நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

அருளும் பொருளும் தருவாள் அலங்கார நாயகி!

நலம் தரும் நவராத்திரி தரிசனம்!

அருளும் பொருளும் தருவாள் அலங்கார நாயகி!
அருளும் பொருளும் தருவாள் அலங்கார நாயகி!
##~##
தூ
த்துக்குடியில் இருந்து இலங்கைக்கு, பொருள் ஈட்டுவதற்காகச் சென்றார் அன்பர் ஒருவர். சக்தி வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட அவர், இலங்கை தேசத்தில், வடக்குப் பார்த்தபடி அருளும் ஸ்ரீமாரியம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தினமும் வேலைக்குச் செல்லும்போது, நாள் தவறாமல், அம்மனைத் தரிசித்துச் சென்றவரின் பக்தியை உணர்ந்தாள் அம்மன். அன்றிரவு, அவரின் கனவில் தோன்றினாள் தேவி. 'இருக்கன்குடி எனும் ஊரில் பிடிமண் எடுத்து, இங்கே (இலங்கை) இருப்பது போன்று சிலை வடித்து, உன் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு’ என்று அருளினாள். இதைக் கேட்டு, சிலிர்த்துப் போன அன்பர், மறுநாளே தூத்துக்குடிக்குப் புறப்பட்டுவிட்டார். சொந்த ஊரில் அம்மன் கோயில் கொள்ளத் தகுதியான இடத்தை தேர்வு செய்தார். அவளின் ஆணைப்படி இருக்கன்குடியில் பிடிமண் எடுத்தார். இலங்கையில் இருந்து அழகான அம்மன் விக்கிரகத்தைச் செய்து வந்து கோயில் அமைத்தார்.

அருளும் பொருளும் தருவாள் அலங்கார நாயகி!

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். ஓர் நவராத்திரியின் போது இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாலும், தூத்துக்குடி நகரில் முதன்முதலில் எழுந்த மாரியம்மன் ஆலயம் என்பதாலும் இங்கே நவராத்திரி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோயிலுக்கு எதிரிலேயே தெப்பக்குளம் உள்ளது. அதனால் இந்த அம்மனை 'தெப்பக்குளத்து மாரியம்மன்’ என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள். ஸ்ரீமாணிக்க விநாயகர், ஸ்ரீசுடலைமாட ஸ்வாமி, ஸ்ரீபைரவர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக தரிசனம் தருகின்றனர்.

அருளும் பொருளும் தருவாள் அலங்கார நாயகி!

நவராத்திரி நாட்களில் இங்கே அமைக்கப்படும் கொலுவைத் தரிசிக்க இரண்டு கண்கள் போதாது. அவ்வளவு பிரமாண்டமாக இருக்குமாம்! முதல் 3 நாட்கள் ஸ்ரீதுர்கை, ஸ்ரீகருமாரி, ஸ்ரீபார்வதி திருக்கோலங்களிலும் அடுத்த 3 நாட்கள் ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீமாரியம்மன் திருக்கோலங்களிலும், கடைசி 3 நாட்கள் ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்திலும், 10-ஆம் நாளான விஜய தசமி அன்று ஸ்ரீமகிஷாசுரமர்த்தனி கோலத்திலும் காட்சி தரும் மாரியம்மனை கண்ணாரத் தரிசிப்பது பெரும் புண்ணியம் தரும் என்கிறார்கள் பக்தர்கள். தசரா அன்று கோயில் முன்பு சூரசம்ஹாரம் நடைபெறும். விழாவின் 9 நாட்களும் ஸ்ரீதேவி மகாத்மிய பாராயணம், சிறப்பு அர்ச்சனைகள் என அமர்க்களப்படும்.  இந்த துதி அர்ச்சனையில் கலந்துகொண்டால், நினைத்ததெல்லாம் நிறைவேறும் எனப் பூரிக்கின்றனர் பக்தர்கள். நவதானியங்களைக் கொண்டு  அம்மனுக்கு நைவேத்தியம் செய்து  வேண்டினால் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை!

கோயிலில் நாகப் புற்று உள்ளது. இந்தப் புற்றுக்கு 'சூலினிதுர்கா ஹோமம்’ செய்து மஞ்சள்பொடி தூவி வழிபட்டால் ராகு தோஷம் நீங்கும் என்கிறார்கள்.

  - ச.காளிராஜ்
படங்கள்: ஏ.சிதம்பரம்.