Published:Updated:

நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா

ஷாலி
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாலி

- பிஸ்மி பரிணாமன்

இந்தப் படங்களில் ஒன்று, சமூக வலைதளங்களில் ‘நம்புங்கள், இவர் ஆண்தான்...’ என்ற தலைப்புடன் வைரலாகிக்கொண்டிருக்கிறது. `இவர் திருநங்கையாக இருப்பாரோ’ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தாலும் இவர் ஆண்தான்... ஆணேதான்! பெயர் ஷாலி.

ஷாலி இப்படி பெண் வேடம் போடக் காரணமாக அமைந்திருப்பது, கேரள மாநிலம் கொல்லம் நகருக்கு அருகில் இருக்கும் சவராவில் அமைந்திருக்கும் ஸ்ரீ கொட்டன் குளங்கரா தேவி கோயில்.

மார்ச் 25 அன்று நடந்து முடிந்த இந்தக் கோயிலின் உற்சவத்தில்தான் ஷாலி பெண் வேடத்தில் வந்தார். ஷாலி மட்டுமல்ல... நூற்றுக்கணக்கான ஆண்கள் இந்தத் திருவிழாவில் பெண் வேடத்தில் கலந்துகொண்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் மலையாள மீனம் மாதத்தின் (மார்ச் இரண்டாம் பகுதியில் வரும்) 10 மற்றும் 11 தேதிகளில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு இந்தக் கோயில் திருவிழா செண்டை மேளம் மற்றும் வாணவேடிக்கைகளுடன் நடக்கிறது.

நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஆடு மாடு மேய்க்கும் சிறார்கள், வழியில் கிடைத்த தேங்காயை உரிப்பதற்காக அங்கிருந்த கல் மீது வேகமாக எறிந்திருக்கிறார்கள். அப்போது அந்தக் கல்லிலிருந்து ரத்தம் வெளி வந்திருக்கிறது. ‘அது சாதாரண கல் அல்ல. வன துர்க்கை அந்தக் கல்லை தனது வீடாகக் கொண்டிருக்கிறார்’ என்று பெரியவர்கள் சொன்னார்கள். அதன்பின் அனைவரும் வனதுர்க்கை குடியிருக்கும் கல்லை வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். வன துர்க்கை பெண் தெய்வம் என்பதால், சிறார்கள் பலரும் தங்களை சிறுமிகளாக வேடமிட்டு அலங்கரித்துக்கொண்டு, மலர் மாலைகளைப் பின்னி வன துர்க்கைக்கு அணிவித்து வழிபட்டு வந்திருக்கிறார்கள். அந்த வழக்கம் காலக்கிரமத்தில், ஆண்கள் தங்களை பெண்களாக வேடம் போட்டுத் திருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் பரிணமித்திருக்கிறது. மரத்தின் அடியில் இருந்த வன துர்க்கையும், ஸ்ரீ கொட்டன் குளங்கரா தேவி கோயிலாக மாறியது.

நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா

மார்ச் 25 அன்று இந்தக் கோயிலில், ‘நேர்க் கோட்டில் ஐந்து திரிகள் எரியும்’ வித்தியாசமான சமய விளக்கைக் கையில் ஏந்தி, அழகான பெண்கள் உருவத்தில் ஆண்கள் ஊர்வலம் நடத்துகிறார்கள். பெரும்பாலும் இப்படி சமய விளக்கு ஏந்தி கோயிலை வலம் வருவது ஏனோதானோ முறையில் இல்லை. கண்ணுக்கு மை இட்டு, நெற்றியில் பொட்டு வைத்து, செயற்கைக் கூந்தல் பொருத்தி மல்லிகையால் கூந்தலை நிறைத்து, நெற்றிச் சூடி அணிந்து, நேர்த்தியாகப் புடவை கட்டி, உடலெங்கும் மின்னும் நகைகள் அணிந்து, பாதங்களில் கொலுசு பளபளக்க அன்னம் போல அடிமேல் அடிவைத்து அட்டகாசமான அழகிகளாக நடந்து வருவார்கள் இந்த ‘வசீகர’ ஆண்கள். அழகிலும் நளினத்திலும் நிஜப் பெண்களே பொறாமைகொள்ளும் அளவுக்கு பிரமாதமாகப் பிரகாசிப்பார்கள் இந்த வேடம் தரித்த ஆண்கள்.

