Published:Updated:

ரம்ஜான் நோன்பு உணவு வரையறைகள்... விளக்கங்களும் வழிகாட்டல்களும்!

ரம்ஜான்

நோன்புக் கஞ்சி என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கும் இது பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

Published:Updated:

ரம்ஜான் நோன்பு உணவு வரையறைகள்... விளக்கங்களும் வழிகாட்டல்களும்!

நோன்புக் கஞ்சி என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கும் இது பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

ரம்ஜான்

இது ரம்ஜான் மாதம்... இஸ்லாமியர்களின் புனித மாதம். ரம்ஜான் பண்டிகை, நோன்பு, நோன்பைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் குறித்து விளக்கமாகப் பகிர்ந்துகொள்கிறார், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி... 

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில செயலாளர் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி.

அரபி மொழியில் ரம்ஜான் என்பது ஒரு மாதத்தின் பெயர். அந்த மாதம் முடிந்த மறுநாள் கொண்டாடப்படுவதுதான் ரம்ஜான் பண்டிகை. சூரிய உதயத்துக்கு முன்பாகத் தொடங்கி, சூரிய மறைவு வரை உண்ணாமல், பருகாமல், குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், தவறான எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பதே ரம்ஜான் நோன்பு. 

ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருக்கவேண்டும் என குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. நமது பாவங்களில் இருந்து விலகி, நம்மை பரிசுத்தப்படுத்தி இறைவனை நெருங்குவதற்காவே இந்த நோன்பு, கடமையாக்கப்பட்டுள்ளது.       

* பிறை தெரிவதை எப்படி கணக்கிடுவார்கள்?

நோன்பு துவங்குவதாக இருந்தாலும், முடிவதாக இருந்தாலும் இவை இரண்டும் பிறை தென்படுதலின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட வேண்டுமென நபிகள் நாயகம் கூறியிருக்கிறார். ரம்ஜான் மாதத்துக்கு முந்தைய மாதத்தின் கடைசி இரவு, வானத்தில் பிறை தெரிகிறதா எனத் தேடுவோம். அப்போது கண்ணுக்குப் பிறை தென்பட்டதென்றால், ரம்ஜான் மாதத்தின் முதல் நாள் ஆரம்பமானது என அர்த்தம். நோன்பைத் தொடங்கிவிடுவோம். 

பிறை
பிறை

நோன்பை தொடங்கிய பின் 29-வது நாளில் இரவில் வானத்தில் பிறையைத் தேடுவோம். ஏதாவது ஒரு பகுதியில் யாருக்காவது தென்பட்டால் அடுத்த மாதம் தொடங்கியது என உறுதி செய்வோம். 29-வது நாளோடு நோன்பை நிறைவு செய்வோம். அடுத்த நாள் `ஷவ்வால்’ மாதத்தின் முதல் நாள். ஷவ்வால் மாதத்தின் முதல் நாளே ரம்ஜான் பண்டிகை. 

* நோன்புக் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடுமா?

நோன்பு பிடிக்கும் காலம் உலகம் முழுவதும் ஒன்றுதான். காலை சூரிய உதயத்துக்கு முன்பிலிருந்து சூரியன் மறைகிற வரை நோன்பு இருப்பார்கள்.  

* நோன்பின்போது என்னென்ன உணவுகள் உண்ணலாம், உண்ணக் கூடாது? 

நோன்புக்கான உணவு விதிமுறைகள் என்று ஏதுமில்லை. இஸ்லாத்தில் எதுவெல்லாம் சாப்பிடலாம் என்ற பொது அனுமதி இருக்கிறதோ அதையெல்லாம் உண்ணலாம். 

