தொடர்கள்
வாசகர் பக்கம்
Published:Updated:

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

சி.வெற்றிவேல்

ட்சனின் மகளாக தாட்சாயினி என்ற பெயரில் அவதரித்து சிவபெருமானை மணம் புரிந்துகொண்ட அம்பிகை, தட்ச யாகத்தின் போது தந்தையால் அவமானப்படுத்தப்பட்டு, யாக குண்டத்தில் விழுந்து, பிராணத்தியாகம் செய்து விடுகிறாள். சிவபெருமான், தம் அம்சமான வீரபத்திரரை அனுப்பி யாகத்தை அழித்ததுடன், தட்சனின் தலையையும் கொய்துவிடுகிறார்.

அம்பிகை, மீண்டும் சிவனாரை அடைவதற்காக, பர்வதராஜனின் மகளாக பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள். இந்த நிலையில், தேவியைப் பிரிந்த சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்தார்.

அதே தருணத்தில், சூரபத்மனின் அட்டகாசம் தாங்கமாட்டாமல் கலங்கித் தவித்த தேவர்கள், மகாவிஷ்ணுவிடமும், பிரம்மதேவனிடமும் சென்று ஆலோசனை கேட்டனர். ``சிவ - பார்வதி திருமணம் நடைபெற்று, குமரனின் அவதாரம் நிகழ்ந்தால்தான் சூரபத்மனை அழிக்க முடியும்'' என்று தெரிவித்தார் மகாவிஷ்ணு.

சிவ-பார்வதியரின் திருக்கல்யாணம் நடைபெற வேண்டுமெனில், சிவனாரின் தவம் கலைய வேண்டும். அவரின் தவத்தைக் கலைக்க மன்மதனின் உதவியை நாடினார்கள் தேவர்கள்.சிவபெருமான் மீது புஷ்ப பாணத்தை ஏவும்படிக் கூறினர். முதலில் மறுத்த மன்மதன், பிறகு தேவர்களின் வற்புறுத்தலால், சிவனார் மீது மலர்க் கணையைத் தொடுக்க முனைந்தான். அவனுடைய வில்லிலிருந்து பாணம் விடுபடுவதற்குள், அவனைத் தமது நெற்றிக்கண்ணால் பொசுக்கினார் பரமேஸ்வரன்.

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

மன்மதனின் மனைவி ரதிதேவி ஓடோடிவந்து சிவனாரைச் சரணடைந்தாள்; மன்மதனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினாள். அவளின் வேண்டுகோளை ஏற்ற சிவனார், ரதி தேவியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி அநங்கரூபமாக மன்மதனை உயிர்ப்பித்தார்.

மன்மதனும், ரதிதேவியும் சேர்ந்து, “இயல்பான உருவ நிலையைத் தரவேண்டும்” என்று சிவ பெருமானை வேண்டினார்கள். அதற்குச் சிவ பெருமான், “பூலோகத்துக்குச் சென்று சிவ பூஜை செய்யுங்கள். உரிய நேரம் வரும்போது, ஒரு புண்ணிய தலத்தில் மன்மதனுக்கு இயல்பான தேஜோரூபம் கிட்டும்” என்று அருள்புரிந்தார்.

அதன்படி பூமிக்கு வந்த மன்மதனும் ரதி தேவி யும் பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார் கள். அப்படி அவர்கள் வெள்ளூர் வில்வக்காட் டுக்கு வந்து ஈசனை வழிபடும்போது, உமையா ளுடன் காட்சி தந்தார் சிவபெருமான். அத்துடன் மன்மதனுக்குச் சுயரூபம் வாய்க்கவும் அருள்பாலித் தார். இந்தத் திருக்கதையையொட்டியே வெள்ளூர் வில்வக்காட்டு இறைவன், திருக்காமேஸ்வரர் என்றும், உமையாள் சிவகாமசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

மன்மதனுக்குக் காட்சி தந்த சிவனார், அவனுக்கு இங்கே குறிப்பிட்டதொரு மருத்துவ முறையையும் கற்பித்தாராம். அதனால் இந்தத் தலத்தில் சிவபெருமானுக்கு வைத்தியநாதர் என்ற திருப்பெயரும் உண்டு. இன்றைக்கும், இந்தத்  தலத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், பக்தர்களுக்கு மருந்தாக வழங்கப்படுகிறது. குழந்தைப் பேறு வாய்க்காத தம்பதிகள் இங்கு வந்து இறைவனை வழிபட்டால், விரைவில் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒரு யுகத்தில், திருமால் மோகினியாக அவதரித்த போது, சிவபெருமான் அந்த மோகினியிடம் மோகம் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திருமாலிடம் ஊடல் கொண்டாள் மகாலட்சுமி. அதற்குக் காரணமான சிவபெருமானிடமே சென்று நியாயம் கேட்க முயற்சி செய்தாள். ஆனால், மகாலட்சுமிக்கு தரிசனம் தராத சிவ பெருமான், பூமிக்குச் சென்று தவமியற்றினால், தாம் காட்சி தருவதாக அசரீரியாகக் கூறினார். அதன்படியே வில்வாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட வெள்ளூர் திருத்தலத்துக்கு வந்து மகாலட்சுமி தவம் மேற்கொண்டாள்.

