நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சக்தியை சரணடைவோம்!

நலம் தரும் நவராத்திரி வழிபாடுகள்!

சக்தியை சரணடைவோம்!

நவராத்திரி மஹிமை

##~##
சி
றுவயதில் எனது சகோதரிகளுடனும் நண்பர்களுடனும் எங்கள் தெருவில் உள்ள என் உறவினர்களது வீட்டுக்கும், நண்பர்களது வீட்டுக்கும் சென்று பாட்டு பாடி, ஆட்டம் ஆடி எங்களையே நாங்கள் மறந்து நின்றதும், அடுத்த நாளும் அந்த வீடுகளுக்குச் சென்று எங்கள் ஆட்டபாட்டங்களைத் தொடர்ந்த நிகழ்வுகளும் பளிச்சென ஓடுகின்றன மனதில். இப்போது வாழ்வின் ஒருபாதிக்கு மேல் கடந்திருந்தாலும் இன்னும் அதே உற்சாகம்  நவராத்திரி என்றதும் எனக்குள் எழுகிறது!

ஆமாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கக்கூடிய விழா எதுவெனில் அது நவராத்திரியாகவே அமையும். ஒருபுறம் கொலு பொம்மைகளை வைத்து, விருந்தினரை அழைத்து, அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு மஞ்சள், குங்குமம், வளையல்கள், ரவிக்கைத்துணி, புடவை முதலான மங்கல திரவியங்களை அளித்து மகிழ்தலும்... மறுபுறம் விரதங்கள், பூஜைகள் போன்றவற்றை அனுசரித்து, நம்முடைய தெய்வ பலத்தை அதிகரிக்க வாய்ப்பு தரும் மிகச் சிறந்த காலமாக விளங்குகிறது இந்த நவராத்திரி உத்ஸவம்.

சக்தியை சரணடைவோம்!

ஸ்ரீமத் தேவிபாகவத புராணத்தில், ஸ்ரீவியாச முனிவரிடம்  நவராத்திரி காலத்தின் மகத்துவத்தையும், அந்த விரதத்தை அனுஷ்டிக்கும் விபரங்களையும் கேட்கிறான் ஜனமஜேயன் (''நவராத்ரே து ஸம்ப்ராப்தே கிம் கர்தவ்யம் த்விஜோத்தம...). அதற்கு வியாச மகரிஷி, 'நவராத்திரி இரண்டு வகை. ஒன்று வஸந்த ருதுக் காலத்தில் (சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் வஸந்த நவராத்திரி. மற்றொன்று சரத் காலத்தில் (புரட்டாசி அமாவாசைக்குப் பிறகு 9 நாட்கள்) கொண்டாடப்படும் சரத் நவராத்திரி’ என்று விளக்குகிறார் (சரத்காலே விசேணே... வஸந்தே ச ப்ரகர்தவ்யம்..).

சக்தியை சரணடைவோம்!

இவை இரண்டும் எமதருமனின் இரண்டு கோரைப் பற்கள் போன்றவை என்பதால், இந்தக் காலங்களில் அனைத்து பிராணிகளுக்கும் தீயவை ஏற்பட வாய்ப்பு உண்டு (துர்கமௌ ப்ராணிநாம் இவர) நோய்கள், இயற்கை சீற்றங்கள், மனக்குழப்பங்கள் போன்றவையும் ஏற்படலாம் (ரோககரௌ... வஸந்த சரதாதேவ ஸர்வநாச கராவுபௌ). ஆகவே இந்த காலங்களில் புத்திமான்களும், நல்லதையே விரும்புபவர்களும் சண்டிதேவியை ஆராதனம் செய்ய வேண்டும் என்று வேதங்களை வகுத்து அளித்து, அதன் ஸாரமான புராணங்களையும் அளித்த வியாச பகவான் கூறுகிறார்.

'கலௌ சண்டி விநாயகௌ’ என்ற வாக்கின்படி இந்தக் கலி காலத்தில், நமது இன்னல்கள் யாவற்றையும் விலக்கி நன்மை களைப் பெற்றிட விநாயகர் வழிபாடும், சண்டிகையின் வழிபாடும் உடனடியாக உதவி செய்யும் என்பது முன்னோர் வாக்கு.

