புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இங்கு, ஒவ்வோர் ஆண்டும் பூச்சொரிதல், தேரோட்டம் எனப் பங்குனிப் பெருவிழா களைகட்டும். அந்த வகையில் தான், கடந்த மாதம் 26-ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2-ம் தேதி பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி முத்துமாரியம்மன், அன்னம், குதிரை, சிம்மம் வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 9-ம் தேதி, பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சாமி வேடம் அணிந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள், பால்குடம், அலகு குத்துதல், காவடி பறவைக் காவடி எடுத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாகச் சென்று தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி வந்தனர். முத்துமாரியம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பப்ட்டன.
மா, பலா, வாழை என முக்கனிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 'அரோகரா' மற்றும் 'ஓம் சக்தி பராசக்தி' முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்து, பின்னர் கோயில் முன்பு நிலை நின்றது. பல்வேறு இடங்களில் அன்னதானம், நீர் மோர் ஆகியன பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
தேர்த்திருவிழாவையொட்டி, 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.