
மலர்ந்தன மனப் பூக்கள்!
மனமது செம்மையானால் கிடைக்கும் மகத்துவங்களுக்கு அளவேது? சரி... மனம் செம்மையாக என்னென்ன தேவை?

குருமார்களின் வழிகாட்டல் தேவை; மகான்களின் நல்லாசிகள் தேவை. அப்படியான பெரும்பேறு கோவை மாநகர் அன்பர்களுக்கு வாய்த்தது.
ஆம்! கடந்த டிசம்பர்-30 ஞாயிற்றுக்கிழமையன்று, மாலை வேளையில் கோவை-ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சாரதாம்பாள் திருக்கோயில் - ஸ்ரீவித்யாபாரதி ஹாலில், புத்தாண்டு சிறப்பு நிகழ்வாக `மனம் மலரட்டும்’ எனும் தலைப்பில் மிக அற்புதமான வைபவம் நடந்தேறியது. தயாலயா வேதாந்த ஆய்வு மையம் மற்றும் சக்தி விகடன் இணைந்து நடத்திய இந்த வைபவத்தில், எண்ணற்ற அன்பர்கள் கலந்துகொண்டு, மகான்களின் அருளுரைகளில் திளைத்து மகிழ்ந்தார்கள்.
ஸ்ரீலலிதாம்பிகை அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லீலாவதி சம்பத்குமார் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். `மனம் மலரட்டும்’ என்று இவ்வுலக மக்களுக்கு ஆசி வழங்கி, ஞானவொளி ஏற்றி வைத்த பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிஜியின் மகத்துவங்களைப் பகிர்வதாக அமைந்தன விழா வைபவங்களும் உரைகளும்.
‘‘இருப்பதெல்லாம் இறைவனே என்ற வேதாந்த உண்மையை உலகெங்கும் ஒலிக்கச் செய்தவர், உலக அரங்கில் இந்து மதக் கருத்துகளை எளிய முறையில் எடுத்துக் கூறியவர் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிஜி’’ எனத் தொடங்கி, கோவை ஆர்ஷா வித்யாலயாவைச் சேர்ந்த சுவாமி கணேஷ ஸ்வரூபானந்த சரஸ்வதி துவக்க உரை நிகழ்த்த, தொடர்ந்து ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் சார்பில் என். அவிநாசிலிங்கம் தயானந்த சரஸ்வதி சுவாமிஜியின் ஞானப்பணிகளை அழகுற எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, தயாலயா வேதாந்த ஆய்வு மையத்தின் ஆசார்யர் சுவாமி ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், `மனம் மலரட்டும்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி, மிக அற்புதமாக புத்தாண்டை வரவேற்றார்.
கங்கை நதி தீரத்தில்...
``ஒருநாள் அதிகாலை. கங்கைநதி தீரம். ரிஷிகேஷ் அருகே புராணி ஜாடி என்ற இடம். அங்கே ஓலைக்குடில் ஒன்றில் இளந்துறவிகள் இருவர் அங்குத் தங்கியிருந்தனர்.
அவர்களில் ஒருவர், தேநீர் தயாரிக்க வேண்டி மண்ணெண்ணெய் ஸ்டவ்வைப் பற்றவைத்தார். எதிர்பாராதவிதமாக அது குபீரென்று வெடிக்க, கண நேரத்தில் மொத்தக் குடிலும் பற்றி எரியத்தொடங்கியது.
சற்றுத்தொலைவிலிருந்த சந்நியாசிகள் சிலர், இவர்களுக்கு உதவி செய்வதற்காக ஓடி வந்தனர். அதற்குள், இளந்துறவிகள் இருவரும் நெருப்பிலிருந்து வெளியே பாய்ந்தனர். இருவரில் ஒருவர் பதற்றத்துடன் நின்றிருக்க, இன்னொருவரோ இதழில் புன்னகையுடன் எரியும் குடிலை உற்றுநோக்கிய வண்ணம் நின்றிருந்தார். குடிலுக்குள்ளிருந்த அவர் உடைமைகள் யாவும் எரிந்து நாசமாயின. அவர் பல ஆண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த - கண்ணெனக் காத்து வந்த அரிய சம்ஸ்கிருத, வேத - வேந்தாந்த நூல்கள் யாவும் மிச்சமின்றி எரிந்துபோயின.

