தனம் தந்த தலைவெட்டிப் பிள்ளையார்!

##~## |
பிள்ளையாரும் அவரின் திருவுருவங்களும் சுவாரஸ்யம் நிறைந்தவை. அவரின் திருநாமமும் இங்கே வித்தியாசமாக இருக்கிறதே என்று விசாரித்தால்... அதற்கான காரணமும் வினோதமாக இருக்கிறது.
''ஒருகாலத்தில், இந்தப் பிள்ளையாரின் சிரசில், 'தன் தலையை நீக்கி, தனத்தை எடு!’ன்னு ஒரு வாசகம் இருந்துச்சாம். அதைப் பார்த்துட்டு ஒவ்வொருத்தரும், 'நம்ம தலையை வெட்டிக்கிட்டா எப்படி தனத்தை, அதாவது பணத்தை நாம எடுக்கறது?’ன்னு குழம்பித் தவிச்சாங்களாம். அப்புறம் ஒரு நாள், 'பிள்ளையாரோட தலையை வெட்டினா, அதுக்குள்ளே காசு, பணம் இருக்கும். அதை எடுத்து, ஊருக்கு நல்ல முறையில பயன்படுத்தணும்னு ஆனைமுகத்தான் சொல்றான்!’ என ஊர்ல ஒருத்தருக்கு அருள் வந்து சொல்ல... ஊர் மொத்தமும் கூடிய நிலையில், விநாயகரின் தலை துண்டிக்கப்பட்டதாம்!
அப்புறம், அதுக்குள்ளே இருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் எடுத்து, ஊருக்குக் குளம் வெட்டவும், கிணறு வெட்டவும் பயன்படுத்தினாங்களாம். இப்படியரு கதை உண்டு, இந்தப் பிள்ளையாருக்கு. அன்னிலேருந்து இவர் தலைவெட்டி விநாயகர்னு எல்லோராலும் சொல்லப்படுறார்'' என்றார், இந்த ஊரின் ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ஹரிகிருஷ்ண சாமி ஐயா.

''சுமார் 500 வருட பழைமையானவர் இந்தப் பிள்ளையார். கல்யாணத் தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இங்கு வந்து, பொங்கல் படையலிட்டு, ரோஜா மற்றும் சம்பங்கி மாலை அணிவித்து, பச்சரிசி, எள், வெல்லம் எனக் கலந்த கலவையைக் கீழே சிந்தியபடியே விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும். பிறகு, விநாயகரின் கழுத்தில் உள்ள மாலையை வாங்கி, கழுத்தில் இரண்டு முறை எடுத்து எடுத்துப் போட்டுக் கொள்ளவேண்டும். பிறகு, விநாயகரின் கழுத்திலேயே திரும்பவும் அந்த மாலையை அணிவித்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிடவேண்டும். இதையடுத்து சீக்கிரமே கல்யாண வரம் தேடி வரும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை'' என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த ராஜலட்சுமி.
வேலை கிடைக்கவில்லையே என ஏங்குவோர், தொடர்ந்து மூன்று சனிக்கிழமைகள் இங்கு வந்து, இந்த ஊரில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயருக்கும் தலைவெட்டி விநாயகருக்கும் வெற்றிலை மாலை சார்த்தி, நெய் விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் நல்ல உத்தியோகம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மாலை சுற்றிக் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்பார்கள். அப்படிப் பிறந்துவிட்டால், இந்தத் தலைவெட்டி விநாயகருக்குக் கொடி போல் நூல் செய்து அணிவித்து வணங்கினால், அந்தக் குறை நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
இன்னொரு விஷயம்... தலைவெட்டி விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகரோ பூசாரியோ இல்லை. நாமே பூஜைகளைச் செய்துவிட்டு, வணங்கிச் செல்லலாம்.
- கா.பெனாசிர்
படங்கள்: வீ.சிவக்குமார்