Published:Updated:

தைப்பொங்கல்: புகழ், இன்பம், அறிவு அருளும் ஞாயிறு வழிபாடு - பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல்

பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றும் முன்பாக வெல்லம் அல்லது மஞ்சளில் விநாயகரைப் பிடித்துவைத்து அதற்கு மலர் சமர்ப்பித்து, ‘நல்ல முறையில் பொங்கல் வழிபாடு நிகழ வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

தைப்பொங்கல்: புகழ், இன்பம், அறிவு அருளும் ஞாயிறு வழிபாடு - பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றும் முன்பாக வெல்லம் அல்லது மஞ்சளில் விநாயகரைப் பிடித்துவைத்து அதற்கு மலர் சமர்ப்பித்து, ‘நல்ல முறையில் பொங்கல் வழிபாடு நிகழ வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

Published:Updated:
பொங்கல்
இந்த உலகம் இயங்குவதற்கு முழுமுதற்காரணம் சூரிய பகவான். அவரே உலகில் உயிர்கள் வாழத் தேவையான வெப்பத்தை வழங்குகிறார். அந்த வெப்பத்தில் இருந்துதான் உணவைத் தயாரிக்கின்றன தாவரங்கள். உணவுப்பொருள்கள் விளைகின்றன. தட்ப வெப்பம் பாதுகாக்கப்படுகிறது. இப்படி அன்றாடம் நமக்குக் காட்சி கொடுத்து உலக உயிர்களை எல்லாம் வாழவைக்கும் கடவுள் சூரியன் என்றால் அது மிகை அல்ல.

அந்தக் காலத்தில் ஆறு விதமான மதங்கள் நம் பாரதத் தேசத்தில் இருந்தன. அவற்றில் ஒன்று, 'சௌரம்' எனப்படும் சூரிய வழிபாடு. இன்று கிராமத்தில் பெரியவர்கள் அதிகாலையில் எழுந்ததும் சூரியனைக் கண்டு வணங்குவதைப் பார்த்திருப்போம். சூரியனை வணங்கும்போது ஒருசிலர், 'சூரிய நாராயணா' என்றும் 'சங்கரா சங்கரா' என்றும் போற்றுவார்கள். இதன்பொருள் நாம் வணங்கும் மூலப் பரம்பொருள் எதுவாக இருந்தாலும் அது சூரியனாய் நமக்குக் காட்சிகொட்க்கிறது என்பதேயாகும்.

பொங்கல்
பொங்கல்

சூரியனை வைத்தே நாம் ஓர் ஆண்டை இரண்டாகப் பிரிக்கிறோம். ஒன்று தட்சிணாயினம் மற்றொன்று உத்திராயணம். தை மாதம் தொடங்கி ஆனி வரையிலான ஆறு மாதங்கள் உத்திராயணம். சூரியபகவானின் நகர்வு வடக்கு நோக்கி இருக்கும் காலம் இது. எனவே இந்தக் காலகட்டம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்பது நம்பிக்கை. உத்திராயண புண்ணியகாலத்தில் செய்யும் வழிபாடுகள் பெரும்பலன் அளிப்பவை. எனவேதான் உத்திராயணத்தின் முதல் நாளான தைத் திங்கள் அன்று பொங்கல் வைத்து அந்த சூரியபகவானை வழிபடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள்.

சூரிய வழிபாட்டின் சிறப்புகள்

ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?

வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?

மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது?

உயிர் எவன் தருகின்றான்? புகழ் எவன் தருகின்றான்?

புகழ் எவனுக் குரியது? அறிவு எதுபோல் சுடரும்?

அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?

என்று பல்வேறு கேள்விகளை எழுப்பும் பாரதியார் அதற்கு விடையாக ‘ஞாயிறு, அது நன்று’ என்று முடிக்கிறார். சூரியனை முழுமுதற்கடவுளாகக் காண்கிறார் பாரதியார். அப்படிப் பட்ட முழுமுதற்கடவுளான ஞாயிற்றுக்கு நன்றி சொல்லும் திருநாள் தைப்பொங்கல்.

