விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

வாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...

வாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...

வாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...
வாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...
##~##
வணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திருநாளையே விநாயகர் சதுர்த்தியாகக் கொண்டாடுகிறோம். இந்த வருடம், வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி! இந்தத் திருநாளில் ஆனைமுகத்தானை முறைப்படி வழிபட, நமது அல்லல்கள் யாவும் நீங்கும்; ஆனந்தம் பெருகும்.

அதற்குமுன், அவரது அருமைபெருமைகளை அறிந்து வழிபடுவது, இன்னும் விசேஷம் இல்லையா? அதற்கு, அருளாளர்கள் பலரும் வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் எப்படியெல்லாம் பிள்ளையார் பெருமானைப் போற்றியிருக்கிறார்கள் என்பதை அறிவது, விநாயகரின் மீதான நமது பக்தியைப் பெருக்கி, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழ ஏதுவாகும்.

குணநிதி... கணபதி!

கலைநிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணநிதி சரணம் சரணம்

- எனப் போற்றி மகிழ்கிறார் ராமலிங்க அடிகள்! சகல கலைகளும் ஒருவரிடம் சங்கமமாகி இருந்தாலும் குணம் இல்லையேல் அவரால் சமுதாயத்துக்கு என்ன பயன்?

ஸ்ரீகணபதியோ குணநிதியாக விளங்குகிறார். மகா தேவனும், மகாசக்தியும் பெற்றெடுத்த மகா கணபதி எவ்வளவு எளிமையாக இறங்கிவருகிறார், பாருங்கள்!

வாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...

தங்கத்தில்தான் தன் வடிவம் வேண்டும் என்கிறாரா? களிமண் போதும் என்கிறார்! வெண்கொற்றக் குடையா வேண்டும் என்கிறார்? காகிதக் குடை போதும் என்கிறார்! ரோஜாப்பூ மாலை எல்லாம் வேண்டாம் அவருக்கு; எருகம்பூ மாலை போதும் என ஏற்றுக்கொள்கிறார்! பூஜை செய்யவாவது மலர் வேண்டுமா என்றால்... 'புல் போதும்’ என அருகம்புல்லில் அர்ச்சனை ஏற்கிறார்!

அதுமட்டுமா? 'பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்று பெருமையுடன் பேசுகின்றன புராணங்கள். முருகனின் திரு உருவம், அம்பிகை திரு உருவம், ஸ்ரீராமன், கிருஷ்ணர்

முதலிய திருவடிவங்களில் அனைத்து அங்கங்களும் சாஸ்திர முறைப்படி அமைய வேண்டும். பூஜை செய்யும் விக்கிரங்கள் சற்று உடைந்தோ, பங்கப்பட்டு போயிருந்தாலோ செய்யும் பூஜை பலன் அளிக்காது. ஆனால் 'விநாயகர்’ என மனதார எண்ணி,

களிமண்ணில், மஞ்சள் தூளில், சந்தனத்தில் விரல்களால் அழுத்தி வைத்தால் போதும்; விநாயகர் வந்துவிடுவார். சாணத்தில் கூட சாந்நித்யம் அருளும் சாமான்யராக விளங்குகிறார் முதல்மூர்த்தி.

'வா’ என்றால் வருவதற்கும், 'போ’ என்றால்

போவதற்கும் நான் என்ன உங்கள் வேலைக்காரனா என பலர் கோபிக்கிறார்கள். ஆனால் பிள்ளையாரைப் பிடித்துவைத்து 'ஆவாஹயாமி’ என்றால் வந்துவிடுவார்; 'யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி’ என்றால் போய் விடுகிறார்.

ஆக... தன்னையே உதாரணமாக்கி, எளிமையே ஏற்றம் தரும் என நமக்குக் கற்பித்து, அந்த எளிமையால் பண்பும் பணிவும் மிகுந்து நாமும் நல்ல குணவானாக மாற அருள்கிறார்!

கல்விக்கு அதிபதி

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ

- என ஆனைமுகனைப் புகழ்கிறார் அருணகிரியார்.

நம்பியாண்டர் நம்பிக்கு, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் எல்லா கலைகளையும் அருளியதை நாம் அறிவோம்!

அழகான தனது தந்தம் பாதி ஒடிந்தாலும் பரவாயில்லை; மகாபாரத கிரந்தமானது கற்றிடும் அடியவர்க்குக் கட்டாயம் வேண்டும் என எண்ணி, அழகைப் பின் தள்ளி அறிவுக்கு முக்கியத்துவம் தந்து, பிள்ளையார் சுழி போட்டு பிள்ளையாரே எழுதியதுதானே வியாச மகாபாரதம். அவரை வழிபட, நமக்கும் ஞானம் அருள்வார்!

உணவும் உயர்வும்...

முப்பழம் நுகரும் மூஷிக வாகன

- என ஒளவையின் விநாயகர் அகவல் பிள்ளையாரைப் போற்றுகிறது! சாப்பிடுவதில் பெரிய சமர்த்தராக விளங்குவது பெருமையா எனக் கேட்கலாம்.அருணகிரியார்கூட, 'கைத்தல நிறைகனி, அப்பமொடு அவல் பொரி கப்பிய கரிமுகன்’ என்றே போற்றுகிறார். ஏனெனில், பிள்ளையார் நிவேதனங்கள் அனைத்தும் சத்வ குண ஆகாரங்கள். உணவே நல் உணர்வைத் தருகிறது என்கிறது பகவத்கீதை. தமோ குணம், ரஜோ குணம் தருகின்ற காய்கறி, உணவு வகைகளைத் தவிர்த்து சத்வ குண உணவாலேயே பிள்ளையார் பெருமை பெறுகிறார். மிகப்பெரிய விலங்காகவும், அமைதியாகவும் சொன்னதைக் கேட்பதாகவும் 'யானை’ விளங்குவது தாவர உணவு உட்கொள்வதால்தான்!

