கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அய்யா வைகுண்டரை வழிபடும் பதிகள் (வழிபாட்டுத் தலங்கள்) அமைந்துள்ளன. கன்னியாகுமரி அருகே உள்ள சாமித்தோப்பில் அய்யா வைகுண்டர் தலைமைப்பதி அமைந்துள்ளது. மார்ச் 4-ம் தேதியான இன்று அய்யா வைகுண்டர் அவதார தினமாகும்.
அய்யா வைகுண்டரைப் பின்பற்றும் அய்யா வழி மக்கள் தங்கள் கிராமங்களில் உள்ள பதிகளில் இருந்து கால்நடையாக அன்புக் கொடி ஏந்திச்சென்று சாமிதோப்பு தலைமைப்பதியில் சமர்ப்பித்து வழிபட்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அய்யாவழி பக்தர்கள் நேற்றே புறப்பட்டு நாகர்கோவில் நாகராஜா கோயிலை வந்தடைந்தனர். இரவு அங்கு தங்கியவர்கள் இன்று காலை நாகராஜா கோயிலிலிருந்து கால்நடையாக நடந்து சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியை அடைந்தனர்.

நாகராஜா கோயிலில் தொடங்கிய ஊர்வலத்தில் அய்யாவழி குரு பாலஜனாதிபதி, கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் உட்படப் பலர் கலந்துகொண்டனர். அய்யா வைகுண்டர் தலைமைப்பதியான சாமிதோப்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அய்யாவழி பதிகளில் அய்யா வைகுண்டர் அவதாரதினவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
சாமிதோப்பு கிராமத்தில் பொன்னுமாடன் மற்றும் வெயிலாள் தம்பதியினருக்கு 1809-ம் ஆண்டு பிறந்த குழந்தைக்கு `முடி சூடும் பெருமாள்' எனப் பெயரிட்டு வளர்த்தனர். சாதிப் பாகுபாடு மிகுந்திருந்த அந்தக் காலகட்டத்தில் முடிசூடும் பெருமாள் என்ற பெயர் வைத்ததற்கு ஒரு சாராரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து, முடிசூடும் பெருமாள் என்ற பெயரை முத்துக்குட்டி என மாற்றினர். முடிசூடும் பெருமாளுக்கு உரிய வயதில் திருமால் வடிவு என்பவரைத் திருமணம் செய்து வைத்தனர்.

முடிசூடும்பெருமாளுக்கு 22 வயது ஆனபோது உடல் நிலை சரியில்லாமல் போனதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. தாய் வெயிலாள், மனைவி திருமால்வடிவு ஆகியோர் ஒரு தொட்டில் கட்டி அதில் முடிசூடும் பெருமாளைப் படுக்கவைத்து திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்றனர். வழியில் உணவு அருந்துவதற்காகத் தொட்டிலை இறக்கி வைத்தபோது அதிலிருந்து எழுந்த முடிசூடும் பெருமாள் நடந்து கடலுக்குள் சென்றார்.
மூன்று நாள்கள் கடந்தபிறகு கடலிலிருந்து திரும்பி வந்தவர் கரையில் காத்திருந்த தாயிடம் 'நான் வைகுண்டராக வந்திருக்கிறேன்' என்றார். அதன்பிறகு அவர் 'அய்யா வைகுண்டர்' என அழைக்கப்பட்டார். திருச்செந்தூர் கடலிலிருந்து வைகுண்டராகத் திரும்பி வந்த கொல்லம் ஆண்டு 1008 மாசி மாதம் 20-ம் நாள் அய்யாவின் அவதாரப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் புரட்சி செய்து மன்னரின் மனதை மாற்றி அவரை நல்வழிப்படுத்தினார் அய்யா வைகுண்டர். 'தாழக்கிடப்பாரைத் தற்காப்பதுவே தர்மம்' என்று கூறிய அய்யா வைகுண்டர் சாதி பாகுபாடு இல்லாமல் அனைவரும் பயன்படுத்தும் வகையில் முத்திரிக் கிணற்றை ஏற்படுத்தினார்.
தொட்டு நாமம் சார்த்தும் வழிபாட்டு முறையையும் தோற்றுவித்தார். அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.