பொங்கல்
பொங்கல்

தைப் பொங்கல் அன்று ஞாயிற்றை வழிபடுவதன் மூலம் நமக்கு என்னென்ன கிடைக்கும் என்பதும் இந்தப் பாடலிலேயே சூட்சுமமாகச் சொல்லப்பட்டுள்ளது. சூரியன் தீராத இளமையுடையவன். எனவே அவனை வணங்கினால் இளமை கிடைக்கும். புகழ் கிடைக்கும். இன்பம் கிடைக்கும். அறிவுத் திருக்கோயிலாக விளங்கிச் சுடர்விடும் அவன் பிரகாசிக்கும் அறிவை வழங்குவான் என்று வேதத்தின் சாரத்தைப் பிழிந்துதருகிறார் பாரதியார். இப்படி நமக்குத் தேவையான அனைத்தையும் சூரியபகவானை வணங்கிப் பெற்றுக்கொள்ள உகந்த தினம் தைப்பொங்கல்.

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுவது எப்படி?

பொங்கல் பானையைக் கிழக்கு நோக்கி வைத்து, அதை மஞ்சள் மற்றும் இஞ்சிக் கொத்துகள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். பிறகு அடுப்பில் ஏற்றிப் பொங்கல் வைக்க வேண்டும். பிறகு புத்தரிசியை இட்டுப் பொங்கலிட வேண்டும்.

பொங்கல் பானையை அடுப்பில் ஏற்றும் முன்பாக வெல்லம் அல்லது மஞ்சளில் விநாயகரைப் பிடித்துவைத்து அதற்கு மலர் சமர்ப்பித்து, ‘நல்ல முறையில் பொங்கல் வழிபாடு நிகழ வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

அந்தக் காலத்தில் வீட்டின் வாசலில் அடுப்பு மூட்டிப் பொங்கல் செய்வது வழக்கம். தற்போது பல வீடுகளில் வீட்டுக்கு உள்ளே சமையல் அறையில் கேஸ் ஸ்டவில் பொங்கல் வைத்துவிடுகின்றனர். அப்படியே பொங்கல் செய்தாலும் சூரியனுக்கு வீட்டுக்கு வெளியில் சூரிய ஒளி விழும் இடத்தில்தான் படையல் போட வேண்டும். படையில் இடும் இடத்திலும் சூரிய சந்திரர்களை வரைந்து ( வடக்குப் பக்கம் சூரியன், தெற்குப் பக்கம் சந்திரன்) அந்த இடத்தில்தான் பொங்கல் பானையை வைத்து வழிபட வேண்டும்.

பிறகு வீட்டுக்குள் சென்று வழக்கமான நம் பூஜை அறையில் அதே பொங்கல் பானையை வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். இந்த நாளில் குறைந்தது 11 முறையாவது சூரிய காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட வேண்டியது அவசியம்.
ஸ்ரீசூரியன் காயத்ரி
ஸ்ரீசூரியன் காயத்ரி

அழகு தமிழில் அமைந்த கீழ்க்கண்ட சூரிய துதியையும் சொல்லி வழிபடலாம்.

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை

நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

பொங்கல் வைக்க நல்ல நேரம்

2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ம் தேதி... தை முதல் நாள் பொங்கல்பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நாளில் காலை 7.30 மணி முதல் 8.30க்குள் பொங்கல் வைத்து வழிபடலாம். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் 7 மணி முதல் 8 மணி வரை சுக்கிர ஹோரை. 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஹோரை. எனவே இந்த இரண்டு ஹோரைகளும் சேர்ந்தார்ப்போல 7.30 மணி முதல் 8.30 மணிக்குள் பொங்கல் வைத்தால் சுக்கிரனின் அருளால் சுகமான வாழ்வும் புதபகவானின் அருளால் அறிவுப் பெருக்கமும் உண்டாகும்.
பொங்கல்
பொங்கல்
அதேபோன்று பகல் 11 மணி முதல் - 12 மணி வரை குருஹோரையிலும் பொங்கல் வைத்து வழிபடலாம். இதன் மூலம் பொன்பொருள் சேர்க்கை, தானிய சேர்க்கை ஆகியன நிறைந்துவிளங்கும் என்பது நம்பிக்கை.

பொங்கல் பொங்கும்போது, ‘பொங்கலோ பொங்கல்’ என்று மங்கல் முழக்கம் இடும் வழக்கம் உண்டு. இன்றைக்கு பலர் இந்த முழக்கம் இடுவதை விட்டுவிடுகிறார்கள். ஆனால் இது மிகவும் முக்கியம். வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து, ‘ பொங்கலோ பொங்கல்’ என்று சத்தமிட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நேர்மறையான அதிர்வுகள் நம் இல்லத்தில் நிறையும். எதிர்மறையான சிந்தனைகள் விலகி ஓடும். அதுவே தைத் திருநாளை சிறந்த திருநாளாக மாற்றும்.