விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்
தொடர்கள்
Published:Updated:

பிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்!

ஸ்ரீகருவளர்த்த நாயகியின் கருணை!

பிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்!
##~##
ல்யாணம் முடிந்ததும், 'சீக்கிரம் ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுங்கம்மா... அதுபோதும்’ என்பதுதான் இந்த உலகில் உள்ள பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. காசும் பணமுமாகக் கொட்டிக் கிடந்து என்ன... அள்ளியெடுத்துக் கொஞ்சு வதற்கு ஒரு குழந்தை இல்லையெனில், அந்தச் செல்வத்துக்கு என்ன மதிப்பு? பிள்ளை வரம் கேட்டுக் கலங்குவோர் அனைவரின் கண்ணீரையும் துடைத்துவிட்டு, கரு உருவாவதற்கு கருவாக இருக்கிறாள் அம்பிகை! அவளின் திருநாமம்- ஸ்ரீகருவளர்த்த நாயகி.

கும்பகோணம் - வலங்கைமான் சாலையில் அமைந்துள்ளது மருதாநல்லூர். இங்கிருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கருவளர்சேரி. மருதாநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

திருமணமாகி பல வருடங்களாகியும் பிள்ளை பாக்கியம் ஈடேறவில்லையே என கலங்குவோரும் புதுமணத் தம்பதியானாலும் இங்கு வந்து இவளின் சந்நிதிக்கு முன்னே நின்று, மனதாரப் பிரார்த்தித்தால் போதும்... கரு வளர்வதற்கு அருள் புரிந்து, குழந்தை பிறக்கும் வரை பக்கத்துணையாக இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள்! இங்கே... இந்தத் தலத்து நாயகியின் திருநாமம் - கருவளர்த்த நாயகி.

பிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்!

அகத்தியர் தன் மனைவி லோபாமுத்திரையுடன் இங்கு வந்து, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலம் இது! எனவே இந்தத் தலத்து இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர் என்றே அழைக்கப் படுகிறார். இங்கு அகத்தியருக்கு சந்நிதியும் உண்டு. தலத்தின் இன்னொரு விசேஷம்... இங்கு அம்பிகை புற்று மண்ணாக உருவெடுத்தவள் என்கிறது ஸ்தல வரலாறு. சுயம்புவாகத் தோன்றியவள். ஆகவே, அம்பிகைக்கு இங்கு அபிஷேகங்கள் இல்லை. விசேஷ நாட்களில், கருவளர்த்த நாயகிக்கு தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது. சக்தியும் கருணையும் கொண்ட அம்பிகையை, தினமும் பச்சை வஸ்திரத்தில் திரையிட்டு வைத்திருப்பதையே தரிசிக்க முடியும். மகா சிவராத்திரி மற்றும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் மட்டுமே அம்பாளைத் திரையின்றித் தரிசிக்கலாம்!

குழந்தை பாக்கியம் இல்லையே என வருந்துவோர், கருவளர்சேரி ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தின் ஸ்ரீகருவளர்த்த நாயகியின் சந்நிதிக்கு வந்து, சந்நிதியின் படிகளை மெழுகி பூஜை செய்தால் போதும். அதாவது, பசு நெய் கொண்டு படியை மெழுக வேண்டும்.

பிரசாத மஞ்சள் தேய்த்துக் குளித்தால்... பிள்ளைப் பேறு நிச்சயம்!

பிறகு படிகளுக்கு மஞ்சள் பூசி, கோலமிட்டு, குங்குமம் இட்டு, படியையும் அம்பாளையும் மனதார வேண்டிக்கொண்டால் போதும். இதையடுத்து, அம்பாளின் திருப்பாதத்தில் வைத்த ஏழு மஞ்சளைப் பிரசாதமாகத் தருவார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் மட்டும், இந்த மஞ்சளை முகத்தில் பூசி, குளிக்க வேண்டும். இந்த மஞ்சள் பிரசாதம் முடிவதற்குள், பெண்ணானவள் கருத்தரித்து விடுவாள் என்பது ஐதீகம்! அப்படியே கருவுற்றாலும் கூட, ஏழு மஞ்சளும் தீரும் வரை, மஞ்சள் தேய்த்துக் குளிக்கவேண்டும்.

''அம்பாளின் திருப்பாதத்தில் எலுமிச்சை பழங்களைத் தந்து, பிறகு பிரசாதமாகப் பெற்றுக்கொண்டு, அதைக் கணவனும் மனைவியும் சாறாக்கிக் குடிக்கவேண்டும். இந்தப் பிரசாதத்தால், பிள்ளை வரம் பெற்ற பெண்கள் நிறையவே உண்டு'' என்கிறார் கோயிலின் வே.சுப்ரமணியன் குருக்கள்.

அம்பாளின் கருணையால் கருத்தரித்த பெண்கள் தங்கள் சீமந்தத்தின் (வளைகாப்பு) போது, அம்பாளுக்கு என ஏழு வளையல்களை எடுத்து தனியே வைத்து விடுகின்றனர். பிறகு குழந்தை பிறந்ததும் குழந்தையுடன் வந்து, அம்பாளுக்குச் செலுத்திவிடுகின்றனர். தவிர, குழந்தையை இங்கேயுள்ள தொட்டிலில் இட்டு ஆட்டுகிற நேர்த்திக்கடனையும் செலுத்துகின்றனர் பக்தர்கள்!  

      - து.யோகேஷ்வரி
படங்கள்: ஜெ.ராம்குமார்