தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது தேனி வீரபாண்டியில் நடக்கும் ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் திருவிழா. முல்லைப் பெரியாறு ஆற்றை ஒட்டியுள்ள இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஒரு வாரம் நடக்கும் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக் கடனைச் செலுத்தி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

நிகழாண்டு சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக ஏப்ரல் 19-ம் தேதி திருக்கம்பம் நடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 21 நாள்கள் விரதத்திற்குப் பின் நேற்று முதல் திருவிழா தொடங்கியது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கம்பம் நடப்பட்டது முதல் பக்தர்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முல்லைப் பெரியாற்றில் நீராடி தீச்சட்டி, ஆயிரங்கண்பானை, பால்குடம் மற்றும் காவடி ஆகியன எடுத்தும், அழகு குத்தியும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்தி வருகின்றனர். மேலும் மண் களையத்தில் புனித நீர் எடுத்து வந்து திருக்கம்பத்திற்கு ஊற்றியும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை தரிசனம் செய்கின்றனர்.
இன்று முத்து பல்லக்கிலும், அதனைத்தொடர்ந்து 11-ம் தேதி புஷ்பப் பல்லக்கிலும் அம்மன் பவனி வரும் நிகழ்வு நடைபெறும். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 12 -ம் தேதி நடைபெறும். 16 -ம் தேதி அம்மனுக்கு ஊர் பொங்கல் வைக்கப்பட்டுத் திருவிழா நிறைவு பெறும்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறையினரும், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து செய்துள்ளனர். மேலும் பக்தர்களின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தின் அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.