மார்கழி... மாதங்களில் அதற்கு மட்டும் தனித்த பெருமை. அந்த மாதத்தில்தான் பனி பொழிவதைப்போலவே பக்தியும் பொழியும். விடிந்தபின்னும் விழித்துக்கொள்ள மறுப்பவர்கள்கூட விடியும் முன்னே நீராடி நீறு பூசிக்கொள்வர். வண்ணங்களைத் தன் கன்னங்கள் எங்கிலும் அப்பிக்கொண்டதுபோல வண்ணக்கோலங்களால் பூமகள் அலங்கரித்துக் கொண்டிருப்பாள். வீட்டுக்குள் இருந்து நாம சங்கீர்த்தனம் பஜனையாக வீதிக்குள் வந்துவிடும். விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் ஆலய தரிசனம் அற்புத அனுபவம். கூடவே, சுடச்சுடக் கிடைக்கும் பிரசாதங்கள் தயிர்சாதம் உள்பட. மார்கழி மாதம் கடக்கும் வேகம் அற்புதமானது. இடையில் அனுமன் ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை என்று விழாக்களும் விசேஷங்களுமாகக் கழியும்.

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கண்ணன் கீதையில் சொல்கிறான். அதனால்தான் இந்த மாதம் முழுமையையும் ஆன்மிக மாதமாகவே கொள்கிறோம். மார்கழி முடியும் நாள் போகிப் பண்டிகை. புதிய தொடக்கம் ஒன்றுக்கான தயாரிப்புபோன்ற நாள். பழையன கழிந்து புதியன புகும் நாள். வீட்டைத் தூய்மை செய்து வெள்ளையடித்து தூசுபோக்கி, மாசு நீங்க வீட்டின் வாசலில் கண்ணுப்பீளையும் வேப்பிலையும் சொருகிவைத்து வரபோகும் தைத்திருநாளை வரவேற்கும் நாள் போகி.
உழவுத்தொழிலுக்கு முதல் துணை சூரியன் என்றால் உடன் துணை வருணன். உரிய காலத்தில் மழை பொழிந்தால்தான் விளைச்சல் மேம்படும். வருணனின் தலைவன் இந்திரன். இந்திரனைக் கொண்டாடும் திருநாள் போகி. இந்திரனுக்கு போகி என்று பெயரும் உண்டு. அந்தக் காலத்தில் தமிழகத்தில் இந்திரவிழா சிறப்புற்று விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் சுட்டுகின்றன. அந்த இந்திரவிழாவின் மிச்சமாகவே போகி கொண்டாடப்படுகிறது. இந்த போகிப் பண்டிகை தொடங்கிய நாள் குறித்த புராணக்குறிப்பு ஒன்று பாகவதத்தில் காணப்படுகிறது.

கிருஷ்ணாவதாரத்தின் போது கோகுலத்தில் இந்திர வழிபாடே இருந்துவந்தது. அதனால் இந்திரன் பெரும் கர்வம் கொண்டவனாக இருந்தான். குழந்தையாக இருந்த கண்ணன் நந்தகோபரிடத்து கோவர்த்தன மலையை வழிபடச் சொன்னான். கண்ணனின் சொற்படியே செய்தனர் கோகுலவாசிகள். இதனால் கோபம் கொண்ட இந்திரன் தன் வசமிருந்த ஏழு மழை மேகங்களை அனுப்பி கோகுலத்தின் மீது பொழியச் சொன்னான். இதனால் கோகுலமே திணறியது. எல்லோரும் கண்ணனிடம் வந்து வேண்டினர். கண்ணன் கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்து கோகுலத்து உயிர்கள் அனைத்தையும் காத்தார். மழை முழுமையும் நின்றபிறகு இந்திரன் கண்ணன் தன் சுண்டுவிரலால் மலையைத் தூக்கிய தீரத்தை அறிந்து அவனே மாலவன் என்று உணர்ந்தான். தன் தவற்றுக்கு வருந்தி ஓடிவந்து மன்னிப்புக் கேட்ட இந்திரன் கோவிந்தனைத் தொழுத நாள் போகி என்கிறது பாகவதம்.
இந்தியா முழுவதும் போகிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நாம் பழைய பொருள்களைக் கொழுத்துவதைப் போலவே வட இந்தியாவிலும் பழைய கட்டைகளைப் போட்டுக் கொழுத்தும் வழக்கம் உண்டு. அதற்கு 'லோரி கொளுத்துவது’ என்ற பெயர் உண்டு. போகி அன்று, அதிகாலையில் 'நிலைப்பொங்கல்' கொண்டாடுவர். அதாவது, வீட்டின் முன்வாயில் நிலைக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பு ஒன்றைச் சாத்தி நிற்க வைத்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் முதலியன படைத்து தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர். இது நம் இல்லத்தில் உறையும் இல்லுறை தெய்வத்தை வணங்குவது என்கிறார்கள். நம் இல்லத்தில் தங்கியிருந்து நம் குடும்பத்தைக் காக்கும் தெய்வமே இல்லுறை தெய்வம். பெரும்பாலும் அந்த தெய்வம் நம் முன்னோர்களாகவோ அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். இந்த வழிபாட்டை வீட்டின் குடும்பத்தலைவியே நடத்துவார்.
இன்று நவநாகரிக காலத்தில் அனைவரும் போகி கொண்டாடும் வழக்கத்தைக் குறைத்துவருகிறோம். போகி என்பது தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பது என்பதுபோன்ற எண்ணம் நகரத்தில் நிலவுகிறது. உண்மையில் பழைமையான நம் எண்ணங்களை விட்டுவிட்டுப் புதிய நம்பிக்கைகளைச் சூடிக்கொள்வதுதான் போகி. எனவே தவறாமல் இந்த நாளில் அதிகாலையிலேயே நீராடி இறைவழிபாடு செய்து நம் இல்லுறை தெய்வத்தை வழிபடுவோம். நலமும் வளமும் சூழ அனைவருக்கும் போகிப்பண்டிகை நல்வாழ்த்துகள்.