நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

ஞானம் தருவாள்! - பி.என்.பரசுராமன்

ஞானம் தருவாள்! - பி.என்.பரசுராமன்

ஞானம் தருவாள்! - பி.என்.பரசுராமன்
##~##
ஸ்ரீ
மகா ஸ்வாமிகள் தன்னை நமஸ்கரிக்கும் பக்தர்களுக்கெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை: ''என்னை நமஸ்காரம் பண்றதைவிட, அம்பாள் அங்கே இருக்கா! அங்கே போய் காமாக்ஷியை நமஸ்காரம் பண்ணிக்கோ. க்ஷேமமா இருப்பே. எனக்கு முக்கியம் அம்பாள்'' என்பார்.

அந்த அம்பாளுக்கு உகந்த நவராத்திரி திருநாள் நெருங்குகிறது. இந்தத் தருணத்தில் ஸ்ரீமகா ஸ்வாமிகள் நமக்குச் சொல்லிச் சென்ற அறிவுரைகளை, அம்பாள் தத்துவங்களை, நவராத்திரியின் சிறப்புகளை அறிவது விசேஷம் இல்லையா? நல்லன யாவும் தரும் நவராத்திரி புண்ணிய தினங்களில் அம்பாளின் அருட்கடாட்சத்தைக் குறையின்றிப் பெற, ஸ்ரீமகாஸ்வாமிகளின் அருள்வாக்கும் ஆசியும் துணை செய்யும்.

''நவராத்திரியில் பராசக்தியான துர்காபரமேஸ்வரியையும், மகாலட்சுமியையும், சரஸ்வதிதேவியையும் பூஜிக்கிறோம். மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும் முப்பது முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும் அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான். இந்த உண்மையையே... பரதேவதையை வர்ணிக்கும் லலிதா சகஸ்ரநாமம், 'அவளே ஸ்ருஷ்டிகர்த்ரீ, அவளே கோப்த்ரீ, அவளே ஸம்ஹாரிணீ’ என்கிறது. அதாவது... சிருஷ்டி செய்பவளும் அவளே, பரிபாலனம் செய்வதும் அவளே, சம்ஹாரம் செய்பவளும் அவளே என்று விளக்குகிறது. ஒரே பராசக்தியே வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு வெவ்வேறு காரியங்களைச் செய்கிறது. துர்கையாக இருக்கும்போது வீரம், சக்தி எல்லாம் தருகிறது; மகாலட்சுமியாகி சம்பத்துக்களையும், சரஸ்வதியாகி ஞானச் செல்வத்தையும் அளிக்கிறது.

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவைப் பிராட்டி சொல்லியிருக்கிறாள். தைத்திரீயோபநிஷதமும் 'மாதாவை தெய்வமாகக் கொள்வாயாக; பிதாவை தெய்வமாகக் கொள்வாயாக’ என்றே அறிவுறுத்தும். இங்கேயும் முதலில் அம்மாதான். இப்படி தாயாரை தெய்வமாக நினைக்க முடியுமானால் தெய்வத்தைத் தாயாராக நினைக்கமுடியும். ஆக, சர்வ லோகங்களையும் படைத்துக் காத்துக் கொண்டிருக்கிற மகா சக்தியை தாயாராக நினைக்கும்போது அம்பாள் என்கிறோம்.எல்லாமும் ஆகியிருக்கிற பரமாத்மா, நாம் எப்படி நினைத்தாலும் அப்படி வந்து அருள் செய்கிறது. அப்படி சாட்சாத் பரப்பிரம்மமே தாயாகி, அம்பிகையாய் இருந்துகொண்டு, நமக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் என்று நாம் பிரார்த்தித்தால் அவ்விதமே வருகிறது.