ரம்ஜான் நோன்பு உணவு வரையறைகள்... விளக்கங்களும் வழிகாட்டல்களும்!
Pixabay

பன்றி இறைச்சி, நாட்டுக் கழுதை, இறைவனின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்ட பிராணிகள், நகங்களால் வேட்டையாடக்கூடிய பறவைகள், கோரைப் பற்கள் உடைய பிராணிகள் ஆகியவற்றை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு, ஒட்டகம் இவற்றுக்கெல்லாம் கோரைப் பல் கிடையாது. தட்டைப் பற்கள் இருக்கும். பூனை, நாய், சிங்கம் போன்ற பிராணிகளுக்கெல்லாம் கோரைப் பற்கள் இருக்கும். மேலும், மனிதனுக்குக் கேடு தரக்கூடிய மதிமயக்கக்கூடிய பொருள்களையும் சாப்பிடக் கூடாது.

* நோன்புக் கஞ்சியில் என்ன ஸ்பெஷல்?

நோன்புக் கஞ்சி என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளை அல்ல. தென்னிந்திய மக்களின் பழக்கம். சமூக சிந்தனையோடு நோன்பு கஞ்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கும் இது பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.

நோன்பு இருப்பவர்கள் காலையிலிருந்து மாலை வரை உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பதால், உடலில் சாதாரணமாகவே சூடு இருக்கும். அதைத் தணிக்கும் வகையில், உணவை அமைக்க வேண்டும். நோன்புத் துறக்கும் நேரத்தில் வெந்தயம், பூண்டு போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த பொருள்களையெல்லாம் காய்ச்சி கூழாகக் குடிப்பதால், உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

நோன்பு கஞ்சி நோன்பாளர்களுக்கு எனத் தயாரிக்கப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கும் இதைப் பகிர்ந்து கொடுக்கிற பழக்கம் எல்லா ஊர்களிலும் உண்டு. இதன்மூலம், `சமூக நட்புறவு’ வளர்க்கப்படுகிறது.

ரமலான் நோன்பு கஞ்சி
ரமலான் நோன்பு கஞ்சி
விகடன்

* நோன்பின்போது எச்சில்கூட விழுங்கக் கூடாது என்பார்களே, அது உண்மையா?

எச்சில் விழுங்கக் கூடாது என்று சொல்வது அறியாமை. எச்சில் விழுங்காமல் இருத்தல் என்பது சாத்தியமல்ல. சிலர் எச்சில் துப்பிக்கொண்டே இருப்பார்கள். எச்சில் விழுங்கக் கூடாது என மார்க்கத்தில் சொல்லப்படவில்லை.

* நோன்பு கட்டாயமா?

பயணத்தில் இருப்பவர்கள், நோயாளிகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இவர்கள் அனைவருக்கும் நோன்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இவர்கள் தங்களது சூழல் மாறிய பின், நோன்பு வைக்கலாம். அதாவது பயணம் முடிந்த பின், நோயிலிருந்து குணமடைந்த பின் விடுபட்ட நோன்பை வைக்கலாம். வயது முதிர்வின் காரணமாக நோயுற்றவர்களால் நோன்பை வைக்க முடியாது. நிரந்தர நோயாளிகளுக்கு இந்தக் கடமையே கிடையாது. யாருக்கு சக்தி இருக்கிறதோ, யாரால் செயல்படுத்த முடியுமோ அவர்களுக்குதான் கடமை. யாரால் இயலவில்லையோ அவர்களுக்கு கேள்வியே கிடையாது என குர்ஆன் கூறுகிறது. 

* மாதவிடாய் நாள்களில் பெண்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு உள்ளதா?

மாதவிடாய் நாள்களில் பெண்கள் ஓய்வெடுக்க வேண்டும். அது ஓய்வுக்கான காலம். இந்தச் சமயத்தில் இயல்பாகவே அவர்களின் உடலில் சோர்வு, மனரீதியான எரிச்சல், வழக்கமான வேலைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும். இஸ்லாம், மார்க்க ரீதியாகச் சொல்லப்பட்ட கடமைகள் அனைத்தையும் இந்தச் சமயத்தில் வாபஸ் வாங்கிக்கொள்கிறது. மாதவிடாய் ஓய்வுக்கான நேரம் என்பதால், அந்நாள்களில் பெண்கள் தொழக்  கூடாது, நோன்பு வைக்கவும் கூடாது.  