அதுமட்டுமல்லாமல், ராவணனை வதம் செய்யும் முன் ஸ்ரீராமன் நவராத்திரி விரதம் அனுஷ்டித்தார் என்றும், அவருக்கு இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை நாரதர் விளக்கினார் என்றும் (நவராத்ரோவாஸஞ்ச பகவத்யா ப்ரபூஜனம் ஸர்வசித்திகரம் ராம ஜபஹோமவிதானத:) வியாச மஹரிஷி தேவிபாகவத புராணத்தில் பதிவு செய்துள்ளார்.

ஸ்ரீகிருஷ்ண பகவான் துர்கையின் ஓர் அம்சமான ஸ்ரீகாத்யாயனி தேவியை குறித்து விரதம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்ற வாக்கின்படி, ஒரு மனிதனுக்கு நல்ல வாழ்க்கை அமைந்தால்தான் அது அர்த்தமுள்ளதாகிறது. அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர்களே மோட்சம் எனும் வீடுபேறு பெறுவார்கள். அப்படியானால், இந்த வாழ்க்கைக்குத்  தேவையான பொருள் என்பது யாது?!

சக்தியை சரணடைவோம்!

எப்படி ஒரு மருந்தில் பலவித ரசாயனங்களின் கலவை உள்ளதோ அதுபோன்று கல்வி, செல்வம், வீரம் ஆகிய முப்பொருட்களும் சரியான கலவையில் அமைந்தால்தான் ஒரு மனிதனின் வாழ்க்கை இன்பமயமாக அமையும். எப்படி மின்சாரம் ஒன்றாக இருந்தாலும் அது செயல்படும் கருவிகள் மின்விசிறி, மின்விளக்கு என்றெல்லாம் வெவ்வேறு பெயர்களுடன் திகழ்கின்றனவோ, அப்படியே எல்லாம் வல்ல பரமசிவனின் பிரிக்கமுடியாத சக்தியாக விளங்கி வரும் ஆதிசக்தியின் வெவ்வேறு வடிவங்களே ஸ்ரீதுர்கா, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி ஆகிய தேவியர். இந்த சக்திகளிடம் இருந்தும் பல சக்திகள் தோன்றி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியிருக்கிறது.

ஆக, நவராத்திரி போன்ற வழிபாடுகள், ஏதோ மனிதர்களால் சுயநல நோக்குடன் கொடுக்கப்பட்டவை அல்ல. ஒரு தாயானவள், தன் குழந்தைகள் நலமாக இருக்கவேண்டும் என்பதற்காக பல காரியங்களைச் செய்வதுபோன்று, உலகின் அனைத்து சாஸ்திரங்களும் (சப்தாத்மிகா) நமது நன்மைக்காகவே பகவதியால் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் உணர்ந்து, இயன்ற வரையிலும் அவற்றின் நெறிமுறைகளை, அறிவுரைகளை ஏற்றுக் கடைப்பிடித்து பயன்பெற வேண்டும்.

மனிதப்பிறவி என்பது மிகப்பெரிய வரம். கண்ணாடி முன் நின்று எதைப் பார்க்கிறோமோ அதுவே உலக அதிசயம். ஆம், நாம் எல்லோருமே அதிசயங்கள்தான். இறைவன் எவ்வளவு சக்தி உடையவர்களாக நம்மைப் படைத்திருக்கிறார். அவருக்கு நன்றி செலுத்துவது நம் கடமை அல்லவா? எப்படி தாயானவள்... அவளுக்கு குழந்தைகள் என்ன அளித்தாலும், அவற்றைப் பெற்றுக்கொண்டு குழந்தைகளிடமே திருப்பி அளித்துவிடுகிறாளோ, அப்படியே நமது பிரார்த்தனைகளை எல்லாம் ஏற்று, அவற்றை நிறைவேற்றும் ஆற்றலை நமக்கு அளிக்கிறாள் சக்திதேவி. அத்தகைய சக்திக்கு நன்றி செலுத்த வாய்ப்பு நல்கும் திருநாட்களே நவராத்திரி திருநாட்கள்.

