Published:Updated:

கார்த்திகை தீப விழா மகத்துவங்கள்: இந்த விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

தீப விழா

தமிழர்கள் வாழ்வோடு கலந்த பாரம்பர்ய விழா கார்த்திகை தீப விழா. இது இன்றும் பொலிவோடும் சிறப்போடும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறப்பாக 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

Published:Updated:

கார்த்திகை தீப விழா மகத்துவங்கள்: இந்த விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

தமிழர்கள் வாழ்வோடு கலந்த பாரம்பர்ய விழா கார்த்திகை தீப விழா. இது இன்றும் பொலிவோடும் சிறப்போடும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறப்பாக 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது.

தீப விழா
எது படைத்ததோ எது காக்கிறதோ எது அழிக்கிறதோ அந்த மகாஜோதியை வணங்குகிறேன்! இதுவே நமது தர்மத்தின் அடிப்படை வழிபாடு. வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துவது இதையே. சகல மதங்களும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வது ஒளி வழிபாட்டையே. பஞ்ச பூதங்களில் ஒளியான நெருப்புக்கு மட்டுமே ஒரு பெருமை உண்டு. அச்சமூட்டும் நெருப்பே, ஒளியானால் அச்சத்தை விலக்கவும் செய்யும்.

ஒளியின்றி எதையும் பார்க்க முடியாது; அதேபோல் உள்ளத்தில் ஒளியின்றி எதையும் உணரவும் முடியாது. ஒளியே ஆதாரம், அதையொட்டியே சிருஷ்டி தொடங்கியது. ஒளியான நெருப்பே சிருஷ்டியைக் காக்கிறது. அதுவே ஊழியில் சகலத்தையும் தன்னுள் அடக்கியும் கொள்கிறது. ரிக் வேதம் தொடங்கி வள்ளலார் வரை ஜோதி வழிபாட்டை வலியுறுத்தியது எல்லாம் அதுவே வணங்கத்தக்க சக்தி என்பதாலேயே.

தீப விழா
தீப விழா

12 திருமுறைகளும் ஈசனை ஒளியாகவே எண்ணி வழிபடுகிறது. 'அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்...' என்ற பாடலில் நக்கீரர் அறுமீன் விழா என்று கார்த்திகை விளக்கீடு விழாவையும் பழவிறல் மூதூர் என திருவண்ணாமலையையும் குறிப்பிடுகிறார். தென்னகத்தில் ஜோதி வழிபாட்டில் சிறந்த தலங்கள் 3. திருவண்ணாமலை, சபரிமலை, வடலூர். இதில் காலத்தால் பழைமையானது திருவண்ணாமலை கார்த்திகை விளக்கீடு விழா.

அஞ்ஞானம் அழிக்க எழுந்த பேரொளியை அகிலத்தோர் எல்லோரும் கொண்டாடும் விழாவே திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப விழா. இந்த விழாவைக் கொண்டாடாத இலக்கியங்களோ புராணங்களோ இல்லை. தமிழ்நாட்டின் மிகப்பெரிய விழாவான கார்த்திகை தீபப் பெருவிழா ஆன்மாவையும் ஆண்டவனையும் இணைக்கும் ஒரு தத்துவ விழா. பரணி தீபமும் மகா தீபமும் பெரும் தத்துவங்கள்.

ஒளியின் ஒடுங்கிய ரூபமே ஆன்மா. அதுதான் உள் ஒளி. ஒளியின் விரிந்த ரூபமே தீபம். அதுவே மலைமீது எல்லோரும் காண எழுகின்றது. எல்லா உயிர்களின் இயக்கத்திற்கும் அதுவே காரண காரியமாய் உள்ளதால் அதுவே வணங்கப்படுகிறது. ஒளியே தேவர்களை வரவேற்கும் சின்னமாகிறது. ஒளியே மங்கல காரியங்களில் சாட்சியாகிறது. ஒளியே ஆன்மிகத்தின் அடையாளமாக விளங்குகிறது.