நீண்டகாலமாகியும் சிவபெருமானின் தரிசனம் கிடைக்காததால், தானே ஒரு வில்வ மரமாகி, சிவ லிங்கத்தின் மீது வில்வ இலைகளைச் சமர்ப்பித்து வழிபட்டாள். அவளின் தவத்தாலும் பூஜையாலும் மகிழ்ந்த சிவபெருமான், அவளுக்குத் தரிசனம் தந்தார். தாம் மோகினியாக வந்த திருமாலிடம் மோகம் கொண்டது, ஹரிஹர புத்திரனின் அவதார நோக்கத்துக்காகவே என்று எடுத்துக் கூறினார்.  மகாலட்சுமியும் திருமாலிடம் கொண்ட ஊடலை மறந்து சமாதானம் அடைந்தாள். பிறகு, சிவபெருமான் மகாலட்சுமியை ஸ்ரீவத்ச சாளக்கிராம வடிவத்தில் ஆவாஹணம் செய்து, திருமாலின் திருமார்பில் ஸ்தாபனம் செய்தார்.

அத்துடன், தம்மை வில்வ இலைகளைப் பொழிந்து வழிபட்ட மகாலட்சுமிக்கு, இந்தத் தலத்தில்  ஸ்ரீவத்ச முத்திரை பதிக்கப்பட்ட - சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை அளித்து, அவளை ஐஸ்வர்யங்களுக்கு அதிபதியாக நியமித்தாராம் சிவபெருமான். இதற்குச் சாட்சியாக, இந்தக் கோயிலின் வடமேற்குப் பகுதியில், மகாலட்சுமி இருக்கவேண்டிய இடத்தில் வில்வ மரமும், அதன் நிழலில் ஸ்ரீவத்ச முத்திரை பதிக்கப்பட்ட ஐஸ்வர்ய மகுடம் சூடிய நிலையில், தவக்கோலம் பூண்டிருக்கும் மகாலட்சுமி தேவியையும் தரிசிக்கலாம். வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் இது. இப்படி மகாலட்சுமிக்கு அருள்புரிந்ததால்,  இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீஐசுவரேஸ்வரர், ஸ்ரீலட்சுமிபுரீஸ்வரர் ஆகிய திருப்பெயர்களும் ஏற்பட்டன.

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

`வலன்' என்ற அசுரனிடமிருந்து தேவர்களைக் காக்கச் சென்ற சோழ மன்னர் முசுகுந்தன், இந்தத் தலத்துக்கு வந்து இறைவனிடம் தனது மகுடத்தையும், போர்க் கருவிகளையும் சமர்ப்பித்து, வலனை போரில் வெல்லவேண்டுமென்று பிரார்த்தனை செய்து விட்டுச் சென்றாராம். இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு, சுகபோகங்களுக்கு அதிபதியாகும் பேறு பெற்றார் சுக்கிரன்.  குபேரனும் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டே செல்வங் களுக்கு அதிபதியானதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தத் தலத்தில் அருளும் திருக்காமேஸ்வர பெருமானை சிவபோகச் சக்கரம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே, பழநியில் போகர் நவபாஷாண முருகப்பெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்ததாக, ‘போகர் ஏழாயிரம்’ என்ற நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. போகர் நிறுவிய சிவபோகச் சக்கரத்தை இன்றும் நாம் தரிசிக்கலாம். இன்றும் பல சித்தர்கள் இந்தத் தலத்து இறைவனை வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. எனவே, இந்தத் தலத்து இறைவனை வழிபட்டால் நினைத்த காரியம் ஸித்தியாகும் என்பது நம்பிக்கை.

காரியத் தடைகளால் கலங்கித் தவிக்கும் அன்பர்கள், தொடர்ந்து மூன்று அமாவாசை தினங்களில் இங்கு வந்து, ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, வில்வம், மரிக்கொழுந்து, மனோ ரஞ்சிதம், செண்பகம், செந்தாமரை  ஆகியவற்றால் அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். அத்துடன் புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை ஆகியவற்றைப் பெருமானுக்குச் சமர்ப்பித்து, அவற்றைப் பிரசாதமாகப் பெற்று, தினமும் நெற்றியில் அணிந்து வந்தால், நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் என்பது ஐதீகம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள், சந்தான காமேஸ்வர மகா மந்திரத்தைக் கூறி ஸ்வாமியை வழி பட்டால், விதியே இல்லாவிடினும்  அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

