விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

மொட்டை விநாயகரை வணங்கினால் வியாபாரத்தில் ரெட்டை லாபம்தான்!

அன்னையின் ஆலயம் காத்த ஆனைமுகன்!

மொட்டை விநாயகரை வணங்கினால் வியாபாரத்தில் ரெட்டை லாபம்தான்!
##~##
டேங்கப்பா... ஐந்துகரத்தான், ஆனைமுகத்தான், தொந்தி கணபதி என்று விநாயகப் பெருமானுக்குத்தான் எத்தனை எத்தனைத் திருநாமங்கள்! மதுரையில் உள்ள ஒரு கணபதியை, மொட்டைப்பிள்ளையார் என அழைக்கின்றனர் பக்தர்கள்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது கீழ மாசி வீதி. இங்கே அமைந்துள்ள ஸ்ரீமொட்டை விநாயகர் கோயில், வெகு பிரபலம். பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அழகிய ஆலயம் இது.

மதுரையின் மையப் பகுதியில், வியாபாரம் சிறந்து விளங்கும் இடத்தில், இந்தப் பிள்ளையார் அமைந்துள்ளதால் இவரை ஸ்ரீவியாபார விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.

அந்நியர் படையெடுப்பின் போது, ஸ்ரீமீனாட்சியம்மன் ஆலயத்தைச் சேதப்படுத்தப்பட்டத் திட்டமிட்டனராம். அப்போது, மொட்டை விநாயகர் கோயிலுக்குச் சென்றுவிட்டு, விபூதி பூசிக்கொண்டு, வியாபாரிகள் தங்கள் கடைகளைத் திறப்பதைப் பார்த்துக் கோபமுற்ற அந்நிய தேசத்து மன்னன், பிள்ளையாரின் சிரசைத் துண்டாக்கி, ஆற்றில் வீசினானாம். பிறகு, சிவனாரின் பேரருளால் அந்த சிரசு மீண்டும் அதே இடத்துக்கு வந்ததைக் கண்டு ஆடிப்போன அவன், உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. ஆக, மதுரை மீனாட்சியம்மனின் ஆலயத்தையே காப்பாற்றிய விநாயகர் இவர் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

புதிதாக வியாபாரத்தில் அடியெடுத்து வைப்பவர்கள், கடை திறப்பவர்கள் இங்கு வந்து மொட்டை விநாயகருக்கு அபிஷேகம் செய்து, 108 சிதறுகாய் உடைத்து வேண்டிச் சென்றால், வியாபாரம் செழிக்கும் என்பது ஐதீகம்.

இந்தப் பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்யும் அன்பர்கள், தினமும் மொட்டை விநாயகரைத் தரிசித்த பின்னரே கடை திறப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் அதிக மதிப்பெண்கள் எடுக்கவும் விநாயகரைத் தரிசித்து, தோப்புக்கரணமிட்டு வேண்டிச் செல்கின்றனர். தேர்வு நாளில், இவரின் திருவடியில் பேனாவை வைத்து வேண்டிக்கொண்டால், ஜெயம் நிச்சயம் எனச் சொல்லி மகிழ்கின்றனர் மாணவர்கள்.  

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், இங்கு வந்து விநாயகப் பெருமானுக்கு பொங்கல் வைத்தும், அபிஷேகம் செய்தும் தரிசித்துச் செல்கின்றனர்.

கல்வி, வியாபாரம், பதவி உயர்வு, கல்யாண வரம் எனச் சகலமும் தந்தருளும் இந்த விநாயகரிடம், திருடு போன பொருட்களைச் சொல்லி முறையிட்டால் போதும்... விரைவில் களவு போன பொருள் வீடு வந்து சேரும் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்.

வெள்ளிக்கிழமை, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி முதலான விசேஷ தினங்களில், வெள்ளிக் கவசத்தில் தலையின்றிக் காட்சி தரும் மொட்டை விநாயகரின் அழகே அழகு! இங்கு, ஆலயத்தில் ஸ்ரீபத்ரகாளியம்மன் பீடமும் உள்ளது. வியாபார விநாயகரை வணங்கினால், தொழிலில் ஜொலிப்பதும் ஜெயிப்பதும் உறுதி!

            - அ.சுருதி
படங்கள்: எஸ்.கேசவசுதன்