மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெற்றுவரும் சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. இதைக் காண ஏராளமான மக்கள் திரண்டு வந்து பக்தி பரவசமடைந்தார்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் சுவாமியும் அம்மனும் தினமும் எழுந்தருளி மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்தனர்.
8-ம் நாளில் மீனாட்சியம்மனுக்கு மதுரையின் அரசியாகப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 9-ம் நாளான நேற்று திக் விஜயம் செய்து சப்பரத்தில் எழுந்தருளினார்.

திருவிழாவின் 10-ம் நாளான இன்று மீனாட்சியம்மன் - சுந்தரேசுவருக்குத் திருக்கல்யாணம் நடந்தது. இதற்காக ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபம் 10 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்காக வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன.
இந்தத் திருமண நிகழ்ச்சியை நேரில் காண கட்டணம் செலுத்தியவர் உட்பட 12,000 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நேரில் வர முடியாதவர்கள் வீட்டிலிருந்தே திருக்கல்யாணத்தை காணும் வகையில் பல்வேறு யூடியூப் தளங்களில், சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெளி மாவட்டம், மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர்.

இந்தத் திருக்கல்யாணத்தைக் காண திருப்பரங்குன்றத்திலிருந்து சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, பவளக்கனிவாய்பெருமாள் ஆகியோர் புறப்பட்டு இன்று அதிகாலை வந்தடைய மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.
நாளை மிகச்சிறப்பாகத் தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து அழகர் மலையிலிருந்து கள்ளழகர் மதுரையை நோக்கிப் புறப்படுகிறார்.