
அண்ணாமலையில் அபிஷேகம்!
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை திருத்தலத்தில், ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும்.
அதிலும், வைகாசி மாத அமாவாசையில் நடை பெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பானது. ‘மஹன்யாஸ ருத்ராபிஷேகம்’ எனப்படும் இந்த பிரமாண்ட அபிஷேகம், கடந்த புதன்கிழமை (13.6.18) அன்று காலை 6 மணிக்கு, 11 கலசங்கள் வைத்து, ருத்ர பாராயணத்துடன் தொடங்கியது.



கோயிலில், மூலவர் ஸ்ரீஅண்ணாமலையார் சந்நிதியின் வலதுபுற பிராகாரத்திலுள்ள, பெரிய நாயகர் சந்நிதியில் அருளும் ஸ்ரீசோமாஸ்கந்தர் உற்சவரின் முன்னே கலசங்கள் வைத்து, யாகம் வளர்த்து, ருத்ர பாராயணத்துடன் பூரணாஹுதி நிறைவுபெற்றதும், அபிஷேகம் தொடங்கியது.
54 வகையான மூலிகைப் பொடிகள், (வாழைப் பழம், நாட்டுச்சர்க்கரை, தேன் நெய் ஆகியவை கலந்த) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகிய திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.


சுமார் 500 லிட்டர் பால், சுமார் 250 லிட்டர் தயிர், குடம் குடமாக தேன்... சந்தனக் கட்டை களைச் சிதம்பரத்துக்கு அனுப்பி, அங்கிருந்து அரைத்து எடுத்து வந்த சந்தனத் தூளைக் கரைத்து சந்தன அபிஷேகம்... என மிக அற்புதமாக நடைபெற்ற அபிஷேகத்தைக் காணக் கண்கோடி வேண்டும்.
செண்டை மேள வாத்தியங்களும், சங்கொலியும் ஓங்காரமும் முழங்க, அம்மைக்கும் அப்பனுக்கும் நடந்த அபிஷேகத்தைக் கண்டு, ‘அண்ணாமலைக்கு அரோகரா’ என்று கோஷமிட்டு, மெய் சிலிர்த்து வணங்கி நின்றது பக்தர்கள் கூட்டம். அபிஷேகத்துக்குப் பின்னர், செண்பகப்பூ முதற்கொண்டு பல் வகை மலர்களால் இறைவனுக் கும் இறைவிக்கும் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது!

அபிஷேகங்கள், புஷ்பாஞ்சலிக்குப் பிறகு, வேத மந்திரங்களால் உருவேற்றிய கலசங்களுடன் அண்ணாமலையாரின் சந்நிதியை வலம் வந்தபின், ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, ஆரத்தி எடுத்ததும், சந்நிதியை மூடிவிடுகின்றனர். மீண்டும் மாலையில் முழு அலங்காரம் செய்து, தீப ஆராதனை நடைபெற்றது.
அதியற்புதமான அந்த அபிஷேகக் காட்சிகளும், புஷ்பாஞ்சலி தரிசனமும் இங்கே உங்களுக்காகவும்!
- பிரேமா நாராயணன், படங்கள்: கா.முரளி