தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!

முரளிப்பட்டர்

‘ஜ்யேஷ்ட’ எனும் சொல்லுக்கு ‘பெரிய’ அல்லது ‘மூத்த’ என்று பொருள். நட்சத்திரங்களில் ‘கேட்டை’ எனும் நட்சத்திரம் ‘ஜ்யேஷ்டா’ என்று சம்ஸ்கிருத மொழியில் அழைக்கப்படுகிறது. 

ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில், நம்பெருமாளுக்கு நடைபெறும் சிறப்பு மிக்க பெரிய அபிஷேகமானது ‘ஜ்யேஷ்டாபிஷேகம்' என்னும் பெரிய திருமஞ்சனமாகும்.  வரும் ஆனி மாதம் 13-ம் நாள் (27.6.18), புதன் கிழமையன்று, பெரிய கோயிலில் அருளும் பெருமாளுக்குப் பெரிய திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

மிக அற்புதமான வைபவம் இது.

ஸ்ரீரங்கத்தில், பெரியபெருமாள் சந்நிதியில், ஆனித் திருமஞ்சனத்தன்று அதிகாலையில் காவிரி நீர் கொண்டு, நித்தியப்படி முதற்கால பூஜை மற்றும் பொங்கல் நிவேதனம் கண்டருளப்படும்.

தொடர்ந்து, அனைத்து மூர்த்திகளும் ‘திருவெண்ணாழி - திருப்பாற்கடல்' என்று போற்றப்படும் முதல் பிராகாரத்தில் ஏழு திரைகளுக்குப் பின்னால் எழுந்தருளச் செய்யப்படுவார்கள். பெரிய கோயில் முதல் பிராகாரம் திருப்பாற்கடலுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!

பட்டத்து யானை, சாமரங்கள், தங்கக் குடை முதலான மரியாதைகளுடன், 28 வெள்ளிக் குடங்கள் மற்றும் ஒரு தங்கக் குடத்தில் புனிதக் காவிரி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மேளதாளம் முழங்க ஊர்வலமாகக் கொண்டுவரப்படும்.

இந்தத் தங்கக் குடத்தின் எடை 12,515 வராகன் என்ற குறிப்பு உண்டு. இந்தக் குடமானது 1734-ம் வருடம் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் என்ற மன்னரால் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குடத்தின் மீது குடம் சில விவரங்கள் உள்ளன. அதாவது, இந்தக் குடத்தைப் பற்றிய தகவல்களும், ஒருமுறை இந்தக் குடம் களவு போக, பிறகு மீட்கப்பட்டு  செப்பனிடப்பட்ட விவரங்களும் தெலுங்கு லிபியில் பொறிக்கப் பட்டுள்ளன. எனவே, இந்த நிகழ்வுகள் யாவும் நாயக்கர்கள் காலத்திலேயே நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

காவிரியிலிருந்து புனித நீர் வருவதற்குள்ளாக நம்பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூமிதேவி ஆகியோரின் கவசங்கள் களையப்பெற்று, அவை உரிய மரியாதையுடன் சேனை முதலியாரின் சந்நிதிக்கு அருகிலுள்ள தொண்டைமான் மேட்டில் எழுந்தருளச் செய்யப்படும். அங்கே, அவற்றின் எடை முதலான விவரங்கள் சரிபார்க்கப்படும். 

மூலஸ்தானம் முழுவதும் சந்தனக் காப்பிடப் படும். பின்னர் திருவெண்ணாழி என்ற முதல் பிராகாரத்தில் எழுந்தருளிய உற்சவ மூர்த்தங் களுக்கு, பக்தர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக திரவியங்கள், புண்யாஹ ஜலம் சேர்ப்பித்து, வேத கோஷம் முழங்க திருமஞ்சனம் செய்யப்படும்.

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!

படம்: தே.தீட்ஷித்

கவசங்களை அகற்றிய நிலையில், உற்சவ மூர்த்திகளின் சுயமான திருமேனிக்குச் செய் யப்படும் திருமஞ்சனம் ஏகாந்தமாக நடை பெறும் என்பதால், பக்தர்களால் சேவிக்க முடியாது.

ஆனால், நம்பெருமாளின் கவச ஹஸ்தமும், இரு பாதங்களும் பக்தர்கள் தலையில் சாற்றி ஆசீர்வதிக்கப்படும். மேலும், திருமஞ்சன தீர்த்தப் பிரசாதமும் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

அன்றைய தினமே ஸ்ரீரங்கநாதர் மூலவர் திருமேனி முழுவதும் புனுகு, அகில், சந்தனம் கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் சாற்றப் படும். மேலும் பெருமாளின் திருமேனி, அவரின் திருமுகம் தவிர இதர அங்கங்களைச் சேவிக்கமுடியாதபடி திரையிடப்படும். 48 நாள்களுக்குப் பிறகே மூலவரின் திருமேனி முழுவதையும் நம்மால் தரிசிக்க முடியும். இது, மூலவரின் திருமேனி பாதுகாப்புக்காக ஏற்பட்ட ஒரு விசேஷ ஏற்பாடாகும்.

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!

நம்பெருமாள், உபயநாச்சிமார் ஆகியோரின் கவசங்களின் எடை முதலான விவரங்கள் சரி பார்க்கப்பட்டு, ஏதேனும் பழுது ஏற்பட்டி ருந்தால் சரிசெய்யப்படும். புழக்கத்திலுள்ள மற்ற வட்டில்களும் பழுது நீக்கப்படும். இரவு ஒன்பது மணிக்கு மேல் நம்பெருமாள், உபய நாச்சிமார் திருமேனிகளுக்குக் கவசங்கள் அணிவிக்கப்பட்டு, மங்களஹாரத்தி நடை பெறும்.

பேரும் புகழும் அருளும் பெரிய திருமஞ்சனம்!

திருமஞ்சனத்துக்கு அடுத்த நாள் ‘பெரிய திருப்பாவாடைத் தளிகை’ பெரிய பெருமாள் சந்நிதி வாசலில் சமர்ப்பிப்பார்கள். அந்தப் பிரசாதத்தில் பலாச்சுளை, வாழைப்பழம், மாங்காய், தேங்காய், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அத்துடன் சிறிதளவு உப்பும் சேர்ப்பார்கள். பெருமாளுக்கு ஆராதனைகள் மற்றும் நிவேத்தியம் செய்த பின், அதைப் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.

ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் நடைபெறும் திரு மஞ்சனத்தை பக்தர்களால் சேவிக்க முடியாவிட்டாலும், பகவானின் பாதக் கமலங்களை தலையில் தாங்கும் பாக்கியத்தைப் பெறுவதுடன், திருமஞ்சன தீர்த்தப் பிரசாதமும் பெற்று பெருமாளின் அருளுக்குப் பாத்திரர்கள் ஆகலாம். திருவரங் கனின் திருவருளால் பேரும் புகழும் மிக்க பெருவாழ்வு ஸித்திக்கட்டும்!