
`மகிழ்ச்சியால் மனம் நிறைந்தது!’
உலக நன்மைக்காகவும், ‘சக்தி விகடன்’ வாசகியரின் குடும்பங்களில் சகல வளங்களும் செழிக்கவேண்டியும், ‘சக்தி விகடன்’ சார்பில் புராதனச் சிறப்பு மிக்க கோயில்களில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதம் 20-ம் தேதி வெள்ளிக் கிழமையன்று, கடலூர் அருள்மிகு பாடலீஸ்வரர் கோயிலில், சக்தி விகடனும் ‘ஸ்ரீ’ தீபம் ஆயில் நிறுவனமும் இணைந்து நடத்திய திருவிளக்குப் பூஜை மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

‘‘நம் குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகள், துயரங்களில் இருந்து விடுபடவும், மனஅமைதி கிடைக்கவும் சிறந்த வழிபாடு திருவிளக்கு பூஜை’’ என்று தொடங்கி, தீப வழிபாட்டின் மகத்துவத்தை விவரித்த சிவமணி குருக்கள், திருவிளக்கு பூஜையை சிறப்பாக நடத்திவைத்தார். திருவிளக்கு பூஜையில் கலந்துகொள்ள வந்திருந்த கடலுர் செம்மண்டலத்தைச் சேர்ந்த வாசகி, `‘கடலூரில், பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோயிலில் சக்தி விகடனின் திருவிளக்கு பூஜை என்பதை அறிந்ததும் மிகவும் சந்தோஷம் எங்களுக்கு. உறவினர்களோடு வந்து பூஜையில் கலந்துகொண்டேன். மிக அற்புதமான அனுபவம். அனைவரும் நலமாக வாழவேண்டும் என்று பிரார்த்தனை செய்ததுடன், பூஜையில் கலந்துகொண்டவர்களுக்கு கண்ணாடி வளையல், மஞ்சள் சரடு, குங்குமம் என்று என்னால் முடிந்ததை வழங்கினேன். மொத்தத்தில் எனக்கு மனநிறைவு தந்த பூஜை இது’’ என்று பரவசத்துடன் பகிர்ந்துகொண்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியிலிருந்து வந்திருந்த வாசகி சுபாஷினி, ‘`மிக அற்புதமான கூட்டு வழிபாடு இது. நல்ல மழை பெய்யவும் அனைவரும் நோய் இல்லாமல், நீண்ட ஆயுளுடன் வாழவும் வேண்டிக் கொண்டேன்’’ என்றார். ‘‘என் மகனின் மேல்படிப்பு நல்லபடியாக அமையவேண்டும்’’ என்று தனது பிரார்த்தனையைத் தெரிவித்தார், கடலூர் வாசகி தனலக்ஷ்மி.

இவர்களைப் போலவே திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்ட வாசகியர் பலரும் தங்களின் அனுபவத்தையும் வேண்டுதலையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் அனைவரது பிரார்த்தனை களும் நிறைவேற, அருள்மிகு பெரியநாயகியும் அருள்மிகு பாடலீஸ்வரரும் நிச்சயம் அருள்பாலிப்பார்கள்.
- ஜி.சதாசிவம், படங்கள்: எஸ்.தேவராஜன்