
நாரதர் உலா - என்ன நிகழ்ந்தது ஸ்ரீரங்கத்தில்?
‘அக்னி நட்சத்திரம் முடிந்தபிறகும் வெயில் வாட்டியெடுக்கிறதே...’ என்று சொல்லியபடியே வியர்க்க விறுவிறுக்க நம் அறைக்குள் பிரசன்ன மானார் நாரதர்.

வெயிலுக்கு இதமாக கொத்தமல்லி அரைத்துச் சேர்த்த மோர் கொடுத்து உபசரித்தோம். வாங்கிப் பருகிவிட்டு சற்று நேரம் தம்மை ஆசுவாசப் படுத்திக்கொண்ட நாரதர்,
‘`நான் சமீபத்தில் கும்பகோணம் போயிருந்தேன். அங்கே, பல வருடங்களாக வைகாசி விசாக பிரம்மோற்சவம் நடைபெறாமலிருந்த பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில், மறுபடியும் பிரம்மோற்சவம் நடைபெறவேண்டும் என்று கும்ப கோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்ட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் சிவனடியார்கள் அந்தப் பகுதி மக்களுடன் கவன ஈர்ப்புக் கூட்டம் நடத்தி, கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதன் விளைவாக பிரம்மோற்சவம் நடத்து வதற்குக் கோயில் நிர்வாகம் சம்மதித்துவிட்டது. ஆனால், போதிய அவகாசம் இல்லாததால் இந்த வருடம் மூன்று நாள்கள் மட்டும் திருவிழா நடத்துவதென்றும், அடுத்த வருடத்திலிருந்து முறைப்படி கொடியேற்றி பிரம்மோற்சவம் நடத்த லாம் என்றும் முடிவு செய்யப்பட்டு விழா நடை பெற்றது.’’
‘`விழாவில் ஏதேனும் விசேஷம் உண்டா?’’
‘`நான் சென்றிருந்த அன்று தீர்த்தவாரி விழா நடைபெற்றது. தீர்த்தவாரிக்கு எழுந்தருளிய சுவாமியைப் பார்த்து, ‘திருவிழா நடப்பது சிவன் கோயிலிலா அல்லது பெருமாள் கோயிலிலா’ என்று திகைத்துவிட்டேன்''

‘`காரணம் என்னவோ?’’
‘`சுவாமிக்கு இரண்டு புறங்களிலும் அம்பாள் இருந்ததுதான் காரணம். பெருமாளுக்குத்தான் இரண்டு பக்கங்களிலும் தாயார் இருப்பார்கள். ஆனால், பாணபுரீஸ்வரருக்கு இரண்டு தேவியர் இருந்ததுதான் என் திகைப்புக்குக் காரணம். ஆனால் உற்றுப் பார்த்தபோதுதான், ரிஷப வாகனத்தில் எழுந்தருளியிருப்பது சோமாஸ்கந்த மூர்த்தி என்பதும், அவருக்கான தேவி இடது புறத்திலிருக்க, வலதுபுறத்தில் ஆலயத்தின் அம்பிகையான சோமகமலாம்பாளும் அதே வாகனத்தில் எழுந்தருளியிருந்தது தெரியவந்தது. எனக்கு ஏற்பட்டது போலவே பல பக்தர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டதென்று பிறகு தெரிந்து கொண்டேன்.
‘`ஏன், அம்பிகையைத் தனி வாகனத்தில் எழுந்தருளச் செய்திருக்கலாமே. அப்படிச் செய் திருந்தால், மற்றவர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் இருந்திருக்குமே.’’
‘`அதுபற்றி கோயிலைச் சேர்ந்தவர்களிடம் விசாரித்தேன். அவசரகதியில் விழா நடத்தவேண்டி யிருந்ததாம். எனவே, போதுமான ஆள்பலம் இல்லாத காரணத்தால் அம்பாளையும் ஒரே வாகனத்தில் எழுந்தருளச் செய்யும்படி ஆகி விட்டது என்றும், அடுத்த வருடத்திலிருந்து எந்தக் குறையுமில்லாமல் பிரம்மோற்சவம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்கள்.’’

