தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!

‘வேலிருக்க வினையில்லை’ என்பது முருக அடியவர்களின் உறுதியான உளப்பூர்வமான நம்பிக்கை. முருகப்பெருமானுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் அவன் திருக்கரத்தை அலங்கரிக்கும் வேலுக்கும் உண்டு. நாம் பகைவர்களை வெல்ல வேண்டும் என்றாலும் சரி, காரியங்களில் நமக்கு வெற்றி ஏற்படவேண்டும் என்றாலும் சரி, கந்தக் கடவுளின் வேலாயுதத்தை வழிபட்டால் போதும். முருக வழிபாட்டுக்கும் முந்தைய வழிபாடு வேல் வழிபாடு என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!

வேல் நம்முடைய புறப் பகைவர்களை மட்டு மல்லாமல், அகப் பகைவர்களான காம, குரோத, மத மாத்சர்யங்கள் போன்ற பகைகளையும் அகற்றும் வல்லமைகொண்டது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும்  ஐந்தொழில்களையும் ஆற்றவல்லது. அறக்கருணை யும் மறக்கருணையும் ஒருங்கே பெற்றிருப்பது வேலாயுதம்.

அறிவே வடிவான முருகனின் திருவடிகளைப் பற்றவேண்டும் என்ற அறிவை நமக்கு அருள்வது வேல்தான். அறிவு, ஆழமாக இருப்பதுடன் அகன்றும் கூர்மையாகவும் இருக்கும். இதை உணர்த்துவதாகவே, வேலின் தண்டுப் பகுதி ஆழ்ந்தும், வேலின் தொடக்கம் அகன்றும், நுனி கூர்மையாகவும் விளங்குகின்றன. ஆக, வேலாயுதம் நமக்குத் தெளிந்த அறிவை - ஞானத்தை அருள வல்லதும்கூட!

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் வேலின் மகிமையைக் குறிப்பிடும்போது, பிரகாசிப்பதில் சூரியன் என்றும்; குளிர்ச்சியில் சந்திரன் என்றும்; பகைவர்களை அழிப்பதில் காலன் என்றும்; எவ்வளவு தொலைவு சென்றாலும் உடனே வேகமாகத் திரும்புவதால் மனம் என்றும் கூறியிருக்கிறார்.

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!வேலின் பெயர் கொண்டு அழைக்கப்படும் ஊர்கள் பல உள்ளன. அங்கு வேற்கோட்டம் அமைந்திருந்ததால், அந்தப் பெயர் ஏற்பட்டது என்று சொல்வார்கள். வேலூர்களில் மிகவும் பழைமையானது புதுச்சேரி செல்லும் வழியிலுள்ள உப்புவேலூராகும். திருச்செந்தூர், திருத்தணி, வள்ளிமலை, ஞானமலை ஆகிய தலங்களில் வேல் என்ற பெயரில் வேல் தீர்த்தம் உள்ளது.

இவ்வளவு சிறப்புகள் மிகுந்த - முருகனின் திருக் கரத்தை அலங்கரிக்கும் வேலாயுதத்தால் நிகழ்ந்த பல அற்புதங்களைச் சிலிர்ப்புடன் விவரிக்கின்றன ஞானநூல்கள்.

அம்புகள் வேல்களான அற்புதம்!

மீ
னாட்சி சுந்தரேஸ்வரருக்கு மைந்தனாக சாட்சாத் முருகப் பெருமானின் அம்சமாகவே அவதரித்து பாண்டியப் பேரரசனாகத் திகழ்ந்தவர் உக்கிர பாண்டியன்.

அவர் முருகனின் அம்சமே என்பது தெரிந்தும், இந்திரன் மதுரையை அழிக்கத் துணிந்தான். அவன் கட்டளைப்படி சமுத்திரம் பொங்கிப் பிரவாகித்தது! அப்போது, உக்கிரபாண்டியன், தன் கை வேலாயுதத்தால் சமுத்திரத்தை தடுத்து நிறுத்தி, மதுரையைக் காப்பாற்றிய விவரத்தை திருவிளையாடற் புராணம் மிக அற்புதமாக விவரிக்கிறது.

வேலாயுதத்தால் நன்மை பெற்ற வேறொரு மன்னனின் கதையும் உண்டு. அவன் பெயர் நல்லியக்கோடன். முற்காலத்தில் முன்னூற்று மங்கலம் (தற்போதைய முன்னூர்) என்ற பகுதியை ஆட்சி செய்து வந்த மன்னன் இவன்.