ஞானம் தருவாள்! - பி.என்.பரசுராமன்

பரமாத்மாவை அன்னைத் தெய்வமாக பாவிப்பதில் தனியான விசேஷம் உண்டு. அம்மாவிடம் நமக்குள்ள அன்பும், அம்மாவுக்கு நம்மிடம் உள்ள அன்பும் அலாதியானவை அல்லவா? எனவே, அம்மா என்று நினைத்து பக்தி செய்தால் ஒரே அன்பு மயமாக இருக்கிறது; ஆனந்தமயமாக இருக்கிறது.''

- மகா பெரியவா எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா? அம்பாளை அம்மாவாக பாவிக்கும்போது எல்லாமே அன்புமயம் அருள்மயம்தான். அதுமட்டுமா? அம்மாவாக பாவித்து ஆதிசக்தியை வழிபடும்போடு நாம் குழந்தையாகி விடுகிறோம். அதனால், தானாகவே காமக் குரோதாதிகள் நம்மைவிட்டு விலகிவிடும் என்பது மகாபெரியவாவின் கருத்து.

தெய்வங்களும், அவதாரப் புருஷர்களும், மகான்களும்கூட அம்பாளை உபாசித்து அவளது அருளைப் பெற்றிருக்கிறார்கள். ஆதிசங்கரரும், காளிதாஸனும் அதற்கு சிறந்த உதாரணம். அவர்களைப் போன்று நாமும் அனுதினமும் அம்பாளை வழிபடுவோம். அப்போது அவள் என்னென்ன கடாக்ஷிப்பாள் தெரியுமா?

ஞானம் தருவாள்! - பி.என்.பரசுராமன்

மகா பெரியவா சொல்கிறார்... ''எல்லாவிதமான இகபர நலன்களும் வழங்கும் அம்பிகை விசேஷமாக வாக்குவன்மையும் அருள்கிறாள். ஏனெனில் அவளே அக்ஷர ரூபமானவள். நம் உடலின் மேல் சதையைக் கீறிவிட்டால்... வெளியே எத்தனை அழகாக இருந்தாலும் உள்ளே அருவருப்புத் தருகிற வஸ்துக்களையே பார்க்கிறோம். பரமாத்மா அம்பாளாக வரும்போது தரித்த சரீரமோ கருணாமயமானது. அம்பிகையாக வரும்போது பரமாத்மா ஐம்பத்தொரு அக்ஷரங்களையே தரித்துக்கொண்டு வருகிறது. அதனால்தான் தேவி உபாசகர்கள் விசேஷ வாக்குவன்மை பெறுகிறார்கள்.

லோகம் முழுமைக்கும் காலம் முழுவதற்கும் தாயாக இருந்து அனுக்கிரகம் செய்கிற பராசக்தியின் கடாக்ஷம் எப்படிப்பட்டவனையும் கைதூக்கி ரட்சிக்கும். அந்த அம்பிகையை அன்போடு நாம் தியானம் செய்யவேண்டும். அக்ஷரமயமானவளை வாக்கால் துதிக்க வேண்டும். அம்மாவின் சரீரவாகு, மனப்பான்மை எல்லாம் குழந்தைக்கும் வருவதைப்போன்று, அம்பாளே நம் சரீரம், மனஸ் எல்லாமுமாய் இருக்கிறாள் என்ற உணர்வோடு அம்பாளை உபாசித்துக் கொண்டே இருந்தால், நாமும் அன்பே உருவாகி லோகம் முழுமைக்கும் ஆனந்தத்தைக் கொடுக்கலாம்.''

ஆமாம்... அம்பாளை வழிபட நம் அகமும் புறமும் அவளின் திருவருளால் நிறையும். உலகமும் அன்பால் நிரம்பும். வேறென்ன வேண்டும்? இப்படியரு கொடுப்பினையைப் பெற உலகுக்கு கிடைத்த வாய்ப்புதான் நவராத்திரி திருநாட்கள். அம்பாளை நம் அம்மாவாக பாவித்து உபசரிக்க உகந்த உன்னத நாட்கள்!

