ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

வாருங்கள் வழிபடுவோம் வேலாயுதத்தை!

வாருங்கள் வழிபடுவோம் வேலாயுதத்தை!
பிரீமியம் ஸ்டோரி
News
வாருங்கள் வழிபடுவோம் வேலாயுதத்தை!

வாருங்கள் வழிபடுவோம் வேலாயுதத்தை!

அற்புதங்கள் நிகழ்த்தும்  வேல்மாறல் பாராயணம்  சிறப்பு வைபவம்  உங்களுக்காக!

`வேலுண்டு வினையில்லை’ என்பார்கள் பெரியோர்கள். வறுமை, முன்னேற்றத்தில் தடைகள், தொழிலில் தடங்கல்கள், கல்யாண ஏற்பாடுகளில் பிரச்னைகள், கல்யாணமாகி வெகுகாலமாகியும் குழந்தைப் பேறு வாய்க்காத நிலை, தீரா துன்பத்தைத் தரும் உடற்பிணிகள்... இப்படி சகல வினைகளையும் வேரறுத்து நம்மைக் காத்து ரட்சிக்கும் வல்லமை கொண்டது, முருகனின் படைநாயகமாம் வேலாயுதம்.

வாருங்கள் வழிபடுவோம் வேலாயுதத்தை!

முருக வழிபாட்டுக்கும் முந்தையது வேல் வழிபாடு என்பார்கள். முருகப் பெருமானுக்கே உரிய ஞானசக்தி- வேலாயுதம். வேல் என்ற சொல் ‘வெல்’ என்ற முதல் நிலை நீண்ட தொழிற்பெயர். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு ‘வெற்றிவேல்’ என்று பெயர். எல்லாவற்றையும் வெல்வது வேலாயுதம். இந்த வேல் வெளிப்பகையை மட்டுமல்ல, உட்பகையையும் அழிக்கும்.

வேல் தத்துவம் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள், பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவாய் உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும். வேலாயுதம் பஞ்சாட்சர மூலமந்திரம் ஆகும் என்றும் சிறப்பிப்பார்கள். சூரனை அழிக்க வேல் ஏவிய செய்தியைச் சொல்ல வந்த அருணகிரியார், ‘சிவம் எனும் அஞ்செழுத்தை முந்த விடுவோனே’ என்று குறிப்பிடுவார். எனவே, வேலாயுதத்துக்கு மேலாயுதம் எங்கும் இருப்பதற்கில்லை.

ஆகவேதான் வேலை வணங்கி வழிபட்டால் வேதனைகள் இல்லை என்று ஞானநூல்கள் கற்பிக்கின்றன. அற்புதமான அந்த வேலாயுதத்தைப் போற்றி வணங்கும் வழிபாடுதான், வேல்மாறல் பாராயணம்!

வள்ளிமலை சுவாமிகள் தொகுத்துத் தந்த அருள்பொக்கிஷம்!

அருணகிரிநாதர் அருளிய வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு வேல்மாறல் பாராயணமாகத் தொகுத்து அருளியிருக்கிறார்  வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த ஸ்வாமிகள். தமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில் வேல்மாறல் பாராயணம் செய்து வழிபட்டு வருகிறார்கள்.

ஒரு மண்டல காலம் இந்த வழிபாட்டைச் செய்து வேலாயுதனையும் வேலாயுதத்தையும் வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் கை கூடும்; சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற்பிணிகள் மட்டுமல்ல, மனப் பிணிகளும் அகலும்; தடைகள் யாவும் நீங்கி வாழ்க்கை செழிக்கும்.

வாருங்கள் வழிபடுவோம்!

அற்புதமான இந்த வழிபாட்டின் மகிமையை நம் வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கவும், அதன் பயனால் அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி செழித்தோங்கவும், உலக நன்மைக்காகவும் வேண்டி, மிக உன்னதமான விழாவைபவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாருங்கள் வழிபடுவோம் வேலாயுதத்தை!

ஆம்! வரும் 23.6.19 ஞாயிற்றுக்கிழமை அன்று கொளத்தூர் - பாலாஜி நகர் அருள்மிகு பாலவிநாயகர் திருக்கோயிலில், சக்தி விகடன் மற்றும் கொளத்தூர் ஸ்ரீசண்முகானந்தா சபா டிரஸ்ட் இணைந்து வழங்கும் வேல்மாறல் பாராயண வைபவம் நடைபெறவுள்ளது.

அன்று  காலை 10 மணிக்கு தொடங்கும் வைபவத்தில் கந்தரநுபூதி, வேல் பாட்டு, வேல்மாறல் பாராயண வைபவம் ஆகியவற்றுடன் விசேஷ சங்கல்பத்துடன் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. வாசக அன்பர்களும் பக்தர்களும் தவறாமல் இந்த வேல்மாறல் பாராயண பூஜையில் கலந்துகொண்டு, மால்மருகனின்  திருவருளுக்குப்  பாத்திரமாகலாம்!

- சைலபதி

வேலாயுத்தைப் போற்றும் ஞானநூல்கள்!

சி
றப்புமிகு வேலாயுதத்தின் அருமை பெருமைகளைப் புகழ்ந்து வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு (வாங்குதல்-செல்லுதல்), வேல்விருத்தம் ஆகியற்றைப் பாடியுள்ளார் அருணகிரியார். வேல் அலங்காரம் எனும் 100 பாடல்கள் கொண்ட நூல், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளியதாகும். கந்தபுராணத்திலும் வேலின் சிறப்பைக் கூறும் பல பாடல்கள் உள்ளன. மேலும், உடம்பிடித் தெய்வாஷ்டகம், வேல்பதிகம், சத்ரு சம்ஹார வேற் பதிகம், வேல் வணக்கம், வேற்பத்து, வேல்பாட்டு, வேல் தெய்வமாலை முதலான பல நூல்களும் வேலைப் புகழ்ந்து பாடுகின்றன.

வேலுக்கு வேறு பெயர்கள்!

பா
ம்பன் சுவாமிகள் இதனை ‘படை அரசு’ என்று போற்றுவார். ‘படைநாயகம்’ என்றும் பெயருண்டு. வேலைக் குறிக்கும் சொற்கள் பல உள்ளன. அவை: அயில், ஆரணம், உடம்பிடி, எஃகம், எஃகு, குந்தம், சக்தி, ஞாங்கர், மதங்கு, வாகை, விட்டேறு.