இரட்டிப்பு சந்தோஷம் தரும் இரட்டை விநாயகர்!

##~## |
சங்கடஹர சதுர்த்தி நாளில், மாலையில் விநாயகரைத் தரிசித்துப் பிரார்த்திப்பதற்காக வருகை தருகிற பக்தர்கள் ஏராளம். விநாயகர் சதுர்த்தி நாளில், அதிகாலை 5 மணிக்கு துவங்கி இரவு 12 மணி வரை, சிறப்பு பூஜைகளும் தரிசனமும் அமர்க்களப்படும் என்கின்றனர், பக்தர்கள். இந்த நாளில், இங்கு நடைபெறும் சிறப்பு கணபதி ஹோமத்தில் கலந்து கொண்டால், விக்கினங்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.
பிரார்த்தனை நிறைவேறியவர்கள், விநாயகர் சதுர்த்தி நாளில், அவல், மோதகம், அப்பம், சுண்டல் என நைவேத்தியப் பிரசாதங்களை எடுத்து வந்து, விநாயகரை வணங்கிச் செல்கின்றனர்.
கல்யாண வரன் தகைய வேண்டும் என விரும்புவோர், குழந்தை பாக்கியம் கேட்டுப் பிரார்த்திப்போர், வழக்கில் நல்ல தீர்ப்புக்காகக் காத்திருப்போர் ஆகியோர் இங்கு வந்து ஸ்ரீஇரட்டை விநாயகர்களுக்கும் தேங்காய் மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், விரைவில் நினைத்தது நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்! அதேபோல், தங்களுக்கு என்ன வயதோ (25 என்றால் 25 விரலி மஞ்சள்) அந்த வயதைக் குறிக்கும் வகையில் விரலி மஞ்சளைத் தொடுத்து மாலையாக்கி, விநாயகருக்குச் சார்த்தினால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கை!
மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமை மாலையில், இந்தக் கோயிலில் நடைபெறும் திருவிளக்கு பூஜை ரொம்பவே விசேஷம். சனிக்கிழமைகளில், தேங்காய் எண்ணெய் ஊற்றி, விளக்கேற்றி வழிபட்டால், சனி தோஷங்கள் யாவும் விலகும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை!
மதுரை தல்லாகுளம் ஸ்ரீஇரட்டை விநாயகரை வணங்குங்கள்; இரட்டிப்பு சந்தோஷத்தைப் பெறுவீர்கள்!
- ச.பா.முத்துகுமார்
படங்கள்: எஸ்.கேசவ சுதன்