அல்லவை நீங்கினால் நல்லவை கிடைக்கும் அல்லவா? அப்படி நம்மிடம் உள்ள தீய குணங்கள் நீங்க, நம்மை நெருக்கும் தீய சக்திகளும் விலகியோட, நன்மையெல்லாம் பெருகிட அன்னை பராசக்தி பரிபூரணமாக அருள்பாலிக்கும் திருநாட்கள் இந்த நவராத்திரி நாட்கள். ஒன்பது நாட்களும் விரதமிருந்து ஆதிசக்தியை வழிபட அஞ்ஞானம் விலகும்; ஞானம் பெருகும். அப்போது மட்டில்லா ஆனந்தம் நம்மிடம் நிலைத்துவிடும்.

மகா பெரியவா என்ன சொல்கிறார் தெரியுமா?

''ஞானம் பெறுவதற்கு சாட்சாத் அம்பாளைத் தவிர வேறு கதியில்லை. அவள்தான் மாயையால் ஒரே பிரம்மத்தை மறைத்துப் பலவேறான பிரபஞ்சமாகக் காட்டுகிறாள். இந்த பிரபஞ்ச ஆட்டத்திலிருந்து விடுதலை பெற்று ஸம்ஸாரத்தில் இருந்து, ஜனன-மரணச் சூழலிலிருந்து விமோசனம் அடைந்து பிரம்மமாகவே நாம் ஆகவேண்டும் என்றால் எவள் இந்த மாயைச் செய்தாளோ, அவளின் அனுக்கிரகம் ஒன்றினால்தான் முடியும். மாயா சக்தியாக இருக்கிற அம்பாள்தான் ஞானாம்பிகையாக வந்து நமக்கு மோட்சத்தை அனுக்கிரஹம் செய்பவளும் ஆவாள்'' என்கிறார்.

எப்போது ஞானம் கைகூடும்? அம்பாளை வழிபட்டால் கைகூடும் என்பது மகா பெரியவா வாக்கு. நமது எல்லா துக்கங்களுக்கும் காரணம் நமது இந்திரியங்களும் மனசும்தான். அவற்றை சுத்தப்படுத்தி புலன்களால் ஏற்படும் துன்பங்களில் இருந்தும் மனச் சஞ்சலங்களில் இருந்தும்ஜீவனை விடுவிக்க சாட்சாத் காமாக்ஷியாக வருகிறாளாம் அம்பிகை.

''காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் வில்லும் இன்னொன்றில் ஐந்து அம்புகளும் இருக்கும். அந்த வில்லானது கரும்பால் ஆனது. அம்புகள் புஷ்பங்களால் ஆனவை. மதுரமான கரும்பு அம்பாளுக்கு வில்லாகிவிட்டது. கூரான அம்புகளுக்கு பதில் மிருதுவான மலர்க்கணைகள்! கரும்பு வில்லானது மனஸ் என்ற தத்துவத்தைக் குறிக்கும். மதுரமான மனம் படைத்த அம்பாள் இந்த வில்லைக் காட்டி வசப்படுத்திக்கொண்டு விடுகிறாள். ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஆகர்ஷித்துச் செயலற்றுப் போகும்படி செய்வதற்காக ஏற்பட்டவை. மீதி இரண்டு கைகளிலும் பாசம்-அங்குசம். அவை இரண்டும் நம் பாசங்களை, ஆசையை நீக்கி அவளோடு நம்மைக் கட்டிப்போடுகிற கயிறு. ஆக, நம்முடைய மனோவிருத்தியும் இந்திரிய விகாரங்களும் அடங்குவதற்கே பராசக்தியானவள் காமாக்ஷியாகி வில்லும் மலர்ப்பாணமும் தாங்கி வந்திருக்கிறாள்'' என்று ஸ்ரீகாமாக்ஷியின் திருவுருவைப் போற்றுகிறார் மகா பெரியவா.

நாமும் இந்த நவராத்திரி தினங்களில் மகிமைகள் நிறைந்த அவளது துதிப்பாடல்களையும், புராணக் கதைகளையும், அவள் குறித்த தத்துவ விளக்கங்களையும் அறிந்துணர்ந்து, மெய்யுருகி அவளை பூஜித்துப் பலன் பெறுவோம்.