Published:Updated:

ஓவியம், முப்பரிமாணம், வாசகங்கள்... தினம் ஒரு கலைக்கோலம்... அசத்தும் கிருத்திகா!

கோலம்

க்ரியேட்டிவிட்டியுடன் கடவுளர்கள், மகான்கள், ஆளுமைகள் எனப் பலரையும் தத்ரூபமாக வரைந்து, குறைவான சொற்களுக்குள் அழகான விளக்கமும் எழுதுகிறார்.

Published:Updated:

ஓவியம், முப்பரிமாணம், வாசகங்கள்... தினம் ஒரு கலைக்கோலம்... அசத்தும் கிருத்திகா!

க்ரியேட்டிவிட்டியுடன் கடவுளர்கள், மகான்கள், ஆளுமைகள் எனப் பலரையும் தத்ரூபமாக வரைந்து, குறைவான சொற்களுக்குள் அழகான விளக்கமும் எழுதுகிறார்.

கோலம்

வாசல் கோலம், தமிழர் பண்பாடு. கோலம் போடுவதால் வீட்டிலுள்ள துர்சக்திகள் அகலும் என்பதும், வீட்டில் செல்வத்துக்கு அதிபதியான லக்ஷ்மி வாசம் செய்வாள் என்பதும் ஐதிகம். பச்சரிசி மாவுக் கோலம், எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கு உணவாகும் சிறப்பும் இதில் உண்டு.

கோலம்
கோலம்

தினமும் கோலமிட்டாலும், மார்கழி மாதக் கோலங்களுக்கு பெண்கள் கொடுக்கும் நேரமும் மெனக்கெடலும், ஆர்வமும் அபாரம். அதிகபட்சம் 24 மணி நேரமே ஆயுள் உள்ள கலை என்று தெரிந்தும், ஒவ்வொரு நாளும் அதற்காக அவர்கள் கொடுக்கும் உழைப்பு ஆச்சர்யம். அப்படி, சென்னையில் தன் வீட்டு வாசலை தினமும் வண்ணக் கலைக்கூடமாக மாற்றுகிறார், கிருத்திகா.

போரூரில் வசிக்கும் கிருத்திகா, எட்டுப் புள்ளி, பதினாறு புள்ளிக் கோலங்கள், ரங்கோலி எல்லாவற்றையும் தாண்டி, தன் க்ரியேட்டிவிட்டியுடன் கைகோத்து புதுவிதமான கோலங்களை வரைகிறார்.

கோலம்
கோலம்

ஆண்டாள், பெருமாள் எனக் கடவுளர்கள், சாய்பாபா உள்ளிட்ட மகான்கள், சார்லி சாப்ளின், ஸ்ரீதியாகராஜர் உள்ளிட்ட ஆளுமைகள் எனப் பலரையும் தத்ரூபமாக வரைந்து, குறைவான சொற்களுக்குள் அழகான விளக்கமும் எழுதுகிறார். மேலும், நாம் மறந்துபோன பழைய காலங்கள், உறவுமுறை எனப் பல்வேறு தீம்களிலும் ஓவியங்கள் வரைகிறார்.

தரையில் பிரமாண்டமாக இவர் வரைகிற இந்தக் கோல ஓவியம், முப்பரிமாணக் காட்சியைக் காணுகின்ற உணர்வைத் தருவது ஹைலைட்.

கிருத்திகாவிடம் பேசினோம். "எங்க பூர்விகம் கும்பகோணம். குடும்பத்துல அம்மா, அப்பா, நான், தம்பி. நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது சென்னைக்கு வந்துட்டோம். சின்ன வயசுலேருந்து அம்மாவுக்கு கோலம் போட உதவுவேன். அம்மா, புள்ளிவெச்ச கோலம் சூப்பரா போடுவாங்க. நான் கோலத்துக்கு கலர் போடுவேன்.

கிருத்திகா
கிருத்திகா

பிசிஏ படிச்சேன். பேச்சு, கட்டுரைன்னு நிறைய போட்டிகள்ல கலந்துக்கிட்டேனே தவிர, கோலம் போடுறதுல ஆர்வமெல்லாம் இருந்ததில்லை. கல்யாணத்துக்கு அப்புறம் தினம் கோலம் வரையுறேன்" என்கிறார்.

தீம் கோலம் யோசனை வந்ததைப் பற்றி கேட்டோம். "ஆறு வருஷம் முன்னாடி, என் உறவுக்கார பெண், ஃபேஸ்புக்ல கோலம் குரூப் ஒண்ணுல என்னைச் சேர்த்துவிட்டாங்க. அதுல இருக்கிறவங்க, தினமும் கோலம் போட்டு போட்டோ எடுத்து குரூப்ல அப்லோடு பண்ணுவாங்க. அதைப் பார்த்து எனக்கும் ஆசை வந்துச்சு. அப்புறம்தான், சாதாரணமா கோலம் போடுறதுக்குப் பதிலா, புதுசா ஏதாச்சும் செய்யலாமேனு யோசிச்சேன்.