* நோன்பை பாதியில் நிறுத்தலாமா? 

நோன்பை ஒருவர் தொடங்கினால் அதை முழுமைப்படுத்த வேண்டும். நோன்பை முழுமைப்படுத்த இயலவில்லையெனில் குற்றமில்லை. ஆனால், மனம் முரண்டாக ஒருவர் செய்தால், இஸ்லாயத்தின் பார்வையில் அது பெரிய பாவமாகக் கூறப்பட்டு இருக்கிறது.

மாதவிடாய்
மாதவிடாய்

* நோன்பின்போது தவறி உண்டுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

மறதி என்பது ஒருவரின் கட்டுப்பாட்டில் இல்லை. தெரிந்தே ஒருவரால் மறக்க முடியாது. அவரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு காரணத்துக்கு அவரை தண்டிக்க இயலாது. மறந்து சாப்பிட்டால், குடித்தால் அது குற்றம் இல்லை.

குரானை பொறுத்தவரை நோன்பு என்பது ரமலான் மாதம் முழுவதும் இருக்க வேண்டும். ஆனால், சிலர் 1-வது நோன்பு, 3-வது நோன்பு,10-வது நோன்பு வைக்கிறேன் என ஒரு 5 முதல் 7 நோன்பு வைத்தது போதும் என விட்டுவிடுவார்கள். இது தவறு. இப்படி செய்வதால் அவர்களின் கடமை நீங்காது. அவர்களின் கடமைகளில் குறைவு செய்ததாகத்தான் இறைவனின் பார்வையில் கருதப்படும் 

* இஸ்லாமியர்களின் 5 முக்கியக் கடமைகள் என்னென்ன?

* முதல் கடமை கொள்கை… உலகை படைத்த இறைவன் ஒருவனே. ஒன்றுக்கும் மேற்பட்ட கடவுள்கள் கிடையாது. வணக்கத்துக்குரிய இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. பெற்றோராகவே இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும், கண்ணியப் படுத்த வேண்டுமே தவிர வணங்கக் கூடாது. 

இந்தக் கொள்கையின் மற்றொரு பகுதி என்னவென்றால், மனிதன் எப்படி வாழ வேண்டும் என இறைவன், தூதர்களை அனுப்பி உலகுக்கு கற்றுத் தந்திருக்கிறார். அப்படி தூதர்களில் கடைசியாக வந்தவர், நபிகள் நாயகம். இந்த நபிகள் நாயகத்தை தூதராக ஏற்றுக்கொள்வது.

ரம்ஜான் நோன்பு உணவு வரையறைகள்... விளக்கங்களும் வழிகாட்டல்களும்!
Pixabay

* தொழுகை... ஒவ்வொரு நாளும் ஐந்து தடவை தொழ வேண்டும். 

* நோன்பு… ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டும். 

* தர்மம்… செல்வந்தர் தன்னுடைய செல்வத்தில் இருந்து இரண்டரை சதவிகிதத்தை ஏழைகளுக்கு தர்மமாக கட்டாயமாகக் கொடுக்க வேண்டும். இதை சகாத் (Zakat) என்போம். இதற்கு தூய்மைப்படுத்துதல் என்று அர்த்தம்.     

* பொருளாதார வசதி, உடல்வசதி படைத்தவர் உலகத்தின் முதல் இறை ஆலயமான சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்கிற ஊரில் உள்ள கஃபாவை என்கிற ஆலயத்துக்குச் சென்று சில வழிபாடுகள் செய்ய வேண்டும். இதை ஹஜ் என்று சொல்வார்கள். 

ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்துகள்!