
நாரதர் உலா - தேரழகு சீர் பெறுமா?
`சென்ற வாரமே வந்திருக்கவேண்டிய நாரதர் இன்னும் வரவில்லையே...’ என்ற சிந்தனையில் நாம்

ஆழ்ந்திருக்க, சந்தடி செய்யாமல் நம் அறைக்குள் பிரசன்னமானார் நாரதர். வந்தவருக்கு வேர்க்கடலை சுண்டலும், தேநீரும் கொடுத்தோம். எனினும் பேச்சுக்கொடுக்காமல் மெளனம் சாதித்தோம். அதற்கான காரணத்தை நாரதர் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆக, அவராகவே பேச்சைத் தொடங்கினார்.
‘`கோபித்துக்கொள்ளாதீரும். சென்ற வாரம் நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அதனால்தான் உம்மைச் சந்திப்பதற்குச் சற்றுத் தாமதமாகி விட்டது’’ என்று நமக்குச் சமாதானம் சொன்னவர், தொடர்ந்து பேசினார்.
‘`நாகையில் திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்தேன். அவர் என்னிடம், அந்தணப்பேட்டை என்ற ஊரிலுள்ள அண்ணாமலையார் கோயில் குறித்தும் அங்கிருக்கும் தேரின் நிலைகுறித்தும் பகிர்ந்துகொண்டார். அதை அப்படியே சொல்கிறேன் கேளும்...’’ என்றவர், அதுபற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
‘‘அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அந்தணப்பேட்டை அண்ணாமலையார் திருக்கோயில் பல ஆண்டுகளாகத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாம். தற்போது அறநிலையத்துறையின் அனுமதியுடன், உபயதாரர்கள் சிலர் சேர்ந்து திருப்பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். இது, மகிழ்ச்சியான விஷயம்தான் என்றாலும் அந்தக் கோயிலுக்கு உரிய தேரின் நிலை மிகப் பரிதாபமாக இருக்கிறது என்கிறார் திருவடிக்குடில் சுவாமிகள். அத்துடன் `நீங்கள் ஒருமுறை நேரில் போய் பார்த்தால் நன்றாக இருக்கும்’ என்றும் கேட்டுக்கொண்டார். நானும் நேரில் சென்று பார்த்தேன். சுவாமிகள் சொன்னது மிகச் சரியே...’’ என்றவர், மொபைலில் தான் எடுத்துவந்த தேரின் போட்டோக்களைக் காண்பித்தார்.

படங்களைப் பார்த்து அதிர்ந்துபோனோம்; கண்களில் நீர் வராத குறை! நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய எண்ணற்ற சிற்பங்கள் நம்மை வியக்கவைத்தன. பல வருடங்களாக அவை வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்து திகழ்ந்தாலும்கூட கொஞ்சமும் பொலிவு குறையாமல் காட்சியளிப்பது ஆச்சர்யம்! ஆனால் தேரின் நிலைமை... பரிதாபம்!
‘‘கலைப்பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய தேர், இப்படி கவனிப்பாரில்லாமல் கிடக்கிறதே... சம்பந்தப்பட்ட எவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?’’
‘`இதையேதான் நானும் திருவடிக்குடில் சுவாமிகளிடம் கேட்டேன். அவர் புலம்பித் தீர்த்துவிட்டார். அத்துடன், அவரும் அவரின் அமைப்பும் முன்னெடுத்துள்ள முயற்சியையும் பகிர்ந்துகொண்டார்.