கோல ஓவியம்
கோல ஓவியம்

ரசிக்கவைக்கிறதா மட்டுமில்லாம சிந்திக்கவைக்கிறதாவும் என்னோட கோலம் இருக்கணும்னு நினைச்சு, இந்த முயற்சியைத் தொடங்கினேன். என்னோட எண்ணங்களைத்தான் கோலமா போடுறேன். அடுத்த வருஷம் மார்கழி வரைக்கும் மனசுல நிற்கிற மாதிரி கோலங்கள் வரையணும். ஒவ்வொரு வருஷமும் மார்கழி மாதம் முழுக்க இப்படி கோலம் வரைவதை வழக்கமா வெச்சிருக்கேன்" என்றார்.

"கடந்த வருஷம், பெண்கள் தினத்துக்காக தனியார் பேங்க், கோலப்போட்டி ஒண்ணு நடத்தினாங்க. அந்த டைம்ல, எல்லா பக்கமும் அபிநந்தன் பேச்சுதான். அதனால, அபிநந்தனையும் அவரின் அம்மாவையும் வரைந்து பெண்கள் தினத்தை அந்தத் தாய்க்கு சமர்ப்பிச்சேன். முதல் பரிசு வாங்கினேன். நான் முதலும் கடைசியுமா கலந்துகிட்டது அந்த கோலப்போட்டியிலதான்'' என்றவர், கோலத்துக்காகத்தான் நேரம் ஒதுக்குவது பற்றிச் சொன்னார்.

கோலம்
கோலம்

''ஒரு தனியார் கம்பெனியில வேலைபார்க்கிறேன். வேலை முடிய ராத்திரி ஏழு மணி ஆகிடும். வீட்டுக்கு வந்து டின்னர்லாம் முடிச்சிட்டு கோலம் போட உட்காருவேன். என்கூட துணைக்கு கணவரும் உட்கார்ந்துக்குவார். சின்னக் கோலம்னா ஒரு மணிநேரம், பெரிய கோலத்துக்கு ரெண்டு மணிநேரம் ஆகும். சில சமயம் கோலம் போட்டு முடிக்க நள்ளிரவு ஆகிடும். அதுவரைக்கும் கணவர் எனக்காகக் காத்திருப்பார். கோலத்தை முடிச்சதும், அவர்தான் போட்டோ எடுப்பார்'' என்கிறார் சிரிப்புடன்.

தன் கோலத்துக்கான பாராட்டுகள் பற்றிச் சொல்லும்போது, "எங்க வீட்டுக்கு மேலே, மாடியில குடியிருக்கிற சாய் சார், தினமும் கோலத்தைப் பார்த்து கமென்ட் சொல்லிட்டுத்தான் கிளம்புவார். கொஞ்ச நாள் முன்னாடி ஆண்டாள் வரைஞ்சேன். அதை வாட்ஸ்-அப் குரூப்ல அனுப்பினப்போ, குரூப்ல ஒருத்தர், 'ரொம்ப நல்லாயிருக்கே, இது மாதிரியும் வரைங்களேன்'னு ஆண்டாள் படம் ஒண்ணு அனுப்பினாங்க. போட்டோஸ் அனுப்ப லேட்டாச்சுன்னா, 'ஏன் இன்னும் கோலம் வரலை'ன்னு போன் பண்ணிடுவாங்க தம்பி, அத்தை, நாத்தனார் எல்லோரும்..." என்கிறார் பெருமையுடன்.

குடும்பம்
குடும்பம்

கிருத்திகாவின் கோல ஓவியங்களை இங்கே காணலாம்.

தன் கோல ஓவியங்களின் நோக்கம் பற்றிச் சொல்லும்போது, "பொதுவா இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு, நம்மளோட நிறைய பண்பாட்டு விஷயங்களை நாம கொண்டுபோய்ச் சேர்க்கிறது இல்ல. இன்று, பல சின்னப் பசங்களும் வந்து என் கோலங்களைப் பார்த்து ரசிச்சிட்டுப் போறாங்க. அந்த ரசனையை நான் அவர்களுக்குத் தர்றேன்ங்கிறது எனக்குப் பெருமையா இருக்கு. ஒவ்வொரு வருஷமும் நான் வரையுறதுல முன்னேற்றம் தெரியுதுன்னு எல்லோரும் சொல்றாங்க. நான் பார்த்துதான் வரையிறேன். நானா வரையும் அளவுக்கு பக்குவப்படணும்னு நினைக்கிறேன்" என்கிறார் கிருத்திகா.

மார்கழிக் கோலம், கோலாகலம்!