மனம்- வாக்கு- காயம்...

'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்... மேனி நுடங்காது’

வாக்குண்டாம்... நல்ல மனம் உண்டாம்...

எனும் பாடலில் மனம், வாக்கு, காயம் மூன்றையும் புனிதப்படுத்துகிறது பிள்ளையார் வழிபாடு என ஒளவை புகழ்கிறாள்!

எல்லா தெய்வ சந்நிதானங்களுக்கு முன்பும் நாம் கும்பிடு மட்டுமே போடுகிறோம். முதல் தெய்வமான கணேசருக்குத்தான்... குட்டிக் கொள்வது, தோப்புக்கரணம் போடுவது என கூடுதலாக இரண்டு வழிபாடுகள். கண் புருவ முடிவும், நெற்றியும் சேரும் இடத்தில் 'டெம்பரல் லோப்ஸ்’ சுரப்பிகள் உள்ளன. இடப்புறம் உள்ள சுரப்பி தெளிவான பேச்சுக்கும், வலச் சுரப்பி குழப்பமற்ற மனதுக்கும் காரணமாக அமைகின்றன. காதுகளை பிடித்தபடி உட்கார்ந்து எழுந்திருப்பது வாழ்நாளை நீட்டிக்கிறது. அவரை தரிசிப்பதே மனதைப் பரவசப்படுத்துகிறது.

ஆக... மனம், வாக்கு, காயம் மூன்றையும் மேன்மையுறச் செய் யும் முதல்வனுக்கு கும்பிடு, குட்டு, தோப்புக்கரணம் என மூன்றையும் சமர்ப்பித்து முதல் நிலை பெற வேண்டும்.

அனைத்தும் ஒன்றானவர்

தேசியகவி பாரதியார் பாடிய தெய்விகப் பதிகம் விநாயகர் நான்மணி மாலை! புதுவை மணக்குள விநாயகரைப் போற்றும் அந்தப் பதிகத்தில், 'மண் மீதுள்ள மக்கள், விலங்குகள், பூச்சிகள் யாவும் இடும்பை தீர்ந்து இன்பமாய் வாழ’ என்று பாடுகிறார்.

அனைத்து வகை ஜீவராசிகளும் நலமுற விநாயகரே அருள்புரிவார். எப்படி என்கிறீர்களா? அவருடைய திருவடிவத்தை ஊன்றிக் கவனித்தால் உண்மை புரியும். விநாயகரின் தலை- யானைத் தலை. அது, மிருகக் கூறு. ஏக தந்தம் உடைய பக்கம் ஆண்; தந்தம் இல்லாத பக்கம் பெண் (பெண் யானைக்கு தந்தம் கிடையாது). ஐந்து திருக்கரங்கள் - தெய்வ லட்சணம். குறுகிய கால்களும், பெருத்த வயிறும்- பூத அம்சம்.

எனவே எல்லாமுமாகி கலந்து நிறைந்தவர் பிள்ளையார். பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர் திணையாய், அஃறிணையாய் தோற்றம் அருள்பவர் விநாயகர்.

நூதன நிவேதனம்

ஆதிசங்கரர் அருளியது 'ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம்’. அதில், 'முதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்’ என ஆரம்பம் செய்கிறார் ஆதிசங்கரர்.

மோதகம் படைத்தால் முக்தி அருள்வார் விநாயகர். 'போதகம்’ என்றால் தமிழில் 'யானை’ என்று பொருள். போதகம் முன்பு மோதகம் எனும் கொழுக்கட்டையை நிவேதித்தால், பாதகம் அனைத்தும் நீங்கி சாதகம் ஆகும் என்கிறது சாஸ்திரம்.

கொழுக்கட்டையிலேயே அந்தக் குறிப்பு இருக்கிறது. அரிசி மாவில் சொப்புபோல செய்கிறோமே, அது உடம்பைக் குறிக்கிறது.

உள்ளே வெல்லத்தில் பூரணம் வைக்கிறோமே, அது ஆத்மாவை குறிக்கிறது. இப்படிச் செய்த மோதகத்தைப் படைத்து அவரைச் சரண் அடைவது பரிபூரணமாக நம்மை அவரிடம் ஒப்படைக் கிறோம் என்பதைக் காட்டுகிறது. பரிபூரண சரணாகதியே மோட்சம் அடையும் வழி இல்லையா?

புலவர்கள் போற்றும் நாயகன்!

'வேழ முகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்’

என்பது புலவர்களின் பொன்னுரை.

ஒளவைப் பாட்டி விநாயகரை பூஜை செய்ய தொடங்கும் நேரத்தில் சுந்தரர், சேரமான்பெருமாள் நாயனார் இருவரும் வந்தனர். 'மூதாட்டியே! நாங்கள் கயிலாயம் செல்கிறோம். தாங்களும் வாருங்கள்’ என அழைத்தனர். ஒளவையோ 'எனக்கு கணபதி பூஜையே முதல்; தாங்கள் செல்லுங்கள்’ என்றாள்.

ஒளவைக்கு அதிர்ஷ்டம் இல்லை என்றபடி இருவரும் கிளம்பிச் சென்றனர். ஆனால் ஒருமைப்பட்ட மனதுடன் விநாயகருக்கு பூஜை செய்து முடித்ததால், கணபதியே பிரசன்னமாகி கணநேரத்தில் கயிலாயத்தில் ஒளவையைச் சேர்த்தார். நாமும் 'வாழ்விக்கும் முகமே வேழ முகம்’ எனத் தெளிவோம்.