'நவ’ எனில் ஒன்பது; 'ராத்ரீ’ எனில் இரவு. ஆக 'நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். 'நவ’ எனில் 'புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்கு புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமா? நவக்கிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும். அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு ('விச்வஸ்ய பீஜம்’).

அவளை வழிபடுவதால், நம் உலகம் என்றில்லை; இந்த பிரபஞ்சம் முழுக்க வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயக்கும் என்பது நிச்சயம்.

நவராத்திரி விரதம் துவங்குவது எப்போது?

சக்தியை சரணடைவோம்!

ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் துவக்க நாளாகக் கொள்ளவேண்டும் (ஆச்வினே மாஸி மேகான்தே மஹிஷாசுரமர்தினீம்) என்கிறது ஸ்கந்த புராணம். எவரொருவர் இந்த விரதத்தை தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்குக் கிட்டாத இன்பமும், பிணியின்மை யும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் எனவும் விவரிக்கிறது அந்த புராணம்.

ஒன்பது நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி மூன்று நாட்களிலோ அல்லது அஷ்டமி, நவமி ஆகிய தினங்களிலோ அம்பிகையை ஆராதித்தால்... துக்கம் என்பதே இல்லாதவர்களாக (எப்போதும் ஆனந்தம் கொண்டவர்களாக) இருப்பார்கள் என்று  நவராத்திரியின் மகிமையை விவரிக்கிறது பவிஷ்ய புராணம்.

சரி... இந்த விரதத்தை சந்தனம், புஷ்பம், தூப-தீபம், நைவேத்தியம் கூடிய உபசாரங்களுடன்தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ளும்படி ஏதேனும் வழி உண்டா?

இதற்கு  மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம். 'இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், 'அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமின்றி, நமக்கு நன்மையானவை அனைத்தையும் அளிக்க எல்லாம் வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்த புராணம். உலகில் உயர்ந்த தெய்வம் தாய்தானே! அந்த தாய் என்ற தெய்வத்துக்கு எல்லாம் மூலமான தாயை (''யா தேவீ ஸர்வ பூதேஷ§ மாத்ரூ ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:'') வணங்கித் தொழுதல் நமது கடமை அல்லவா!

சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!

எப்படி வழிபடுவது?

புரட்டாசி மாத அமாவாசையன்று கலசம் வைத்துவிட வேண்டும். கலசத்தின் உள்ளே புனித நீரை ஊற்றி வைத்து அதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகளின் ஓருருவான சண்டிகையைத் தியானித்து நிலைநிறுத்தல் வேண்டும்.எப்படி, ஒரு தொலைபேசியில் ஒருவரின் எண்ணை அழுத்தினால் அவருடன் நம்மால் கலந்துரையாட முடிகிறதோ, அதுபோன்று தேவியை நாம் எந்த ரூபத்தில் மனத்தில் வரிக்கிறோமோ, அதே உருவில் வருவாள் என்பதே நமது சநாதன தர்மத்தின் சிறப்பு. கலசத்தில் சிலர் அரிசி போன்றவை நிரப்பி வைப்பது பழக்கம்.

இவற்றை அவரவர் வீட்டு பெரியோர்களிடம் கேட்டு செய்யவும்.

மறுநாள் பிரதமையன்று மங்கல ஸ்நானம் செய்து, பிறகு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து, கீழ்க்காணும் மந்திரத்தை உச்சரித்து, பச்சை, சிவப்பு, வெள்ளை மலர்களை புனித கலசத்தின் மீது சமர்ப்பித்து தேவியை ஆவாஹனம் செய்தல் வேண்டும் (ஸ்நானம் மாங்களிகம் க்ருத்வா ததோ தேவீம் ப்ரபூஜயேத்).

