட்டுவண்டியைப் பூட்ட முடிவுசெய்திருக்கிறார்கள். இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நம் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள் என்பதால் மக்களவைத் தேர்தல்தான் முக்கியம் என்று ஒரு சிலரும் கூறிவருகிறார்கள். 

பாரம்பர்ய வழிபாடா, ஜனநாயகக் கடமையா என்கிற கேள்விக்கு மத்தியில் தவித்துவருகின்றனர் அந்த ஊர் மக்கள்.