Published:Updated:

கூரைப்பூ, ஒற்றைச் சக்கர ரதக் கோலம், பச்சரிசி... பொங்கல் பண்டிகை கொண்டாடத் தாத்பர்யங்கள்!

பொங்கல்

சூரியனின் நகர்வே காலச் சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் கடந்துபோன காலம் ஒருநாளும் நமக்குத் திரும்பக் கிடைக்காது. காலம் பொன்போன்றது என்பதைக் குறிப்பதுவே ஒற்றைத் தேர் சக்கரம்.

Published:Updated:

கூரைப்பூ, ஒற்றைச் சக்கர ரதக் கோலம், பச்சரிசி... பொங்கல் பண்டிகை கொண்டாடத் தாத்பர்யங்கள்!

சூரியனின் நகர்வே காலச் சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் கடந்துபோன காலம் ஒருநாளும் நமக்குத் திரும்பக் கிடைக்காது. காலம் பொன்போன்றது என்பதைக் குறிப்பதுவே ஒற்றைத் தேர் சக்கரம்.

பொங்கல்

நம் தேசத்தில் முற்காலத்தில் ஆறுவகையான மதங்கள் இருந்தன. அவற்றில் சௌரம் எனப்படும் சூரியனை முழுமுதற்கடவுளாகக் கொண்டு வழிபடும் மதம் முதன்மையானது.

சூரியன். நாம் நேரில் காணக்கூடிய ஒரே தெய்வம் பிரத்யட்சமான கடவுள். சூரியனைப் பற்றிப் புகழாத ஞான நூல்களே இல்லை.

சூரியன், மாதம் ஒரு ராசியாகச் சஞ்சரித்துவந்தாலும் மகர ராசியில் பிரவேசிப்பதை சிறப்பித்து ‘மகர ரவி’ என்று குறிப்பிடுவர். அதுவே உத்தராயண புண்ணிய காலம் எனப்படும். உத்தர அயனம் என்றால், வடக்குப்புற வழி என்று பொருள். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படும்.

பொங்கல்
பொங்கல்

மங்கள கரமான காரியங்களைச் செய்ய உத்தராயணமே சிறந்த காலம். ஏன் இந்த உத்தராயண புண்ணிய காலத்தில் இறப்பதுகூட நற்கதி தரும் என்று ஞானநூல்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட உத்தராயணத்தின் முதல் நாள் தைப்பொங்கல் திருநாள் எனப்படும் மகரசங்கராந்தி எனப்படும்.

பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாக போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று விரிவாகக் கொண்டாடப்படும் பண்டிகை.

போகிப் பண்டிகை: பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற்கும் முகமாக போகி கொண்டாடப்படுகிறது. போக்கி என்பதுதான் போகி என்று மாறிவிட்டது என்பார்கள். நமக்கு உதவாத பழைய பொருட்களை எல்லாம் தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ளும் நாள் இது என்பதால் அவ்வாறும் பெயர் பெற்றது என்பார்கள். போகி என்றால் அது இந்திரனைக் குறிக்கும். இந்திரவிழாவே போகி என்கிறார்கள். வட இந்தியாவில் போகி அன்று லோரி கொளுத்துவது என்று கட்டைகளைப் போட்டு நெருப்பு கொளுத்துவதும் உண்டு.

போகிப் பண்டிகை அன்று பிள்ளைப்பூ, நாயுறுவி, வேப்பிலைக்கொத்து, மாவிலை ஆகிய அனைத்தும் சேர்த்துக் கட்டி கூரைப்பூ என்று சொல்லி அதை வீட்டின் கூரையில் சொருகி வைக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு செய்வதன் மூலம் நோய் நொடி அண்டாது என்பது நம்பிக்கை.

பொங்கல்: உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்தி அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதை அடிப்படையாகக் கொண்டது.

இந்த நாளில் காலையில் எழுந்ததும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண்டும். ஆனால் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது என்பார்கள் பெரியோர்கள்.

புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கலுக்குப் பச்சரிசியே பயன்படுத்த வேண்டும். பொதுவாகவே நிவேதனம் செய்து வழிபட வேண்டும் என்றால் அதற்குப் புழுங்கல் அரிசியைப் பயன்படுத்துவது உகந்த தல்ல.

பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள். பொங்கல் பொங்கி வழியும் போது, ‘‘பொங்கலோ பொங்கல்!’’ என்று குரலெடுத்துக் கூவுவார்கள்.

பொதுவாகப் பலரும் நேரடியாக பொங்கல் பூஜைக்குள் சென்று விடுகிறார்கள். ஆனால் சுருக்கமாகவாவது கணபதியை வணங்கிவிட்டுத்தான் பொங்கல் பூஜையைச் செய்ய வேண்டும். கணபதி பூஜை செய்யத் தெரியாதவர்கள் பாலும் தெளிதேனும், ஐந்துகரத்தனை போன்ற விநாயகப்பெருமானுக்குரிய பாடல்களை உச்சரித்து பக்தியோடு அவரை வேண்டிப் பின் பூஜையைத் தொடங்கலாம்.

அதன் பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து வைத்து பூஜை செய்ய வேண்டும்.

ஒரு தலைவாழை இலையில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் வழக்கமும் சிலருக்கு உண்டு. அப்போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள்.

பொங்கல் அன்று சூரியக் கோலம் இடுவது வழக்கம். வெளியே வாசலில் சூரியக் கோலம் இட முடியாதவர்கள் குறைந்தபட்சம் வீட்டின் பூஜை அறையில் இட்டு வழிபடுவது நல்லது.
சூரியக் கோலம்
சூரியக் கோலம்

சூரியனுக்குத் தேர் வரையும்போது அது ஒற்றைச் சக்கரம் உள்ள தேராக வரைய வேண்டும். அதாவது சூரியன் முன்னோர்க்கியே நகர்வார் என்றும் அவருக்குப் பின்னோக்கிச் செல்லும் வழக்கம் இல்லை என்றும் சொல்வார்கள். சூரியனின் நகர்வே காலச் சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால் கடந்துபோன காலம் ஒருநாளும் நமக்குத் திரும்பக் கிடைக்காது. காலம் பொன்போன்றது என்பதைக் குறிப்பதுவே ஒற்றைத் தேர் சக்கரம்.

சூரியனை முறையாக வழிபடுபவர்களுக்குக் காலத்தின் அருமை கட்டாயம் தெரிந்திருக்கும். ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும் என்கின்றன புராணங்கள். பொங்கல் பண்டிகை அன்று சூரிய நமஸ்காரம் செய்வதும் ஆதித்ய ஹிருதய பாராயணம் செய்வதும் மிகவும் நல்ல பலன்களைத் தரும். அப்படிப் பட்ட சூரியனுக்குப் பொங்கல் வைத்து வழிபடும் நாள் இன்று. இந்த நாளில் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்று சூரிய பகவானை வேண்டிக்கொள்வோம்.

பொங்கல் வைக்க நல்லநேரம்: பிற்பகல் 12 மணி முதல் 1.30 வரை

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.