‘பல சிற்பிகளின் கடின உழைப்பில் உருவான இந்தத் தேர், இப்படிக் கிடப்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தற்செயலாக எங்கள் அடியார்கள் இந்தப் பக்கமாக வந்த போதுதான், தேரின் அவலநிலை எங்களுக்குத் தெரியவந்தது. தற்போது, சாய்ந்து கிடக்கும் இந்தத் தேருக்குப் பதிலாகப் புதிய தேர் செய்யவேண்டும் என்று எங்களின் ஜோதிமலை இறைபணி திருக் கூட்டம் சார்பாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதேநேரம், இந்தப் பழைய தேரில் இருக்கும் அழகான மரச் சிற்பங்கள் அனைத்தையும் முறையாகப் பிரித்தெடுத்துப் பராமரிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறோம்’ என்று கூறினார்.’’
நாரதர் விவரித்து முடிக்கவும், வேறொரு விஷயத்தை அவருக்கு நினைவுபடுத்தினோம் நாம். ‘`சென்ற முறை வந்திருந்தபோது, பக்தர்கள் கோயில்களில் ஏற்றும் நெய்விளக்கு விற்பனையில் முறை கேடுகள் நடப்பதாகச் சொன்னீரே... அதுபற்றி விசாரித்தீரா?’’
‘`சில கோயில்களின் நிர்வாகத் தரப்பில் அதுபற்றி விசாரித்தேன். கோயில்களுக்கு வெளியில் கடை வைத்திருக்கும் சிலரே, நெய் தீபங்களில் கலப்படம் செய்கிறார்களாம். அதேபோல், கோயில்கள் சார்பில், நெய் தீபம் விற்பதற்கென்று எந்த டெண்டரும் விடப்படுவது இல்லையாம். கோயிலுக்குத் தேவையான நெய் சப்ளை செய்தவதற்குத்தான் டெண்டர் விடுவார்களாம். மற்றபடி, கோயிலுக்கு வெளியில் கடைகளில் விற்கும் நெய் தீபத்துக்கும் தங்க ளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார்கள்’’ என்ற நாரதர், அவராகவே வேறொரு விஷயத்துக்குத் தாவினார்.
‘`சென்னை மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் பற்றிய விஷயம் தெரியுமா’’ என்று கேட்டவர், நமது பதிலுக்குக் காத்திருக்காமல், விவரம் சொல்ல ஆரம்பித்தார்.
‘`பிரசித்தி பெற்ற திருக்கோயில் அது. சுந்தர சோழரின் காலத்தில் செங்கற்றளியாகவும் பிறகு குலோத்துங்கன் காலத்தில் கருங்கற்றளியாகவும் கட்டப்பட்டத் திருக்கோயில் அது. தற்போது திருப்பணிக்காகக் காத்திருக்கிறது.கோயில் முழுவதும் ஒட்டடை படிந்திருப்பதாகவும், கோயில் வளாகம் சுத்தப்படுத்தப்படாமல் திகழ்வதாகவும், கல்வெட்டு களை வண்ணம் பூசி மறைத்திருப்பதாகவும் பக்தர்கள் குறை பட்டுக் கொள்கிறார்கள். அதேபோல், 2015-ம் வருடமே கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டுமாம். ஆனால், இன்னும் திருப்பணிகள் மேற்கொள்ளப் படாமல் இருப்பதாக ஆதங்கப்படுகிறார்கள் பக்தர்கள்’’ என்றபடியே தானும் ஆதங்கத்தோடு பெருமூச்செறிந்தார் நாரதர்.
‘`திருப்பணிகள் நடைபெறாமல் இருக்க என்ன காரணமாம்?’’
‘`அது மிகவும் பழைமையான கோயில் என்பதால், நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய அந்தக் கோயிலை மத்திய தொல்லியல் துறையினர் உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவித்து, பராமரித்து வருகிறார்கள். ஆனால், கோயிலின் நிர்வாகம் அறநிலையத்துறையிடம் இருக்கிறது. கோயில் திருப்பணிகள் பற்றி யாராவது கேட்டால், சம்பந்தப்பட்ட இரண்டு துறையினரும் ஒருவரையொருவர் கைகாட்டிவிட்டு ஒதுங்கிவிடுவதாகச் சொல்கிறார்கள்’’ என்ற நாரதரிடம், ‘`தொல்லியல் துறை, அறநிலையத் துறை... இரண்டு தரப்பிலும் விசாரித்தீரா?’’ என்று கேட்டோம்.

‘`கோயில் நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘கோயில் கருவறைக்கு அருகில் ஒரு தூண் சேதமடைந்திருக்கிறது. சுவர்களில் விரிசல் விழுந்திருக்கிறது. சுற்றுச் சுவர் மற்றும் தெப்பக் குளமும் சீர் செய்யப்படவேண்டும். ஆனால், கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கிறது. அவர்கள் ஒத்துழைப்பு தந்தால், விரைவில் திருப்பணிகளைத் தொடங்கி விடலாம்’ என்று பட்டும்படாமலும் பேசினார்கள்’’ என்ற நாரதர் தொடர்ந்து மத்திய அரசின் தொல்லியல் துறையினர் தரப்பில் விசாரித்த தகவலையும் பகிர்ந்துகொண்டார்.
‘`தொல்லியல் துறையைச் சேர்ந்த அதிகாரி சரவணன் என்பவரிடம் விசாரித்தேன். ‘கோயிலில் நடைபெறும் பூஜைகள், திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற வழிபாடுகள் தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் அறநிலையத்துறைதான் பொறுப்பு. கோயிலின் பழைமை மாறாமல் பராமரிப்பதும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதும்தான் எங்கள் பணி.
கோயிலுக்கு எந்த வகையிலும் சேதம் ஏற்படாமல் பராமரிப்புப் பணிகள் செய்ய வேண்டியது அவசியம். அதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம். மற்றபடி கும்பாபிஷேகம் செய்வதற்கான பணிகளை அறநிலையத் துறையினரே மேற்கொள்ள வேண்டும். அதுகுறித்து அவர்கள் தரப்பிலிருந்து கடிதம் அனுப்பியிருந்தால், பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை எப்போதோ முடித்திருப்போம்’ என்று கூறினார் அவர்’’ என்ற நாரதர், ‘‘பார்க்கலாம்... பகவானின் சித்தம் என்னவோ அப்படித் தானே நடக்கும். விரைவில் திருப்பணிகள் தொடங்க அவர்தான் அருள்பாலிக்கவேண்டும்’’ எனக்கூறி முடித்தார்.
அவர் பேச்சை முடிக்கவும், அலுவலக வாசலில் கார் ஹாரன் ஒலிக்கவும் சரியாக இருந்தது. எழுந்து வாசலுக்குச் சென்று மீண்ட நாரதர், ‘‘நண்பர் ஒருவர் முக்கியத் தகவலோடு வந்திருக்கிறார். அவருடன் செல்ல வேண்டியிருக்கிறது. திரும்பிவந்து அதுகுறித்து விரிவாகப் பேசுகிறேன்’’ என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.
படங்கள்: க.சதீஷ்குமார்