
அம்பாபுரி ஈசனுக்கு கும்பாபிஷேகம்!
திருவருள் நிறைந்த தொண்டை மண்டலத்தில் பண்டைய அரசர்கள் நிர்மாணித்த 108 சிவத் தலங்களில் 51-வது சிவத்தலம் அம்பாபுரி. இவ்வூருக்கு அம்பலப்புத்தூர் என்றும் பெயருண்டு. தற்போது வழக்கத்திலுள்ள பெயர்- அம்பத்தூர்!
இங்கே காமராஜபுரத்தில் ஸ்ரீசிவகாமி அம்மையுடன் திருக்கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீஅம்பலவாணர். இவரின் திருப்பெயர் கொண்டே, இந்தப் பகுதிக்கு அம்பாபுரி, அம்பலப் புத்தூர் என்றெல்லாம் பெயர்கள் அமைந்தனவாம்.
ஆடலரசனுக்கே உரிய ‘அம்பல வாணன்’ எனும் திருநாமத்துடன் இறைவன் திகழ்வதால், மார்கழி திருவாதிரை, ஆனித் திருமஞ்சனம் போன்ற தினங்களில் இங்கு சென்று வழிபடுவது சிறப்பு. தவிர, சர்வரோக பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது, இந்த ஆலயம். மாத சிவராத்திரி தினங்களும், மகா சிவராத்தியும், பிரதோஷ பூஜைகளும் வெகு சிறப் பாக நடைபெறுகின்றன. தற்போது, ஸ்ரீஅம்பலவாணர் அறக்கட்டளை யின் மூலம் ஆலயம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து பதினோரு திங்கள் கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால், நினைத்த காரியம் நிறைவேறும்; பிரதோஷ பூஜையில் தொடர்ந்து கலந்துகொண்டால், செல்வச் செழிப்பும் மன நிறைவான வாழ்க்கை அமையும் எனச் சிலிர்ப்புடன் கூறுகிறார்கள் பக்தர்கள்.
சூரிய, சந்திரர் உள்ளவரைக்கும் இந்த ஆலயத் தில் வழிபாடுகள் தடையின்றி நடைபெற வேண் டும். அதற்கு எவரேனும் தடங்கல்கள் செய்வார்கள் எனில், அவர்களை பெரும் பாவம் பீடிக்கும். கங்கைக் கரையில் பசு தானம் செய்தாலும் அந்தப் பாவம் தீராதாம்.
இந்தத் தகவலை, கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. மேலும், கிருஷ்ணதேவராயரின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றரசர்களான காளத்தி ராஜா, பெத்த ராஜா ஆகியோர் குறித்தும், அவர்கள் காலத்தில், சந்தை வருமானத்தில் 50 சதவீதத்தை இந்தக் கோயிலுக்கு வழங்கச் சொல்லும் அரசாணை குறித்த தகவல் களையும் இந்தக் கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது என்கிறார்கள்.

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர், இந்த ஆலயப் பகுதியைத் தூய்மைப்படுத்தும்போது, ஸ்ரீநாராயணி அம்மன், ஸ்ரீபிரம்மா ஆகியோரின் விக்கிரகங்கள் கிடைத்தன என்கிறார்கள். நீண்ட காலமாகப் பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்த ஆலயம், சிவ பக்தர் களின் முயற்சியால் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 2006-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மீண்டும் புனரமைக்கப் பட்டு, மகாகும்பாபிஷேக வைபவம் நடைபெறவுள்ளது.
வரும் ஜூலை 2-ம் தேதி யாக சாலை வைபவம் தொடங்கி, தொடர்ந்து இரண்டு நாள்கள் நடைபெறும். 4.7.18 புதன்கிழமை (ஆனி மாதம் 20-ம் தேதி) அன்று காலை 9 முதல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. பக்த அன்பர்கள், இந்த வைபவத்தில் கலந்துகொண்டு, உங்கள் குடும்பம் செழிக்கவும் வாழ்வு தழைக்கவும் அந்த அம்பல வாணரின் திருவருளைப் பெற்று வரலாம்.
- தி. நமசிவாயம், சென்னை - 45