ஆனாலும், அந்த இளந்துறவி சிரித்தபடியே யாவற்றையும் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் எந்த மாற்றமோ பாதிப்போ தெரியவில்லை. இழப்பதற்கும் ஏதுமின்றி, வருத்தப்படவும் ஏதுமின்றி, நடப்பதை ரசித்துக்கொண்டிருந்த அந்த இளந்துறவி யார் தெரியுமா?
பின்னாளில் உலகுக்கே ஞான ஒளியூட்டிய ஸ்வாமி தயானந்த சரஸ்வதிதான அவர்!
உடைமைகளை உதறித்தள்ளி தூய சந்நியாசத்தின் சிகரத்தைத் தொட்ட அவரின் மனம், கீதை காட்டும் ‘ஸமத்வம் யோக உத்யதே’ என்ற உயர்நெறியில் லயித்திருந்தது. ஆகவேதான், கண நேரத்தில் உடைமைகள் அனைத்தும் கருகிப்போனாலும் அவரின் மனம் மலர்ந்திருந்தது!
மனம் மலரட்டும்!
1930-ல் தஞ்சையில் பிறந்து 2015 வரை உலகமெங்கும் வேதாந்த நெறி சார்ந்த ஞானத்தைப் பரப்பியவரும், ஆயிரத்துக்கும் மேலான சந்நியாசிகள் மற்றும் ஆசார்யங்களை உருவாக்கிய வருமான பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள், வேத வேதாந் தக் கருத்துகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில், எளிய முறையில் வழங்கியவர்.
மனம் மலரட்டும் - இது பூஜ்யஸ்ரீ தயானந்தரின் ஆசீர்வாதம். நம் மனம் இன்னும் அவிழாத மொட்டாக இருப்பதால்தான் `மனம் மலரட்டும்’ என்று சுவாமி சொல்கிறார். `மலர்தல்’ என்ற சொல் மனம் பக்குவப்படுவதைக் குறிக்கும்.
சாஸ்திரம் மனதை அந்தக்கரணம் என்ற சொல்லால் குறிப்பிடுகிறது. அதற்கு நான்கு பரிமாணங்கள் உண்டு. அவை மனம், புத்தி, சித், அகங்காரம் ஆகியவையாகும். இவை நான்குமே மனதின் செயல்பாடுகள்தான். இவையே மனிதனின் இன்ப - துன்பங்களுக்குக் காரணம்.

சுவாமி சொல்வார்... ‘எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டன. இனி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற நிலை வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு குறை இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனாலும் ஏதேனும் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு விளையாட்டு, கார்ட்டூன் என்று மகிழ்ச்சியாக இருப்போம். ஆக, மகிழ்ச்சி அடைய வேண்டுமானால் விருப்பங்கள் நிறைவேற்றப் படவேண்டும் என்பது அவசியம் இல்லை’ என்று கூறுவார். அவரின் கருத்தில் வாழ்க்கை என்பது மெச்சூரிட்டி. மனப்பக்குவம் அடைதல்.
பூஜ்ய சுவாமிகளின் அருளுரைகளும் ஞான மொழி களும் எண்ணற்ற மனப்பூக்களை மலரச் செய்தன. அவரிடம், `மனம் எப்போது மலரும்’ என்று அன்பர்கள் கேட்டதுண்டு. சற்றும் தாமதிக்காமல் பதில் சொல்வார் அவர், `இப்போதே மலரும்’ என்று.
உண்மைதானே! சத்குருவின் அணுக்கமும் அருளும் போதாதா, நம் மனம் எப்போதும் மலர்ந்து திகழ. உங்களின் மனமும் மலரும். மனம் மலர்ந்தால் மக்களின் வாழ்க்கையும் மலரும்’’
என்று ஸ்ரீ ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் உரை நிகழ்த்தி முடிக்க, அரங்கிலிருந்த அனைவரது முகங்களிலும் மலர்ச்சி. அவர்களின் மனப்பூக்கள் மலர்ந்துவிட்டதன் வெளிப்பாடு அது என்றே சொல்லலாம்!
நம் மனம் மலர, சிந்தை மகிழ தொடர்ந்து நிகழவுள்ளது இந்த அற்புத வைபவம்! ஆம், வரும் 27.1.19 ஞாயிறன்று, கோவை-ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீசாரதாம்பாள் திருக்கோயில் - ஸ்ரீவித்யாபாரதி ஹாலில், `இருப்பதெல்லாம் இறைவனே’ எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது, மனம் மலரட்டும் வைபவம். வாருங்கள்... உங்கள் மனமும் வாழ்வும் மலரட்டும்!
- ரா. கௌசல்யா, படங்கள்: அருண்.K