அப்படிப் பெண்களாக மேக்கப் போட்டு அசத்தும் ஆண்களில், மகா நேர்த்தியாக இருக்கும் ஆணுக்கு முதல் பரிசு வழங்கி கௌரவிக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் எழுதினர். அப்படிப் பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டதாகச் சொல்லப்படும் ஷாலியின் படம்தான் வைரலாகிவருகிறது. கூடவே ‘இவர் பெண்தான்’ என்று சிலரும், ‘இல்லை... திருநங்கைதான். ஒரு ஆண் இப்படிப் பெண் வேடம் போட்டால் இவ்வளவு அழகாக இருப்பாரா’ போன்ற கமெண்டுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா

பெண் வேடமிட்ட இதர ஆண்களும் ‘சபாஷ்... சரியான போட்டி' என்று சொல்லும் அளவுக்கு நடிகைகளுக்குப் போட்டியாக மாறியிருந்தார்கள். இந்தத் திருவிழாவில் மேக்கப் போடும் கலைஞர்களுக்கு செம வசூல்!

ஸ்ரீ கொட்டன் குளங்கரா தேவியிடம் வேண்டிக் கொண்ட வேண்டுதல்கள் பலித்துவிட்டால், அடுத்த திருவிழாவில் ஆண்கள் இப்படிப் பெண் வேடமிட்டு சமய விளக்கு ஏந்தி, கோயிலை வலம் வந்து பூஜை நடத்தி, தேவிக்குத் தங்கள் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறார்கள். இது இங்கு பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.

நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா

ஷாலிக்கு ஈடுகொடுக்கும் கௌதம் ஒரு மருத்துவ மாணவர். மோகினி ஆட்ட மங்கை வேடத்தில் கலக்கிக்கொண்டிருந்தார். ‘‘எதற்காக இந்த மோகினி வேஷம்’’ என்று அவரிடம் கேட்டேன். ‘‘நான் உக்ரைனில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தேன். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததால், படிப்பை நிறுத்திவிட்டு நான் மற்ற மாணவர்களுடன் கேரளம் வந்து சேர்ந்தேன். அதன்பின் மருத்துவப் படிப்பை உக்ரைனில் தொடர முடியவில்லை. தடைப்பட்ட மருத்துப் படிப்பு ஜார்ஜியாவில் தொடர வேண்டும் என்று தேவியிடம் பிரார்த்தித்தேன். அது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. அதற்காக எனது நேர்த்திக் கடனைச் செலுத்தவே இப்படி மோகினி ஆட்ட மங்கையாக வேடமிட்டு, சிறப்பு பூஜை நடத்தி முடித்தேன்’’ என்றார்.

‘ஷாலியைவிட கௌதம் அழகாக இருக்கிறார். அவருக்கே முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்’ என்று பலரும் சொன்னார்கள். அது உண்மை என்றாலும், ஒரு நெருடல். நடப்பது கோயில் திருவிழா. கோயிலில் அழகிப் போட்டி சரியா? சமூக வலைதளங்களில் அதகளம் ஆகும் ஷாலி குறித்த செய்தி எந்த அளவு உண்மை? கோயிலின் முன்னாள் செயலாளர் ஜிதனிடம் பேசினேன்.

கௌதம்
கௌதம்
நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா
நேர்த்திக்கடனுக்காக பெண் வேடம்! - ஆண்கள் கொண்டாடும் விநோத திருவிழா
ஷாலி
ஷாலி

‘‘ஆமாங்க... எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எங்கள் கோயில் திருவிழாவுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்தது. அதற்குக் காரணம் ‘ஷாலி அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’ என்ற செய்திதான். அப்படி ஒரு அழகிப் போட்டி அல்லது அழகித் தேர்வு இந்தத் தடவை மட்டுமல்ல... எப்போதுமே நடந்ததில்லை. இனியும் நடக்கப் போவதில்லை. நாங்கள் நடத்துவது திருவிழா. அழகிப் போட்டி அல்ல. சமூக வலைதளங்களில் யாரோ செய்தியைத் திரித்து வெளியிட, அது வைரல் ஆகிவிட்டது. பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் இங்கு பெண்கள் வேடத்தில் வழிபடுவது நடந்து கொண்டிருக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களில் சிறந்த அழகியைத் தேர்ந்தெடுப்பதும், பரிசு வழங்குவதும் கோயிலின் வேலை அல்ல... இதைச் சமூக வலைதளங்களில் இயங்குபவர்கள் புரிந்து கொள்ளவில்லை’’ என்றார்.

அழகிகள் என்றால் ‘செல்ஃபி' எடுக்க ஆர்வமுள்ள ஆட்கள் இருப்பார்களே! இங்கேயும் பெண்களாக உருமாறிய ஆண்களுடன் பலரும் ‘செல்ஃபி' எடுக்கப் போட்டி போட்டார்கள். இந்தத் திருவிழாவில் திருநங்கைகளும் சிறிய எண்ணிக்கையில் கலந்து கொள்கிறார்கள் என்பது கூடுதல் செய்தி.