மந்திரம்:

ஜயந்தீ மங்களா காளீ பத்ரகாளீ கபாலிநீ!
துர்கா க்ஷமா சிவா தாத்ரீ ஸ்வாஹா
ஸ்வதா நமோ (அ)ஸ்து தே
ஓம் துர்கா லக்ஷ்மீ ஸரஸ்வதீ ஸ்வரூபாயை
சண்டிகாயை நம:

இந்த மந்திரத்தால் அம்பிகையின் சாந்நித்யமானது அந்த கலசத்தில் நிரம்பும். இந்த 9 நாட்களுமே இந்த மந்திரத்தை பக்தியுடன் உச்சரிப்பதால், இன்னல்கள் நீங்கி சுகமான வாழ்வும், இறுதியில் மோட்சமும் கிடைக்க அம்பாள் அருள்புரிவாள்.

அதேபோன்று வீட்டு பூஜையறையில் 9 நாட்களும் தொடர்ந்து சுடர்விடுவதற்கு ஏற்றாற்போன்று தீபம் ஒன்றும் ஏற்றி வைக்க வேண்டும். முதல் நாளன்று அன்னையிடம் ''ஹே தேவியே, உன்னைக் குறித்து இந்த விரதத்தை மேற்கொள்ள இருக்கிறேன். அதற்கு உன் அருளை தா'' என்று வேண்டி விரதபூஜையை ஆரம்பிக்க வேண்டும் (ஸாஹாய்யம் குரு மே தேவி ஜகதம்ப மமாகிலம்).

சக்தியை சரணடைவோம்!

முக்கியமாக, இந்த விரதத்தில் நம் நிலைமைக்குத் தகுந்தாற்போன்று பூஜித்தாலும் போதும்; கண்டிப்பாக கடன் வாங்கி செய்யக் கூடாது. ஒன்பது தினங்கள் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும்கூட, அஷ்டமி மற்றும் நவமி தினங்களில் பூஜை செய்தால் போதும். முக்கியமாக அன்னதானம், ஏழை - எளியவர்களின் படிப்புக்கு உதவி, மருத்துவ உதவி (அன்னதானம் ப்ரகர்த்தவ்யம்..) என அவரவர் சக்திக்குத் தகுந்தபடி செயல்படுத்தலாம்.

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள் (நவராத்ர வ்ரதஸ் அஸ்ய நைவ துல்யானி பூதலே). தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக் கூடிய விரதம் நவராத்திரி விரதம். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

சக்தியை சரணடைவோம்!

இந்த ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவி; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியைக் குறித்து வழிபடுவது வழக்கம்.

ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.

அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல் அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.

சக்தியை சரணடைவோம்!

ஆதிசங்கரரின் வழிகாட்டல்...

ஆதி சங்கர பகவத் பாதர் 'ஆப்தி கிம் கரணீயம்’ எனும் கேள்வியைக் (ஆபத்து காலத்தில் என்ன செய்ய வேண்டும்) கேட்டு, அதற்குரிய பதிலையும் தருகிறார்.

'ஸ்மரணீயம் சரணயுகளம் அம்பாயா:’ அதாவது, அம்பாளின் பாத கமலங்களை நினை என்று விடையளிக்கிறார்.

ஆம், நாம் அனைவரும் அம்பாளின் பாத கமலங்களை நினைத்து வழிபட்டு, அவளுக்கு மட்டுமல்லாமல், அவளின் குழந்தைகளான அனைத்து ஜீவராசிகளுக்கும் நம்மால் இயன்ற அறங்களைச் செய்து வருவோமாக. அனைவருக்கும் அனைத்து நலன்களும் கிடைக்க அன்னை ஸ்ரீகாளிகாம்பாள் அருள் புரிய பிரார்த்திக்கிறேன்.

நவராத்திரியின் 9 நாட்களும்... நல்லவரைக் காப்பாற்ற தீயவர்களான ரக்த பீஜன், தூம்ரலோசனன், சும்பன், நிசும்பன் போன்றோரை அழித்த எல்லாம் வல்ல மகிஷாசுர மர்த்தனியின் பாதம் பணிந்து, அவளின் அம்சங்களான தேவிகளை வழிபடுவது விசேஷம்.

அதுகுறித்த விவரங்களை இனி அறிவோம்...

சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!
சக்தியை சரணடைவோம்!