பங்குனி... தமிழ் ஆண்டின் கடைசி மாதம். இந்த மாதம் முழுமையுமே இறைவழிபாட்டுக்கு உகந்தது என்றாலும் அதில் உத்திர நட்சத்திர தினம் மிகவும் சிறப்பினை உடையது. பன்னிரண்டாவது மாதத்தில் பன்னிரண்டாவது நட்சத்திரமாக வரும் உத்திரம் நட்சத்திரம் மிகவும் விசேஷமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம், பரமேஸ்வரம் பார்வதி திருக்கல்யாணம், வள்ளிப்பிராட்டியின் அவதார தினம், சுவாமி ஐயப்பனின் அவதார தினம் எனப் பல்வேறு சிறப்புகளை உடையது பங்குனி உத்திர தினம். இந்த நாளில்தான் சுந்தர மூர்த்தி நாயனாருக்கு இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்பது ஐதிகம்.
இப்படிப் பல்வேறு சிறப்புகளை உடைய பங்குனி உத்திரத் திருநாள் அனைத்துக் கோயில்களிலும் சிறப்புடன் கொண்டாடப்படும். பல ஆலயங்களில் பங்குனி உத்திரத்தை ஒட்டி பிரம்மோற்சவம் நடைபெறும். முருகப்பெருமானுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்தும் காவடி எடுத்தும் அலகு குத்தியும் வழிபாடு செய்வார்கள்.

இத்தகைய சிறப்புகளை உடைய பங்குனி உத்திரம் 'இந்த ஆண்டு என்று கொண்டாடப்பட வேண்டும்' என்னும் கேள்வி பக்தர்களிடையே உருவாகியுள்ளது. காரணம் சில நாள்காட்டிகளில் ஏப்ரல் 5-ம் தேதியே பங்குனி உத்திரம் என்று போட்டிருக்கிறது. ஆனால் சில ஆலயங்களில் ஏப்ரல் 4 -ம் தேதியே பங்குனி உத்திரம் கொண்டாடினர். எனவே பங்குனி உத்திரம் எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்ற சந்தேகம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இதுகுறித்து மகாமகோபாத்யாய சேஷாத்ரி நாத சாஸ்திரிகளிடம் கேட்டோம்.
"பங்குனி உத்திரத் திருவிழா மட்டுமல்ல இன்றைக்குப் பெரும்பாலான திருவிழாக்கள் எப்போது என்னும் கேள்வி பலரிடையே எழுந்துவிடுகிறது. நாள்காட்டிகளில் ஒன்றும் பஞ்சாங்கங்களின் ஒன்றும் குறிப்பிட்டிருப்பதால் பொதுமக்களுக்கு இந்தக் குழப்பம் வருகிறது. ஆனால் திருவிழா அல்லது விரதம் என எதுவாக இருந்தாலும் அதன் தாத்பர்யம் என்ன என்பதை முதலில் தெரிந்துகொண்டால் போதும். எந்த நாளில் கொண்டாட வேண்டும் என்கிற குழப்பம் வராது.

பொதுவாக நம் தமிழகத்தில் விழாக்கள் அனைத்துமே பௌர்ணமி தினங்களில்தான் வரும். சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் எனக் குறிப்பிட்ட நட்சத்திரமும் பௌர்ணமியும் சேரும் காலமே நாம் அந்த விரதத்தை அல்லது உற்சவத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள் ஆகும்
இந்த மாதம் உத்திர நட்சத்திரம் நேற்று ( 4 ம் தேதி) காலை 10.17க்குத் தொடங்கி இன்று (5 ம் தேதி ) பகல் 11.58 வரை நீடிக்கிறது. எனவே பலரும் நேற்றே (4 ம் தேதி) பங்குனி உத்திரம் என்று கொண்டாடினர். சில சிவாலயங்களிலும் இன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.
ஆனால் பௌர்ணமியும் இணைந்துவர வேண்டும் என்கிற அமைப்பையும் கணக்கிட்டால் 4-ம் தேதி முழுவதும் சதுர்த்தசி மட்டுமே உள்ளது. 5-ம் தேதி தான் பௌர்ணமி வருகிறது. பௌர்ணமியோடு சேர்த்து உத்திர நட்சத்திரமும் அந்த நாளில் சில நாழிகை வருவதால் 5-ம் தேதியான இன்றே பங்குனி உத்திரம் கொண்டாடுவதே சிறப்பு. ஆலயங்களில் அவர்கள் கொண்டாடும் முறைப்படிக் கொண்டாடினாலும் வீட்டில் நாம் வழிபாடு செய்யும்போது உரிய முறைப்படி பௌர்ணமியோடு கூடிய உத்திர நட்சத்திர நாளான 5-ம் தேதி கொண்டாடுவதே சிறப்பு." என்றார் சாஸ்திரிகள்.