‘`சரி... சரி! நமக்கென்ன ஆச்சர்யம் என்றால், ஒரே ஒரு கவன ஈர்ப்புக் கூட்டத்திலேயே பிரம்மோற்சவம் நடத்த கோயில் நிர்வாகத்தினர் சம்மதித்துவிட்டார்களே!’’ என்று நாம் சொல்லவும், ‘`உமக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் எனக்கும் ஏற்பட்டது. அதன் பின்னணி குறித்து திருவடிக்குடில் சுவாமிகளிடம் பேசியபோதுதான் சில விஷயங்கள் தெரியவந்தன’’ என்ற நாரதர் தொடர்ந்தார்.
‘`சட்டென்று கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் பட்டதற்கு கொட்டையூரில் நடைபெற்ற ஒரு சம்பவம்தான் காரணமாம். கொட்டையூர் கோடி லிங்கேஸ்வரர் கோயிலில்கூட பல வருடங்களாக பிரம்மோற்சவமே நடைபெறவில்லை. பலமுறை கோரிக்கை வைத்தும், கோயில் நிர்வாகம் கண்டு கொள்ளாததால், பெரும் போராட்டத்துக்குப் பிறகு பிரம்மோற்சவம் நடத்துவதற்கான அனுமதி கிடைத்ததாம். அந்த நிலை இந்தக் கோயிலிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, கோயில் நிர்வாகத்தினர் உடனே சம்மதித்துவிட்டனர். மேலும், உள்ளூர் முக்கிய பிரமுகர்களும் இதற்கு மிக முக்கிய பங்காற்றினார்களாம்’’ என்ற நாரதர் அடுத்த விஷயத்துக்குத் தாவினார்.
‘`கடந்த 24-ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடைபெற்ற சம்பவம் தந்த அதிர்ச்சி யிலிருந்து இன்னும் பக்தர்கள் மீளவில்லை என்பதை நானே நேரில் கண்டேன். பாதுகாப்பு நிறைந்த ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற இந்தச் சம்பவம், கோயிலின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கிவிட்டதாக பக்தர்கள் குறை கூறுகின் றனர். சந்தேகப்படும்படி காணப்பட்ட அந்த வாலிபரை, பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் எப்படி உள்ளே விட்டார்கள் என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
‘`உண்மையில் என்னதான் நடந்ததாம்?’’
‘`அன்று மாலை பக்தர்களுடன் கலந்து வந்த அந்த நபர், கருவறைக்கு அருகில் வந்தபோது, கையில் வைத்திருந்த பையைப் பெருமாளை நோக்கி வீசினாராம்.
எதிர்பாராமல் நடந்த இந்தச் சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துவிட்ட துடன், அந்த வாலிபரைப் பிடித்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாகச் சொல்கிறார்கள் பக்தர்கள் தரப்பில்’’ என்ற நாரதரிடம்,
‘`அந்தப் பையில் என்னதான் இருந்ததாம்?’’
‘`காவல் நிலையத்தில் அந்தப் பையை காவலர்கள் சோதனையிட்டபோது, அந்தப் பையில் துணிகள், சின்ன கத்தி, கத்திரிக்கோல், செருப்பு ஆகியவை இருந்தனவாம்.

விசாரணையில் அந்த வாலிபர் திருவிடை மருதூர் சன்னாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் என்பதும், காதல் தோல்வி மற்றும் திருமணம் கைகூடாததால்தான் இப்படிச் செய்ததாகவும் தெரியவந்ததாம். போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். கருவறையில் செருப்புடன் பையை வீசியதால், உடனே பரிகார பூஜை செய்யப்பட்டதாம்’’ என்ற நாரதரிடம், ‘`இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் பேசினீர்களா?’’ என்று கேட்டோம்.
‘`ஆமாம் பேசினேன். அப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான். ஆனால், பெரிய பெருமாள் மீது வீசப்படவில்லையென்றும், படிக்கட்டில்தான் போட்டார் என்றும் ஆலய நிர்வாகத் தரப்பில் கூறுகிறார்கள். ஆனால், இனிமேல் அப்படி எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, வழக்கமான போலீஸ் பாதுகாப்புடன், கோயில் சார்பிலும் தனியார் செக்யூரிட்டிகளையும் நியமித்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி யிருப்பதாகக் கூறினார்கள்’’ என்றார் நாரதர்.
நாம் அடுத்த கேள்வியை முன்வைத்தோம். ‘`சமீபத்தில் வசந்த உற்சவத்தின்போது பந்தல் தீப் பிடித்துக்கொண்டதாமே. அதுபற்றி விசாரித்தீரா?’’
``விசாரித்தேன். பந்தலில் தீப்பிடித்துக்கொண்ட தாகச் சொல்லப்படுவது பொய்யான தகவல் என்கிறார்கள் நிர்வாகத் தரப்பில். பெருமாள், பந்தலில் எழுந்தருளியபோது, கோயில் பணியாளர் வைத்திருந்த தீப்பந்தத்திலிருந்து சிறு நெருப்புப் பொறி பந்தலில் பட்டுவிட்டதென்றும், அதை உடனே கவனித்து அணைத்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். மற்றபடி பந்தலில் தீப்பிடித்ததாகச் சொல்லப்படுவதெல்லாம் கோயில் நிர்வாகத்தின் கண்டிப்பான செயல்பாடுகளைப் பிடிக்காத சிலர் பரப்பிவிடும் வதந்திதான் என்கிறார்கள்'' என்ற நாரதர், ``திருவரங்கம் குறித்து பேசுவதற்கு வேறு சில விஷயங்களும் உண்டு. அவைபற்றியும் விரிவாக விசாரித்துச் சொல்கிறேன்'' என்றபடி, விடைபெற்றுக்கொண்டார்.
படங்கள்: க.சதீஷ்குமார்
- உலா தொடரும்...