ஒளியை ஒதுக்கிவிட்டு உலகத்தைக் காணமுடியாது என்பதைப் போல ஒளியை விலக்கிவிட்டு எந்த வழிபாடும் இல்லை. ஒளி ஞானத்தின் சின்னம். அதை அறிவது எளிது, உணர்வது கடினம். பகிரப் பகிரப் பெருகுவது ஞானமும் ஒளியுமே. புறத்தில் ஒளியேற்றுவது தொடக்கமே. அகத்தில் ஒளியேற்றி ஆதார சக்கரங்கள் ஜொலிக்க ஈசத்துவமாக மாறுவதே தீப விழாவின் தத்துவம். அப்படித்தான் அம்பிகை தொடங்கி சித்தர்கள் வரை ஈசனோடு கலந்தார்கள்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

தமிழர்கள் வாழ்வோடு கலந்த பாரம்பர்ய விழா கார்த்திகை தீப விழா. இது இன்றும் பொலிவோடும் சிறப்போடும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் சிறப்பாக 3 நாள்கள் கொண்டாடப்படுகிறது. பெரிய கார்த்திகை, நாட்டுக் கார்த்திகை, கொல்லைக் கார்த்திகை என்று காவிரி பாயும் பகுதிகளில் கொண்டாடுவது வழக்கம். வீடுகளில், கோயில்களில், மலைகளில் தீபம் ஏற்றுவது பெரிய கார்த்திகை. நீர் நிலைகளில், கால்நடை வளர்க்கும் இடங்களில், வைணவக் கோயில்களில் தீபம் ஏற்றுவது நாட்டுக் கார்த்திகை. வயல்களில், தோட்டங்களில், குப்பை மேடுகளில் விளக்கேற்றுவது கொல்லைக் கார்த்திகை.

இலுப்பை, எள், பசு நெய், மூலிகை எண்ணெய் போன்றவற்றால் ஒரே நேரத்தில் ஊரெங்கும் விளக்கு ஏற்றப்படும்போது, மழை நின்று குளிர்காலம் தொடங்கும் கார்த்திகை மாதத்தில் பெருகும் நுண் கிருமிகள் முற்றிலுமாக அழியும் என்ற நம்பிக்கைதான் கார்த்திகை தீப விழாவின் அடிப்படைக் காரணம்.

தீபத் திருவிழாவின் போது சொக்கப்பானை கொளுத்துவார்கள். அப்போது சொக்கப்பனை நடுவில் நட்டு வைத்திருக்கும் வன்னி மரத்தை தீயின் இடையே ஓடி வந்து வெட்டுவார்கள். இதனால் ஊருக்கு வரவிருக்கும் தீங்குகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சொக்கப் பனை எரிந்து முடிந்த பின்னர் அதில் இருக்கும் சாம்பல், குச்சிகளை வயல் வெளி, தோட்டங்களில் கொட்டுவார்கள். அப்படி செய்தால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை.

அதேபோல் பொரி உருண்டையும் பொரி அரிசியும் இல்லாமல் கார்த்திகை தீபமே இல்லை எனலாம். பொரி அரிசி என்பது அரிசி வெப்பத்தால் வெடித்து உருவாவது. அரிசி ஆன்மா என்பதும் அது இறைவனால் மலர்ந்து நைவேத்தியம் ஆவது என்பதும் இந்த விழாவின் சிறப்புகளுள் ஒன்று. மாவலி எனும் பனைப்பூக்களால் உருவாக்கப்படும் இயற்கை மத்தாப்பும் சுற்றுப் புறச்சூழலுக்கு நன்மை சேர்ப்பதோடு பசு, பதி, பாச தத்துவத்தை விளக்கும்.

அண்ணாமலையார்
அண்ணாமலையார்

இப்படி எதைத் தொட்டாலும் ஆழ்ந்த தத்துவக் கருத்தோடுக் கொண்டாடப்படும் இந்த விழா தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுக்க கொண்டாட வேண்டிய விழா என்று ஆன்றோர்கள் கூறுவர். காரணம் இந்த விழாவின் நோக்கம் அத்தனை ஆழ்ந்த அடிப்படைகளைக் கொண்டது என்பர்.

இருளில் இருந்து ஒளிக்கு நம்மைக் கொண்டு சேர்க்கும் தீபத்துக்கு வணக்கங்களைத் தெரிவித்து இந்த இனிய தீபத் திருநாளைக் கொண்டாடுவோம். அதோடு,

'ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை

நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்

வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்...'

என்று சித்தர் பெருமக்கள் அறிவுறுத்தியதைப் போல நம்முள்ளே இருக்கும் ஜோதியைக் கண்டுணர்ந்து, அதை மேலும் வளர்த்து உலகமெல்லாம் அன்பும் பண்பும் நிறைந்து வாழ எல்லாம் வல்ல ஈசனைப் போற்றுவோம்!