Published:Updated:

“அதிகாரிகள் கொண்டாட்டம்… மக்கள் திண்டாட்டம்!” சீர்படுமா செங்கல்பட்டு தசரா?

“அதிகாரிகள் கொண்டாட்டம்…  மக்கள் திண்டாட்டம்!” சீர்படுமா செங்கல்பட்டு தசரா?
“அதிகாரிகள் கொண்டாட்டம்… மக்கள் திண்டாட்டம்!” சீர்படுமா செங்கல்பட்டு தசரா?

“அதிகாரிகள் கொண்டாட்டம்… மக்கள் திண்டாட்டம்!” சீர்படுமா செங்கல்பட்டு தசரா?

மைசூர் தசராவிற்கு அடுத்து மிகப்பழைமையான பாரம்பர்யம் கொண்டது செங்கல்பட்டு தசரா. மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் செங்கல்பட்டு தசரா விழாவில் லட்சுமி பூஜை, பார்வதி பூஜை, சரஸ்வதி பூஜை என நவராத்தியின் ஒன்பது நாள்களும் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். சுற்றுவடடாரங்களைச் சேர்ந்த பகுதிகளில் இருந்து அம்மன் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, பத்தாவது நாளான தசமி அன்று சூரனை அம்மன் வதம்செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பக்தர்கள், கரகங்களை எடுத்துவந்து சின்னக்கடை பகுதியில் உள்ள கோவிலில் நிறுத்துவார்கள். ராமபாளையம் பகுதியில் உள்ள வன்னி மரம் அருகே சூரவதம் நடைபெறும். தசரா தினத்தன்று சுமார் ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவார்கள். தசரா விழா வரை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் செங்கல்பட்டுக்கு வருகை தருவார்கள். 

ராட்டினம், சறுக்கு விளையாட்டு, பந்து எறிதல், பேய்வீடு என மக்களைக் கவரும் வகையிலான பல சிறப்பு அம்சங்கள் இடம்பெறுவது வழக்கம். தரை விரிப்பு கடைகள், தள்ளுவண்டி கடைகள் என தெருவோரங்களில் கடைகள் நிறைந்து, பத்துநாள்களும் அந்தப் பகுதி முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், ஆபரணங்கள் போன்றவற்றை இங்கு வரும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வார்கள்.

நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு வாடகைக்கு கடைகளை எடுக்கும் வியாபாரிகள், தாங்கள் செலுத்தும் கட்டணத் தொகைக்கு மேல், பொருட்களின் விலையை வைத்து விற்பனை செய்வதால், தசராவிற்காக வரும் மக்கள், பொருட்களை அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

ராஜா என்பவர் பேசும்போது, “தீயணைப்பு வாகனம் மற்றும் மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தை தசரா பகுதியில் நிறுத்த வேண்டும். கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேட்டில் விழா நடைபெறுவதால், அங்கு வரும் மக்களுக்கு டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க, சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும்.  சுத்தமான குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். பெண்கள் தங்களின் இயற்கை உபாதைகளைக் கழிக்க ஏதுவாக தற்காலிகமாக மொபைல் டாய்லெட்டுகளை நகராட்சி சார்பில் ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால், நகராட்சி, பொதுப்பணித்துறை என எந்தத் துறையின் அதிகாரிகளும் அதுபற்றியெல்லாம் கண்டுகொள்வதேயில்லை

ராட்டினத்திற்கான கட்டணம் மற்றும் அனைத்துப் பொருட்களுமே அதிகமாக உள்ளது.  எதற்கும் ரசீது கிடையாது. இதுபோன்ற செயல்பாடுகளால், ஆண்டுதோறும் தசராவைக் காணவரும் மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படுகிறது. தவிர, கடைகளுக்கான மின்சாரம் திருடப்படுகிறது. அதை மின்வாரியம் கண்டுகொள்வதே இல்லை. போதிய பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தித் தருவில்லை. முக்கியமான விஷயமாக, லட்சக்கணக்கானோர் கூடும் இடத்தில் போதிய அளவில் காவலர்கள் இருப்பதில்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு ஏதுவாக போதிய பெண் காவலர்களை நியமிக்க வேண்டும். இதுகுறித்து பல வருடங்களாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தபோதிலும், எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு நடக்கும் முறைகேடுகளை அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை” என்றார்.

கடைவைத்திருப்பவர்கள் தரப்பில் பேசியபோது, "சிறிய அளவு கடைகளுக்கே அதிகக் கட்டணம் வசூல் செய்யப்படுவதால், நாங்கள் பொருட்களில் விலையை அதிகரித்து விற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் அதிகாரிகளையும் 'சரிக்கட்ட'  வேண்டி இருக்கிறது. எங்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுக்கப்படுவதில்லை” என புலம்புகின்றனர். இதனால், ஆண்டுதோறும் தசரா பண்டிகையின் போது கடைகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?

அடுத்த கட்டுரைக்கு