நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

சகலமும் தரும் ஆறு வார வழிபாடு!

நலம் தரும் நவராத்திரி தரிசனம்!

சகலமும் தரும் ஆறு வார வழிபாடு!
##~##
கா
மாட்சி என்றாலே காஞ்சிபுரமும், மதுரை என்றாலே ஸ்ரீமீனாட்சியம்மையும் நினைவுக்கு வருவார்கள். மதுரையிலும், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அருகில், தெற்கு மாசி வீதியில் அழகு ததும்பக் கோயில்கொண்டிருக்கிறாள் ஸ்ரீகாமாட்சி அம்பாள்.

காஞ்சியம்பதியில் உள்ளது போலவே இந்தத் தலத்தின் நாயகனின் திருநாமம் ஸ்ரீஏகாம்ரேஸ்வரர். ஸ்ரீமீனாட்சிக்கும் ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் மகாவிஷ்ணு தலைமையில், ஸ்ரீபிரம்மாவின் முன்னிலை யில் திருமணம் இனிதே நடந்தேறியது. அப்போது 'தட்சணை  என்ன வேண்டும்?’ என்று சிவனார் பிரம்மாவிடம் கேட்க, 'என் சிருஷ்டிக்குக் கட்டுப்படாத ஒன்றை தட்சணையாகத் தாருங்கள்’ என்று கர்வத்துடன் கேட்டார் பிரம்மா. உடனே, 'அப்படியெனில், உன் சிருஷ்டிக்குக் கட்டுப்படாத தரித்திரத்தையே தட்சணையாகத் தருகிறேன்’ என அருளினார் சிவபெருமான். பிரம்மா தன் தவற்றை உணர்ந்து, ஸ்ரீமீனாட்சி அம்மனிடம் சரணடைந்து, 'என் தரித்திரத்தைப் போக்க வழிகாட்டுங்கள்’ என வேண்டினார். ஸ்ரீகாமாட்சி தேவி யாகத் தோன்றி, அவரின் தரித்திரத்தை நீக்கி அருளினாளாம் தேவி. அந்த இடமே தற்போது காமாட்சி அம்பாள் கோயிலாக அமைந்துள்ளது என்பது சிறப்பு.

சகலமும் தரும் ஆறு வார வழிபாடு!

இங்கே ஸ்ரீகணபதி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீபிரம்மா ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. வடக்கு நோக்கியபடி காட்சி தரும் ஸ்ரீகாமாட்சி தேவி, கொள்ளை அழகு! மதுரையில், நவராத்திரி விழா விமரிசையாக நடைபெறும் ஆலயங்களில், ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீஏகாம்ரேஸ்வரர் கோயில் முக்கியமானதாகப் போற்றப்படுகிறது.

மகிஷாசுரமர்த்தனி, ஸ்ரீமீனாட்சி திருக்கல்யாணம், கால் மாறி ஆடிய தாண்டவம், திரிபுராசுர சம்ஹாரம், ஊர்த்துவ தாண்டவம், ஸ்ரீதுர்கா அவதாரம், ஸ்ரீகணபதிக்கு கனி கொடுக்கும் படலம், ஸ்ரீசரஸ்வதிதேவி சிவனாரை பூஜித்தல், ஸ்ரீசண்முக அவதாரம் என ஒவ்வொரு அலங்காரத்திலும் அம்பிகையைத் தரிசித்தாலே, நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பர்.

சகலமும் தரும் ஆறு வார வழிபாடு!

ஆறு வார வழிபாடு என்பது இங்கே சிறப்பு. அதாவது, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள், செவ்வரளிப்பூ, தேங்காய், பழம், வெற்றிலை- பாக்கு வைத்து அர்ச்சித்து வழிபட்டால், திருமண தோஷம் விலகும்; சந்தான பாக்கியம் கிடைக்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்! எனவே, மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களைச் சேர்ந்தவர்கள் நவராத்திரி நாட்களில் செவ்வாய்க்கிழமையன்று இந்த வழிபாட்டைத் துவக்குகின்றனர்.  

அடுத்த முறை மதுரை ஸ்ரீமீனாட்சியைத் தரிசிக்கும்போது, அப்படியே ஸ்ரீகாமாட்சி யையும் கண்ணாரத் தரிசியுங்கள்; கவலைகள் அனைத்தையும் பறந்தோடச் செய்வாள், அந்தக் கருணை நாயகி!

    - ச.பா.முத்துகுமார்
படங்கள்: எஸ்.கேசவசுதன்