வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் பாரம்பர்யமும்கொண்ட பிரசித்திப் பெற்ற திருவிழாக்களில், வேலங்காடு ஏரித்திருவிழாவும் ஒன்று.
வேலங்காடு கிராமத்திலுள்ள ஏரியில் எழுந்தருளியிருக்கும் பொற்கொடி அம்மனுக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி புதன்கிழமையில் இந்த விழா எடுக்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும், அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளும் நோய் நொடியின்றி இருப்பதற்காக வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக இணைந்து இந்தத் திருவிழாவை நடத்துகிறார்கள்.

ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பர்ய வழக்கப்படி மாட்டு வண்டியில் பசுந்தழைகள் கட்டி தென்னை ஓலையை கூடாரம்போல் அமைத்தும், டிராக்டர், வேன், ஆட்டோக்களிலும் குடும்பத்துடன் உறவினர்களை அழைத்துக்கொண்டு வருவார்கள். அங்கேயே, சமைத்து சாப்பிட்டுவிட்டுத் தங்கள் கிராமத்துக்குச் செல்வார்கள்.
அதன்படி, இவ்வாண்டுத் திருவிழா சந்தனகாப்பு அலங்காரம், தீபாராதனையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று நள்ளிரவு 12 மணியளவில் வாண வேடிக்கை, கரகாட்டம், நையாண்டி மேளங்களுடன் புஷ்ப ரதத்தில் அம்மன் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வீதிஉலா சென்ற புஷ்ப ரதம், நேற்று மாலை வேலங்காடு ஏரியை வந்தடைந்தது. அதன்பிறகு, அங்கு திரண்டிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கு வந்த விவசாயிகள், கால்நடைகளையும் அழைத்து வந்திருந்தனர். கால்நடைகளுடன் அவர்கள் கோயிலை வலம்வந்து சாமியை வழிபட்டனர். வரும் சனிக்கிழமை காப்பு அவிழ்த்தல் அபிஷேகத்துடன் ஏரித்திருவிழா நிறைவுபெறுகிறது.