ஒருமுறை நல்லியக்கோடனின் நாட்டைக் கைப்பற்றும் பொருட்டு முந்நூற்றுமங்கலத்தை சோழர்கள் முற்றுகையிடப் போவதாக தகவல் கிடைத்தது. சோழர்களின் படைவலிமையுடன் ஒப்பிடும்போது, நல்லியக் கோடனின் படை வலிமை மிகக் குறைவு.

ஆனாலும் நல்லியக்கோடனின் மனதில் சற்றும் கலக்கமோ அச்சமோ இல்லை. காரணம், கந்தக் கடவுளிடம் அவன் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி! அனுதினமும் தான் வழிபடும் முன்னூற்று மங்கலம் ஆடவல்லீஸ்வரர் கோயிலில் எழுந்தருளி இருக்கும் முருகப்பெருமானை மனம் நெகிழ, கண்களில் கண்ணீர் கசிந்துருகப் பிரார்த்தனை செய்தான்.

அன்று இரவு அவன் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘`நாளை இரவு குளத்திலிருந்து தாமரை மலர்களைப் பறித்தெடுத்து வந்து, என் சந்நிதியில் வைத்து வழிபடுவாயாக. விடிந்ததும் அவற்றையே ஆயுதங்களாகக் கொண்டு தைரியமாகப் போர் செய். நான் வேல் படையாக இருந்து உன்னை வெற்றிபெறச் செய்வேன்’’ என்று அருளினார்.

மன்னனும் அப்படியே செய்தான். மறுநாள் போர்க்களத்துக்குச் சென்றான்.  போர்க்களத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு தாமரைகள் மலர, அந்த கணத்தில் ஒரு விந்தை நிகழ்ந்தது.

மலர்ந்த தாமரைகளுக்குள் இருந்த வண்டுகள் பறந்து சென்று எதிரிப் படையினரின் யானை களின் காதுகளில் புகுந்தன. வண்டின் குடைச்சல் தாங்காமல் மதம் பிடித்துவிட்ட யானைகள் பின்னால் திரும்பித் தலைதெறிக்க ஓடத் தொடங்க, எதிரிகளின் சைன்னியம் நிலைகுலைந்தது;

எதிரிப்படை வீரர்கள் சிதறி ஓடினார்கள். மட்டுமின்றி நல்லியக்கோடன் எய்த அம்புகள் யாவும் முருகப்பெருமானின் கை வேல்களாக மாறி எதிரிகளை அழித்தன.

இப்படிப் புராண - சரித்திர காலங்களில் மட்டுமல்ல, நிகழ்காலத்திலும் வேல் நிகழ்த்தும் அற்புதங்கள் பல உண்டு. அவற்றில் ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். முன்னதாக அடியார்கள் வேலினை எப்படியெல்லாம் போற்றி யுள்ளார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

எண்ணற்ற பல அதிசயங்களை, அற்புதங்களை நிகழ்த்தும் வேலினைப் போற்றி அருணகிரிநாதர், வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, வேல் விருத் தம் ஆகியவற்றைப் பாடியுள்ளார். அவருடைய வேல்வகுப்பு பாடல்களின் சிறப்பு பற்றி வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் மிக அற்புதமாக விவரித்துள்ளார்.

உடல்நோய், மனநோய், உயிர்நோய் ஆகிய மூவகைப் நோய்களுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது ‘வேல் வகுப்பு’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், வேல் வகுப்புப் பாடலின் 16 அடிகளை முன்னும், பின்னும், இடையிலுமாக மாற்றி மாற்றி அமைத்து 64 அடிகள் வருமாறு தொகுத்து `வேல்மாறல் பாராயணம்’ எனும் துதிப்பாடலாக அருளியிருக்கிறார், வள்ளி மலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

தமிழகமெங்கும் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருக்கும் முருகபக்தர்களும் முருகப் பெருமானுக்கு உகந்த நாள்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

வேல்மாறல் பாராயண வழிபாடு செய்வதால் பல நன்மைகள் ஏற்படும். அவ்வகையில், வாசகர் களின் நலனுக்காகவும் உலகம் செழிப்புற்று இருக்க வேண்டும் என்பதற்காகவும் புகழ்பெற்ற முருகன் தலங்களில், சக்தி விகடன் சார்பிலும் வேல்மாறல் பாராயணம் பூஜை நடைபெற்று வருகிறது. 

வேல்மாறல் பாராயணம் செய்து பலன் பெற்ற அன்பர்கள் பலர் உண்டு. இங்கே ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம்...

வேலாயுதத்தை வணங்கினார் வினை நீங்கியது!

ம்மிடம் பேசிய  அன்பர் ஒருவர், வேல்மாறல் பாராயணம் செய்ததால் நிகழ்ந்த அதிசயம் ஒன்றை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

தைப்பூச தரிசனம்! - வேல் நிகழ்த்திய அற்புதம்!

``கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். என் நண்பர் ஒருவர்; மிகச் சிறந்த பண்பாளர். அவர் வாழ்வில் ஒரு பிரச்னை எழுந்தது. அவரின் பாசத்துக்குரிய மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டாள்.

மிகுந்த பொருள் செலவு செய்து மருத்துவம் பார்த்தார்கள். ஆனாலும் பிணி தீரவில்லை. மிகுந்த வேதனையை அனுபவித்து வந்தாள் அந்தப் பெண்.

இந்த நிலையில் சர்வசக்தி வாய்ந்த வேல்மாறல் பாராயணம் குறித்து நண்பர் அறிந்தார் போலும்.    இந்த வழிபாடு எங்கு எப்போது நிகழ்கிறது என்பதை விசாரித்தவருக்கு ஒரு தகவல் கிடைத்தது.

சென்னையில், பெசன்ட் நகரில் அமைந்திருக் கிறது அறுபடைவீடு முருகன் திருக்கோயில். ஒரே ஆலயத்தில் அறுபடை முருகனையும் தரிசிக்கலாம். கடற்கரையில் அமைந்திருக்கும் மிக அற்புதமான திருக்கோயில்.

இந்த ஆலயத்தில் மாதம்தோறும் சஷ்டி திதி வரும் திருநாள்களில் வேல் மாறல் பாராயண பூஜை நடைபெறுவதாகவும், அதில் கலந்து கொண்டால் பல நோய்களும் தீருவதாகவும் கேள்விப்பட்ட நண்பர், இந்தத் தகவலை தன் மகளிடமும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அத்துடன் விரைவிலேயே அவள் நலம்பெற வேண்டும் என்ற வேண்டுதலோடு, வேல்மாறல் பாராயணத்தில் தவறாமல் கலந்துகொள்வது என்று தீர்மானித்தார்.

தனது பிரச்னையை ஆண்டவனிடமே சமர்ப்பித்துப் பிரார்த்தனை செய்வது ஒன்றே வழி என்று முடிவு செய்தார் போலும். ஆகவே, ஒவ்வொரு சஷ்டி திதிநாளிலும் தவறாமல் அறுபடைவீடு முருகன் திருக் கோயிலுக்குச் சென்று, வேல்மாறல் பாராயண பூஜையில் கலந்து கொண்டார்.

அடியார்களுடன் சேர்ந்து பயபக்தியோடு உளப்பூர்வமாக முருகனை வழிபட்டு, வேலினை துதித்து, வேல்மாறல் மந்திரங்களைப் பாராயணம் செய்துவந்தார். விளைவு,  சில மாதங்களிலேயே அவர் பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த புற்றுநோய் படிப்படியாகக் குறைந்து, பூரண சுகம் கிடைத்து விட்டது. இப்போது அந்தப் பெண் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள்'' என்று நெகிழ்ச்சியும் சிலிர்ப்புமாய் கூறினார்.

பிணிகள் மட்டுமின்றி எவ்வித பிரச்னையாக இருந்தாலும், மனமுருக வேலவனையும் வேலாயுதத்தையும் பிரார்த்தித்தால் போதும், சகல பிரச்னைகளும் நீங்கும்; வாழ்க்கை ஒளிரும்.

வேல்மாறல் பாராயணம் மட்டுமின்றி, வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, வேல் விருத்தம் ஆகியவற்றைப் பாராயணம் செய்தும், முருகனின் துதிப்பாடல்களைப் படித்தும், அனுதினமும்  வீட்டில் வைத்தும் வேலை வழிபடலாம்.

தினமும் காலையில் நீராடி, பூஜையறையில் இருக்கும் முருகன் படத்தை அலங்கரித்து, தீபம் ஏற்றி வைக்கவேண்டும். நெய்தீபம் விசேஷ பலன்களை அளிக்கும்.

பின்னர் மனதுக்குள் பிரார்த்தனையைச் சங்கல்பித்துக்கொண்டு, விநாயகரை வணங்கி பூஜை - பாராயணத்தைத் தொடங்கலாம்.

பாராயணம் நிறைவுற்றதும் முருகனின் திரு நாமங்களைச் சொல்லி போற்றி கூறி செவ்வரளி, செம்பருத்தி ஆகிய மலர்களால் அர்ச்சனை செய்து, பிறகு தூபதீபம் காட்டி, ஆராதிக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல்  அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்யவேண்டும்.

செவ்வாய், சஷ்டி, கிருத்திகை போன்ற நாள்களில் வழிபாட்டை தொடங்கி, தினமும் வழிபட்டு வாருங்கள். முருகனின் திருவருளால், வாழ்வில் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும்.

எஸ்.கண்ணன்கோபாலன்