கல்வியில் மந்தமான குழந்தைகள், ராகு கால நேரத்தில் 16 மிளகு தீபம் ஏற்றி, செவ்வரளி மாலை அணிவித்து  இங்கு அருள்புரியும் ஞான பைரவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

இப்படி அற்புத வரங்களை வாரி வழங்கும் இந்தத் திருத்தலம், திருச்சி மாவட்டம் - முசிறிக்கு அருகில், காவிரியின் வடகரையில் அமைந் துள்ளது. கிழக்கு நோக்கிய திருக் கோயிலுக்கு முன்பாக உள்ள அரசு, வேம்பு மரத்தினடியில் விநாயகர் அருள்புரிகிறார். ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், முதலில் நர்த்தன கணபதியுடன் கூடிய கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்திருக்கின்றன.
 
கோயிலுக்குள் திருக்காமேஸ்வரர் மண்டபத்துக்குத் தெற்கே பிரதான விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. திருக்காமேஸ்வர மண்டபத்துக்குள் மேற்கூரையில், சிவபோகச் சக்கரம் புடைப்புச் சிற்பமாகக் காணப் படுகிறது. கருவறையில் ஐயன் திருக்காமேஸ்வரர் எழிலார்ந்த திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். தெற்கு நோக்கி அமைந்த மண்டபத்தில், அம்பிகை சிவகாம சுந்தரி கருணையே வடிவமாகக் காட்சி தருகிறாள்.
 
கோயிலை வலம் வரும்போது ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீமோட்ச கணபதி, ஸ்ரீமகா விஷ்ணு ஆகியோரை தரிசிக்கலாம். மகாவிஷ்ணு சிவபெருமானின் கருவறைக்குப் பின்பக்கமாக அமைத்திருக்கிறார். இவரை வணங்குவது மிகவும் விசேஷமாகும். திருக்காமேஸ்வரர் சந்நிதிக்கு மேற்கே, முருகப்பெருமான் வள்ளி - தெய்வானைதேவியருடன் அருள்பாலிக்கிறார்.

வடமேற்கே கோயிலின் தல விருட்சமான வில்வம் அமைந்திருக்கிறது. அதன் அருகில் கஜலட்சுமியும், ஐஸ்வர்ய மகாலட்சுமியும் தனித் தனிச் சந்நிதிகளில் அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
கோயிலின் வடகிழக்குப் பகுதியில் பாதாள அறைக்குள் போகர் அருள்புரிகிறார். இதற்கு அருகே நவகிரக சந்நிதி அமைந்திருக்கிறது. திருக்காமேஸ்வரர் கோயிலில் உள்ள நவகிரகங்களை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் விலகிவிடும் என்று நம்பிக்கையுடனும் பக்தியுடனும் வணங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள்.

வாழ்வில் ஒருமுறையேனும் வெள்ளூர் திருத்தலத்துக்குச் சென்று, அங்கே கோயில் கொண்டிருக்கும் திருக்காமேஸ்வரரையும், சிவகாமசுந்தரி அம்மையையும் கண் குளிர தரிசித்து, மனதார வழிபட்டு வரவேண்டும். இதனால் நமது தோஷங்கள் யாவும் நீங்கும்; வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும். மேலும் நம்முடைய துன்பங்கள் அனைத் தும் நீங்கி, மகிழ்ச்சியான - ஐஸ்வர்யம் நிறைந்த பெருவாழ்வு கிடைக்கும் என்பது திண்ணம். 

அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத திருக்காமேஸ்வரர், அருள்மிகு ஐஸ்வர்ய மகாலட்சுமி திருக்கோயிலில், வரும் ஆனி மாதம் 8-ம் நாள் (22.6.18) வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மகா கும்பாபிஷேக விழா நடை பெறவுள்ளது. பக்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, சிவனாரை வழிபட்டு வரம்பெற்று வரலாம்.

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

எப்படிச் செல்வது?

திருச்சி மாவட்டம் - முசிறிக்கு அருகில், காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது வெள்ளூர். முசிறியிலிருந்து வெள்ளூர் சிவன் கோயிலை 30 நிமிடங்களில் அடைந்து விடலாம். முசிறியிலிருந்து பேருந்து வசதி உண்டு.

மண்ணாளும் ஈசனுக்கு மகா கும்பாபிஷேகம்!

மூலவர் : ஸ்ரீதிருக்காமேஸ்வரர்

அம்மன் : ஸ்ரீசிவகாமசுந்தரி

தல மரம் : வில்வ மரம்

தீர்த்தம் : ஐஸ்வர்ய தீர்த்தம்

புராணப் பெயர் : வில்வாரண்ய க்ஷேத்திரம்.

நடை திறந்திருக்கும் நேரம் : 

காலை 9 முதல் 11 மணி வரை;

மாலை 6 முதல் 7.30 மணி வரை.