
விழாக்கள் விசேஷங்கள்!
குடமுழுக்குத் திருவிழா!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்துக்கு அருகில் கொசவன்பேட்டையில் அமைந்துள்ளது, ஸ்ரீகாமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீபர்வதீஸ்வர ஸ்வாமி திருக்கோயில்.
ஆரண்ய நதி (ஆரணி ஆறு) தீரத்திலுள்ள இந்தத் திருக்கோயிலில் கடந்த 4-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நூதன சனீஸ்வரர், நவகிரக சந்நிதி, பரிவார தேவதைகளின் சந்நிதிகள் என அழகுடன் காட்சியளிக்கும் இந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் திருக்காளத்தி, திருமயிலை ஆகிய தலங்களை ஒருசேர தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள் பெரியோர்கள்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
அக்னி பகவானின் உக்கிர காலம் என்றும் பசியாறும் காலம் என்றும் அக்னி நட்சத்திரக் காலத்தைக் குறிப்பிடுவார்கள். கடந்த 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரக் காலம் 21 நாட்கள் நீடித்திருக்கும். சுவேதகி மன்னர் தொடர்ந்து 12 வருடங்கள் நடத்திய யாகத்தால், அதிக நெய்யை உண்ண நேரிட்ட அக்னி பகவானுக்கு மந்த நிலை ஏற்பட்டதாம். காண்டவ வனத்தை எரித்து உண்டால்தான் அக்னியின் மந்த நிலை நீங்கும் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதன்படி அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்து மந்த நிலையைப் போக்கிக்கொண்ட காலம் இது என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திரக் காலத்தில் சுப காரியங்களைச் செய்யக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு.

ஆன்மிகக் கண்காட்சி!
81 வகையான பக்தியை உள்ளடக்கிய திருக் கோளூர் பெண்பிள்ளை ரகசியம் குறித்த விளக்கக் கண்காட்சி கடந்த மாதம் 29-ம் தேதி, சென்னை- தி.நகர் டாக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.

ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், வராஹ புராணம், ஹரிவம்சம், ஆழ்வார்களின் பக்தி, ஸ்ரீராமாநுஜர், சிஷ்யர்களின் பக்தி... முதலானவற்றை விவரிக்கும் வகையில், 81 ஸ்டால்களில் விளக்கவுரையுடன் கூடிய ஆன்மிகக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. ஸ்ரீ கிருஷ்ண ஸத்ஸங் கமிட்டியினர், மிக அற்புதமாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில், வைணவப் பெரியோர்களும், ஆன்மிக அன்பர்களும், பக்தர் களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
படங்கள்: ஜெ.பரணிதரன்,
வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் விழா!
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வரும் 8-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. 9-ம் தேதி முத்துப்பந்தலில் பவனி வருவாள் கௌமாரியம்மன். 16-ம் தேதி விடையாற்றி வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறும்.
ஸ்ரீதத்தாத்ரேயர் ஜயந்தி!
மே மாதம் 10-ம் தேதி ஸ்ரீதத்தாத்ரேய ஜயந்தி. மும்மூர்த்திகளின் அம்சமான ஸ்ரீதத்தாத்ரேயர் வேதங்களைக் காக்கவும், மனிதர்களை நல்வழிப் படுத்தவும் அவதரித்தவர். அதனால்தான் அவர், ‘ஸ்ரீகுரு தேவதத்தா’ என்று வணங்கப்படுகிறார். நித்ய சிரஞ்ஜீவியான இவரை இந்நாளில் வணங்கி ஞானமும் அமைதியும் பெறலாம் என்கின்றன ஞான நூல்கள். தமிழகத்தில் சுசீந்திரம் அவரது அவதாரத் தலமாகச் சொல்லப்படுகிறது. சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமியை வணங்கினால் ஸ்ரீதத்தாத் ரேயரை வணங்கிய பேறு கிடைக்கும்.
வைகாசி அமாவாசை
சூரியன் ரிஷப ராசிக்குள் நுழையும் இந்த மாதத்தின் அமாவாசை (15-5-18) சர்வமங்களங் களையும் அளிக்கக்கூடியது. பித்ருக்களின் பூஜையோடு, இந்த நாளில் முருகப்பெருமானை வணங்கினால் சர்வ காரியங்களிலும் வெற்றி அடைய லாம். வைகாசியில் இரண்டாவது அமாவாசையும் ஜூன் 13 அன்று வரவுள்ளது.
வைகாசி சஷ்டி விரதம்
முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களில் சஷ்டி விரதம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக முருகப்பெருமானின் அவதார மாதமான வைகாசி சஷ்டி சிறப்பான பலன்களைத் தரக்கூடியது. இந்த மாதம் 20-ம் தேதி வரும் சஷ்டி திதியன்று விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்து நன்மைகளையும் பெறலாம்.
மாலிருஞ்சோலைக்குத் திரும்பினார் அழகர்!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு, அழகர் மலையிலிருந்து புறப்பட்ட கள்ளழகர், 10 நாள்களாக பல இடங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தந்தார்.
கடந்த 3-ம் தேதி அழகர் மலையை அடைந்தார் கள்ளழகர். மறுநாள் காலை அவருக்குக் களைப்பு நீங்க, உற்சவ சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டது.