நவராத்திரி ஸ்பெஷல்!
சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

மணக்கால் அம்மனுக்கு தயிர் பாவாடை அலங்காரம்!

நலம் தரும் நவராத்திரி தரிசனம்!

மணக்கால் அம்மனுக்கு தயிர் பாவாடை அலங்காரம்!
மணக்கால் அம்மனுக்கு தயிர் பாவாடை அலங்காரம்!

பொதுவாக, சிவாலயங்களில் சப்தமாதர்களுக்குத் தனிச்சந்நிதி அமைந்திருக்கும். ஆனால், சப்தமாதர்களுக்கு என்றே தனிக்கோயில் அமைந்திருப்பது தெரியுமா உங்களுக்கு? திருச்சி- லால்குடியை அடுத்த மணக்கால் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீசப்த மாதா ஆலயம்.

ஸ்ரீபிராம்மி, ஸ்ரீமகேஸ்வரி, ஸ்ரீவைஷ்ணவி, ஸ்ரீவாராஹி, ஸ்ரீகௌமாரி, ஸ்ரீஇந்திராணி, ஸ்ரீசாமுண்டி என ஏழு தேவியரும் சப்தமாதர்களாக அமர்ந்து அருளாட்சி செய்கின்றனர். சப்தமாதரை 'மணக்காயி அம்மன்’ என்றும் அழைக்கின்றனர்.

முன்னொரு காலத்தில், வணிகர் ஒருவர் மஞ்சள் வியாபாரம் செய்வதற்கு ஊர் ஊராகச் சென்றார். அப்போது வழியில், சப்தமாதர்களும் ஏழு கன்னிப் பெண்களாக ஆற்றில் விளையாடிக்கொண்டே நீராடிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் அந்த வணிகர் மஞ்சளை விற்க முனைந்தபோது, ஏழு பெண்களும் அவருக்கு அருளினார்கள். எனவே, ஆற்றங்கரைப் பகுதியில் ஏழு பெண்களுக்கும் கோயில் அமைத்து வழிபட்டார் அந்த வணிகர் என்கிறது ஸ்தல வரலாறு.

இங்கே, மதுரைவீரன் சந்நிதி உள்ளது. வணிகருக்கும் சிலை அமைத்துள்ளனர். கருவறையில், மூலவர்களாக சப்தமாதர்களும் அழகுற அருள்பாலிக்கின்றனர்.  

மணக்கால் அம்மனுக்கு தயிர் பாவாடை அலங்காரம்!
##~##
சப்தமாதர்களுக்கு அபிஷேகம் செய்தால், மாங்கல்ய பலம் கிடைக்கும்; மஞ்சள் - குங்குமம் நிலைக்கும் என்கின்றனர், பெண்கள். கடன் கொடுத்து ஏமாந்தவர்கள், உறவினர் பகையால் அல்லாடுபவர்கள், வழக்கில் வெற்றி கிடைக்க வேண்டும் எனத் தவிப்பவர்கள், இங்கு வந்து ஸ்ரீகருப்பண்ணசாமிக்கும் அவரின் குதிரைக்கும் மாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், விரைவில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை!

சிவாலயங்களில் வடக்கு நோக்கி அருளும் சப்தமாதர்கள், இங்கே கிழக்கு நோக்கி அமைந்திருப்பது விசேஷம். மாசி மாத அமாவாசை நாளில் துவங்கும் திருவிழா, பிரசித்தம். அதேபோல், நவராத்திரி விழாவும் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி மற்றும் விஜயதசமி எனப் பத்து நாட்களும் தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மனைக் காணக் கண் கோடி வேண்டும். அப்போது சிறப்பு லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

மணக்கால் அம்மனுக்கு தயிர் பாவாடை அலங்காரம்!

ஊஞ்சல் உத்ஸவத்தையும், 10-ஆம் நாளன்று நடைபெறும் தயிர்ப்பாவாடை சார்த்துகிற வைபவத்தையும் தரிசிக்க, லால்குடி மற்றும் மணக்கால் போன்ற ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் வருகிறார்கள். 10-ஆம் நாளில், மூட்டை மூட்டையாக எடுத்து வந்த தயிர்சாதத்தை, அர்த்தமண்டபம் முழுவதும் தரையில் பரப்பி வைத்துப் பூஜைகள் நடைபெறும். பிறகு, தயிர்சாதத்தில் அம்மனை அலங்கரிப்பார்கள். இதனை தயிர்பாவாடை என்பார்கள். பிறகு, அதைப் பிரசாதமாக வழங்குகின்றனர்.

இதைச் சாப்பிட்டால் நல்ல உத்தியோகம், திருமண பாக்கியம், பிள்ளைச் செல்வம் கிடைக் கும்; கல்வி, வியாபாரம் சிறக்கும்; ஆரோக்கியம் பெருகும் என்கின்றனர் பக்தர்கள்.  

  - பு.விவேக் ஆனந்த்
படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்